2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அல்- அக்ஸா வாக்கெடுப்பில் இலங்கையின் நிலைப்பாட்டுக்கு அஸ்வர் எதிர்ப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

முஸ்லிம்களும் யூதர்களும் புனித தலமாகக் கருதும் அல்-அக்ஸா தொடர்பில், யுனெஸ்கோ அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், இலங்கை மேற்கொண்ட முடிவு குறித்து, முஸ்லிம் விவகார முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்.எம்.பெரேரா நிலையத்தில் கூட்டு எதிர்க்கட்சியில் இன்று புதன்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்தார்.

"ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள அல்-அக்ஸாவானது, முஸ்லிம்களின் புனித வணக்கஸ்தலங்களில் ஒன்று. இது தொடர்பிலான யுத்தம், இஸ்ரவேல், பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவருகின்றது. இதற்கிடையில், அல்- அக்ஸா பிரச்சினை தொடர்பிலான வாக்கெடுப்பு ஒன்று, யுனெஸ்கோ நிறுவனத்தினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டது.

"இதில் இலங்கை, வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தது. இதனை முற்றாக எதிர்க்கின்றோம். இந்த வாக்களிப்பானது, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அணிசேராக் கொள்கைக்கும், மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைக்கும், காலால் உதைப்பதைப் போன்றது. இதனை முற்றாக நாங்கள் எதிர்க்கின்றோம்" என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'கடந்த அரசாங்கக் காலத்திலும், இது போன்றதொரு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு முன்னாள் இலங்கை சார்பாகச் சென்ற வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் பதவி விலக்கப்பட்டார். கடந்த காலங்களில், முன்னாள் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களைத் தான் கள்வர்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். தற்காலத்தில், தங்களுடைய அரசாங்கத்தில் உள்ளவர்களையே முஸ்லிம் அமைச்சர்களையே கள்வர்கள் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்குக் காரணம், அவர்கள் முஸ்லிம் என்பதாலா?" எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .