2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அத்தியாவசிப்பொருட்களின் விலைக்குறைப்பு வரவேற்கத்தக்கது: சி.வை.பி ராம்

Kanagaraj   / 2015 நவம்பர் 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முற்று முழுதாக பொதுமக்களின் வாழ்வாதரத்தை கருத்திற்கொண்டுள்ள புதிய வரவு -செலவுத்திட்டத்தில் 11 அத்தியாவசிப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் ராம்நற்பணி மன்றத்தின் தலைவருமான  சி.வை.பி.ராம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓர் அங்கமே தானாக முன்வந்து மக்களின் வாழ்வாதரத்தை கருத்திலெடுத்து மண்ணெண்ணெய் சமையல் எரிவாயு, பருப்பு, கடலை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் பால்மா குழந்தைகளுக்கான பால், டின் மீன் நெத்தலி கருவாடு ஆகிய 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக்  குறைப்புச்செய்துள்ளது.  கடந்த கால வரவு- செலவுத்திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவ்வாறானதொரு செயற்பாடு முதற்தடவையாக இடம்பெற்றுள்ளது. இவ்வாறான விலைக்குறைப்பு தீர்மானமானது வரவேற்கப்படவேண்டியதொன்றாகும்.

மேலும் அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார இலக்காக கிராமிய அபிவிருத்தி காணப்படுகின்றமையும் சிறப்பானதொரு விடயமாகின்றது. கடந்த காலங்களில் நகர்புற அபிவிருத்திகள், முதலீடுகளை மட்டுமே மையப்படுத்தி வரவு செலவுத்திட்டங்கள் அமைந்திருந்தன.

இந்த நாட்டில் பொருளாதரத்தில்செல்வாக்குச் செலுத்தும் கிராமங்களில் அபிவிருத்தி உட்கட்டுமானம் போன்ற துறைகளில் அதீத கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. இதனால் கிராம மக்களுக்கும், நகர மக்களுக்குமிடையில் வருமான இடைவெளியொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கிராமிய பொருளாதாரத்திற்கு முக்கியத்துவமளித்து 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதீத தேவைப்பாடுகள் காணப்படும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கைத்தொழில் வலயங்கள் அமைக்கப்படுவதற்கான திட்டங்கள் காணப்படுகின்றன. விசேடமாக பின்தங்கிய நிலையில் காணப்படும் தோட்டப்புறங்களை கட்டியெழுப்புதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது.

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டமானது அனைத்து மக்களையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியல் பங்களிப்புச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தின் பால் ஒன்றுபட்டு எமது நாட்டில் இதுவரையில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழியை உருவாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .