2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தமிழ் பேசும் மக்களுக்காக இளையோர் சமூகத்தை அணிதிரளுமாறு அழைப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெறுவதற்காக இளையோர் சமூகம் அணி திரளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ராம் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழர்களின் பாராம்பரியக் கலாசார நிகழ்வுகளில் ஒன்றான சல்லிக்கட்டை நடத்தக்கூடாது எனத் தடைகள் விதிக்கப்பட்டபோது, அத்தடைகளை உடைத்தெறிவதற்காக  தமிழ்நாட்டிலும் எமது இலங்கை உட்பட உலகத்தில் உள்ள தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

உண்மையில், தமிழர்களின் கலாசாரத்துக்காக இளைஞர்கள் அனைவரும் எவ்வித பேதமுமின்றி ஒன்றிணைந்தமையை பாராட்ட வேண்டும் என்பதோடு, நாளைய தலைவர்களாகப் போகும் இளைஞர்களின் ஒற்றுமையையும் பறை சாற்றி நிற்கின்றது' என்றார்.

அவ்வாறிருக்கையில், தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இளைஞர் சமூகம் இதுவரையில் ஏன் ஒன்றிணையவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது.

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் எத்தனையோ பிரச்சினைகளை இலங்கையில்; எதிர்கொண்டு வருகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்தார்கள்.  

மலையகத் தமிழ் பேசும் மக்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களும் மிக மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றார்கள்.  

எனவே, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள்  தீர்க்கப்பட வேண்டும் என்பதுடன், அரசியலமைப்பு ரீதியான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் நீடித்து நிலைப்பதற்காக ஒன்றிணைய வேண்டும்.

இவ்வாறு ஒன்றிணைவதற்கு தற்போது நல்ல சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தருணத்தை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்தி ஒருமித்த குரலாக உருவெடுப்பதற்கு அணிதிரளுமாறு கோருகின்றேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .