2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலை அவசியமானது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பொறுத்துப் பொறுத்து பார்த்து களைத்துப்போன தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

சிறுவர் விவகார அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (13) மகசீன் சிறைச்சாலைக்கு விஐயம் மேற்கொண்டு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'பல ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டிலும் சந்தேகத்தின் பேரிலும் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் சிறைச்சாலைகளில் வாடும் அவலம் நீடித்து வருகின்றது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தமக்கு விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்து தமிழ் அரசியல் கைதிகள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னராவது தமக்கு விடுதலை கிடைக்கும் என்று எண்ணியிருந்த கைதிகள் தற்போது நம்பிக்கை இழந்த நிலையில் சாகும் வரையிலான போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை கவலையளிக்கும் விடயமாகும்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கூடி கைதிகளின் விவகாரம் குறித்து ஆராய்ந்த போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அத்துடன் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியிருப்பதை நான் நிராகரிக்கின்றேன். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த என்னாலான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுப்பேன் என உறுதி கூறுகின்றேன்' என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .