Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 03 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
வெள்ளநீர் தலைக்கு மேல் நின்றாலும் வாக்காளர் அட்டையை தலைக்கு மேல் பிடித்தபடி நிற்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்காளர் தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்வு, நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று (02) காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“வெள்ள நீர் தலைக்கு மேல் நின்றாலும் வாக்காளர் அட்டையை தலைக்கு மேல் பிடித்தபடி நிற்க வேண்டும். சிலவேளைகளில் இறந்தவர் ஒருவருடைய சடலத்தை அடக்கம் செய்வதற்குக் கூட அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிவதற்கு வாக்காளர் இடாப்பைப் பார்க்கிறார்கள். ஊடகங்கள் ஊடாக வெள்ள நிவாரணம் தொடர்பான விடயங்கள் செய்திகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது, காண்பிக்கப்படுகிறது.
ஆயினும், வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வது தொடர்பான விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.
நாங்கள் ஊடகங்களுக்கு மட்டும் விரலை நீட்ட முடியாது. எமது உத்தியோகத்தர்கள் மற்றும் பிரஜைகள் இந்த விடயத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
இங்கு வருகை தந்துள்ளவர்களை எடுத்துக் கொண்டால் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், மீனவ சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கு கவனம் செலுத்தாதவர்களாக உள்ளார்கள். காரணம் தொழில் காரணமாக வாக்களிப்பு தினத்தில் இவர்கள் தமது பிரதேசங்களில் இருப்பதில்லை. நீங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
எமது நாட்டில் 52 சதவீதம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். அப்படியானால் நாடாளுமன்றில் குறைந்தது 120 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆயினும், 13 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே தற்போது உள்ளனர். எமது வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 40 சதவீதத்தினர் உள்ளனர். அப்படியானால் நாடாளுமன்றில் இளைஞர்கள் 90 பேர்கள் இருக்க வேண்டும். ஆயினும், 14 பேரே உள்ளனர். எமது சமூகம் நாடாளுமன்றத்துக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை தெரிவு செய்வதில் அதிகம் வேறுபாட்டை காட்டியுள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. அங்கவீனர்களினதும் நிலையும் இதுவேயாகும்.
எமது அரசியலமைப்பு மற்றும் எமது நாட்டின் தேர்தல் சட்டதிட்டங்களின்படி வாக்காளர் இடாப்பில் பெயர் இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளராக இருந்தாலும் வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாவிட்டால் வாக்களிக்க முடியாது. நாங்கள் தேர்தல்கள் ஆணைக் குழு என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புவது வாக்காளர் இடாப்பில் பெயர்கiளை பதிவு செய்யாமலிருப்பது ஒருவரது தவறாக இருந்த போதிலும் கூட அதற்கு இன்னொரு வகையில் அரசாங்க ஊழியர்களும் அந்த தவறினை இழைக்கின்றார்கள் என்ற கருத்தினை நாங்கள் கொண்டுள்ளோம். எனவே, தகுதியுள்ள எல்லோரது பெயர்களையும் வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான பொறுப்பு எங்களுக்குள்ளது.
அதேபோன்று தகைமையற்ற எந்தவொரு நபரின் பெயரும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படக் கூடாது. அரசாங்க உத்தியோகத்தர்களும் பிரஜைகளும் சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் இணைந்தால் இந்த பணியை சரியாக நிறைவேற்ற முடியும். இந்த விடயத்தில் அரசியல்வாதிகளுக்கும் பாரிய பங்களிப்பு உண்டு” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago