2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இலவச சுகாதாரம், கல்விக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதி, அடுத்த வரவு - செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திங்கட்கிழமை (12) தெரிவித்தார்.

தற்போது இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்விக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ள அதேநேரம், நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையைப்போன்று நாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் வழங்குவது புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீர்கொழும்பில் பொது வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

200 மில்லியன் ரூபாய் செலவில் சகல வசதிகளுடன் இந்த புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொறியியலாளர்களின் திறமையை வெளிப்படுத்தி 50 நாட்களில் இக்கருத்திட்டம் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, 

2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் நீர்கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேச வைத்தியசாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கட்டடங்கள் முறையான நியமங்களைக் கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் இந்த புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைப்பதன் மூலம் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகளில் மாகாண சபையும் அரசாங்கமும் பிரிந்து செயற்பட முடியாது. அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் சகல தரப்பினரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். 

நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்து ஜனாதிபதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது சுகதுக்கங்களையும் விசாரித்து அறிந்ததுடன், அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினார். 

சுகாதார போசாக்கு சுதேச வைத்தியத் துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன், முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ பிள்ளை, பிரதி அமைச்சர் நிமல் லன்சா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால, வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ரணசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .