2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ரோபேரியில் தங்கம் கொள்ளை: பொலிஸ் சார்ஜன்ட் சிக்கினார்

Editorial   / 2025 மார்ச் 26 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

மடுசீம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரோபேரி தோட்டத்தில் எலமான பிரிவில் உள்ள, வீடொன்றில் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரிவு குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட இந்த பொலிஸ் சார்ஜன்ட் பசறை நீதவான் நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (25) ஆஜர் செய்யப்பட்டார். அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. நகைகளை பறிகொடுத்த உரிமையாளர் நகை அடகு பிடிப்பவர். அந்த தோட்டத்தைச் சேர்ந்த பலரும், நகைகளை அவரிடம் அடகு வைத்து பணத்தை பெற்று சென்றுள்ளமை விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

 அந்த நகைகளை கொள்ளையடிப்பதற்காக, சம்பவ தினம் இரவு, ஐவரடங்கிய குழுவொன்று, அவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளது.  அக்குழுவில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் “ நாங்கள்… பொலிஸ், வீட்டை சோதனைக்கு உட்படுத்த வேட்டு எனக் கூறி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் உரிமையாளரை அச்சுறுத்தி, தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளமை விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின்னர், வீட்டின் உரிமையாளரையும், அவருடைய மகனையும் சந்தேகநபர்கள் வந்த வேனில் ஏற்றிக்கொண்டு, சிறிது தூரம் சென்றதன் பின்னர், வீதியிலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட், சாதாரண உடையில் வந்துள்ளார். எனினும், பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதிலிருந்து முகத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்ட மகன், முகப்புத்தகத்தை (பேஸ்புக்) பக்கத்திற்கு சென்று, அவரை இனங்கண்டு, தந்தையுடன் சென்று, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்தேகநபரான பொலிஸ் சார்ஜனின் கையடக்க தொலைபேசி, மூன்றாவது நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த தொலைபேசியின் ஊடாக, உள்சென்ற, வெளிச்சென்று அழைப்புகள் தொடர்பில் விசாரணைகளை மேற்​கொண்டதன் பின்னர் பல தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை பிரிவு குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X