2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கோட்டாவை அதிகரிப்பதற்கு தென்கொரியா எதிர்பார்ப்பு

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பது குறித்து தனது நாடு கவனத்தில் கொள்ளுமென, தென்கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை தலைவர் போராசிரியர் பார்க் யங் பம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (28) தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, விவசாயத்துறையில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஜனாதிபதி வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் விவசாயத்துறையில் உள்ள ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியமைக்காக தென்கொரிய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

அத்துடன், கொரியாவில் 25,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் செய்வதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். இலங்கைக்கான வருடாந்த வேலைவாய்ப்பு கோட்டா தற்போது 6,000 எனத் தெரிவித்த அவர், கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பும் 16 நாடுகளில் இலங்கை தற்போது 5ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர்களின் செயலாற்றுகை மற்றும் வினைத்திறன் குறித்து கொரிய தொழில் வழங்குநர்கள் திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் பார்க், விவசாயத்துறையில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புக் கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மையில் கொரியாவில் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீயின்போது தனது உயிரைப் பணயம் வைத்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய இலங்கை ஊழியரின் செயல் காரணமாக கொரியாவில் இலங்கை ஊழியர்கள் பிரபல்யம் பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரியா அடைந்துள்ள துரித அபிவிருத்தி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் தலதா அத்துகோரல, கொரிய குடியரசின் தூதுவர் வொன் சாம் சேன்ங் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ராஜ் ஒபேசேக்கர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .