Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினதும், முதன்மையானதும் உயரியதுமான பிறப்புக் கடமை யாதெனில், தங்களது வாழ்க்கைக் காலத்தினுள், வளமான வழித்தோன்றல் ஒன்றையேனும், உருவாக்கிவிட வேண்டுமென்பதே.
விலங்குகளில் சொந்த பந்தம் என்கின்ற சூட்சுமங்கள் கடந்து, உயிர் உற்பத்தி இயல்பாகவே இடம்பெறுகிறது. ஆனால், மனித உற்பத்தி மட்டும் அற்ப ஆசைகளால், வளமற்ற மழுங்கிய சந்ததிகளையும் உருவாக்கும் போக்கை கொண்டிருக்கிறது.
இப்போக்கானது நாளடைவில் இயற்கையான நோய்களைக்கூட எதிர்க்க முடியாததும், புத்தியில் கூர்மையற்ற பரம்பரையையுமே பிரசவிக்கும். நீண்டகால நோக்கில் நலிவடைந்த சமூகத்தை உருவாக்கி, மனிதனின் இருப்பையும் கேள்விக் குறியாக்கிவிடும்.
புதிய மனித சந்ததி உருவாக்கத்தின், நாகரிக உயிரியற் பிணைப்பாக திருமணங்கள் அமைகின்றன. இணைகின்ற இரு மனங்களும் உள்ளத்தால் ஒத்தமைவதோடு, பரம்பரையலகுப் பல்வகைமையையும் கொண்டமைந்தால், வளமான வழித்தோன்றல்களுக்கும் இல்லையெனில் வளமற்ற எச்சங்களுக்கும் வழிகோலும்.
இரத்த உறவு திருமணங்கள்: தகவல் திரட்டு
திருமணம்: குடும்ப ஒப்பந்தம்
சமூக, சமய, சம்பிரதாய மற்றும் சட்ட அடிப்படையில், பொதுவாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் குடும்பம் எனும் அடிப்படை அலகை அமைத்து, அதனூடக பாலுறவு, இனப்பெருக்கம் மற்றும் பொருளாதாரம் ஆகிய வாழ்வியல் வளங்களை அடைந்து கொள்வதற்கான, வாழ்க்கையின் இல்லற ஒப்பந்தமே திருமணமாகும்.
உலகளவில், திருமணமானது பொதுமைப்பாடான ஆண்-பெண் ஒழுக்கமுறை பிணைப்பாக இருக்கின்றபோதும், வௌ;வேறு இனப்பண்பாட்டுக் குழுக்களிடையே வெவ்வேறு விதமான திருமண விதிமுறைகளும் சம்பிரதாயங்களும் பின்பற்றப்படுகின்றன.
இரத்த உறவுத் திருமணங்கள்
குறிப்பிட்ட குழும நலன்களான, குடும்பச் சொத்துப் பாதுகாப்பு, வாழ்விட அருகாமை, கலாசார வாழ்க்கைத்துணை, குடும்ப உறவு கட்டமைப்பும் வலுப்படுத்தலும், நிலைத்து நிற்கக்கூடிய திருமண ஸ்திரத்தன்மை, மாமி-மருமகள் நல்லுறவு, பெண் சுயவுரிமை போன்ற வாழ்வியல் விடயங்களை மாத்திரம் முன்னிலைப்படுத்துகிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பரம்பரை சுகாதார பிரச்சினைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பதற்காக, நெருங்கிய உறவினர்களுக்கிடையில் நிகழும் திருமணமாகும். இத்திருமண பந்தத்தில் ஏனைய உறவுத் திருமணங்களை விடவும் பரம்பரை நோய்த்தாக்க வீதம் ஒப்பீட்டளவில் அதிகமாகவிருக்கும்.
கலப்புத் திருமணங்கள்
பரம்பரையலகு பல்வகைமையில், பரந்துப்பட்ட வேறுபாடுடைய மூதாதையரைக் கொண்ட, நெருங்கிய இரத்த உறவினர்கள் அல்லாத ஆண்-பெண்ணுக்கிடையில் நிகழும் திருமண உறவாகும்.
பரம்பரையலகு என்பது யாது?
ஒவ்வொரு மனிதனின் உடல் உருவவியலுக்குரிய செய்திகளை கொண்டிருப்பதும், அச்செய்திகளை அடுத்தடுத்த சந்ததிக்கும் காவிச் செல்கின்றதுமான தனித்துவக் கட்டமைப்புக்கள். உதாரணமாக ஒரு மனிதனுடைய கண்ணிறம், இரத்தவகை மற்றும் உயரம் என்பவற்றுக்கு வெவ்வேறு வகையான பரம்பரை அலகுகள் பொறுப்பாகவிருக்கும்.
ஆயிரக்கணக்கான இவ்வலகுகள், 22 சோடி தன்னிறமூர்த்தம் மற்றும் 1 சோடி இலிங்க நிறமூர்த்தம் எனப்படும் கட்டமைப்புக்குள் சோடி சோடியாக சேமித்து வைக்கப்படுவதோடு, இச்சோடிகளின் ஒவ்வொரு பிரதிகளும் தாய் மற்றும் தந்தையிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.
சோடிகளில், பிரதிகள் இரண்டும் ஆட்சியுடையவையாக(AA) அல்லது பின்னடைவானவையாக(aa) அல்லது ஒன்று ஆட்சியுடையதாகவும் மற்றையது பின்னடைவானதாகவும்(Aa) இருக்கும். (AA, Aa, aa எல்லா சோடிகளிலும் ஆங்கில பெரிய எழுத்து A-ஆட்சியையும், சிறிய எழுத்து a-பின்னடைவையும் குறிக்கும்)
பரம்பரையலகு நோய்கள் என்றால் என்ன?
பரம்பரையலகுகளில் ஏற்படுத்தப்படும் விகாரங்கள் அல்லது மாற்றங்களின் மூலம், அவற்றில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் மாற்றப்படுவதனால், அச்செய்திகளுக்குரிய மனித இயல்புகளும் பிறழ்வுகளாக மாற்றமடையும். இப்பிறழ்வுகளில் சில, குறிப்பிட்ட நபரை மாத்திரம் பாதிப்பனவாகவும், இன்னும் சில அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படக்கூடியவையாகவும் அமைகின்றன.
பரம்பரையலகு நோய்கள்: காவிகள் எனப்படுவோர் யார்?
பரம்பரையலகு நோய்கள்: ஆட்சியான தன்மூர்த்தப் பிறழ்வு
பரம்பரையலகின் ஆட்சியான தனிப்பிரதியொன்றில் நிகழும் விகாரமாகும். பொதுவாக குறைபாட்டுக் குழந்தைகளின் பெற்றோரில், எவரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அவர்களில் நோய்த்தாக்கங்கள்; சிலவேளைகளில் வெளித்தெரிவதுமில்லை. இப்பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு நோய் கடத்தப்படும் சந்தர்ப்பம் 50 வீதமாகவிருக்கும்.
பல்சிறுநீரக கட்டிநோய் (Polycystic Kidney Disease), பரம்பரை கொலஸ்ட்ரோல் நோய் (Familial Hypercholestrolemia), பரம்பரை தற்குருதிச்சோகை (Hereditary Spherocytosis) போன்றவை ஆட்சியான தன்மூர்த்தப் பிறழ்வுகளாகும்.
பரம்பரையலகு நோய்கள்: பின்னடைவான தன்மூர்த்தப் பிறழ்வு
பரம்பரையலகின்; பின்னடைவான இரு பிரதிகளும் மாற்றமுறுவதினால்; நிகழும். நோய்த்தாக்கமுற்ற பெற்றோரினால் பிள்ளைகளுக்கு 100வீத தாக்கமும் காவிப் பெற்றோரினால் ஒவ்வொரு கருத்தரிப்பிலும் பிள்ளைகளுக்கான நோய்த் தாக்கம் 25 வீதமாகவுமிருக்கும். இப்பாதிப்புக்களாக அரிவாளுரு குருதிச்சோகை (Sickle Cell Anaemia), பீனைல் கீற்றோன் கழிவுநோய் (Phenylketonuria), நார்க்கட்டி (Cystic fibrosis) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பரம்பரையலகு நோய்கள்: ஆட்சியான ஓ-இலிங்க மூர்த்தப்(X-linked) பிறழ்வு
ஓ-இலிங்க மூர்த்த பரம்பரையலகுகளின் ஆட்சிப்பிரதி விகாரங்களாகும். இப்பிறழ்வு பெண்களை விட ஆண்களை அதிகமாகத் தாக்குவதோடு, அனேகமாக ஆண்கரு இறப்பை ஏற்படுத்தும். இதனால் நோய் நிலைகளோடு அதிகமாக பெண்களே இருப்பர். ரெட் கூட்டறிகுறி (Rett Syndrome), ஐகார்டி கூட்டறிகுறி (Aicardi Syndrome) போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
பரம்பரையலகு நோய்கள்: பின்னடைவான ஓ-இலிங்க மூர்த்தப்(X-linked) பிறழ்வு
இவை ஓ-இலிங்க மூர்த்தத்திலுள்ள பரம்பரையலகுகளின் பின்னடைவு பிரதிகளில் நிகழ்கின்ற மாற்றங்களாகும். இதனால் பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிப்புறுகின்றனர். தாய் பாதிப்பற்றவராகவும் தந்தை பாதிப்புள்ளவராகவுமுள்ள நிலையில், ஆண் குழந்தை பாதிப்புற்றும், பெண் குழந்தை காவியாகவுமிருக்கும்.
தந்தை பாதிப்பற்றவராகவும் தாய் காவியாகவும் உள்ளபோது, ஆண் பிள்ளை 50வீத குறைபாட்டு சந்தர்ப்பத்தையும் பெண் பிள்ளை 50 வீத காவியாகவுமிருக்கும். தந்தை பாதிப்போடும் தாய் காவியாகவுமிருப்பின், ஆண் குழந்தையெனில் 50 வீத பாதிப்பும், பெண் குழந்தையெனில் 50 வீத பாதிப்பு அல்லது 50 வீத காவியாகவும் இருப்பதற்கான சந்தர்ப்பங்களுண்டு.
குருதி உறையாமை(Haemophlia), தசை நார்த்தேய்வு (Duchenne Muscular Dystrophy), நிறக்குருடு, ஆண்களில் வழுக்கை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.
பரம்பரையலகு நோய்கள்: லு-இலிங்க மூர்த்தப்(Y-linked) பிறழ்வு
Y-இலிங்க மூர்த்தத்திலுள்ள பரம்பரையலகுகளில் ஏற்படும் சடுதியான விகாரங்களாகும். லு-இலிங்க மூர்த்தம் ஆண்களில் மாத்திரமேயுள்ளதால் ஆண்கள் மாத்திரமே பாதிக்கப்படுவர். ஓப்பீட்டளவில் லு-சிறியதாகவும் குறைவான பரம்பரையலகுகளையும் கொண்டிருப்பதனால் பாதிப்பும் குறைவாகவுள்ளதோடு, ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.
பரம்பரையலகு நோய்கள்: காவிப் பரிசோதனைகளும் ஆலோசனைகளும்
பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே காவிகளாகவுள்ள நிலையில் அவற்றுக்கான மரபணு பரிசோதனைகளும் கருத்;தரித்தல் தொடர்பான உளவள ஆலோசனைகளும் விசேட வைத்திய நிபுணர்களால் வழங்கப்படுகின்றன.
இரத்த உறவு முறைத் திருமணங்கள்: பரம்பரை நோய் அபாய அளவு
ஒவ்வொரு மனிதனிலும் விகாரத்துக்கு உட்படக்கூடிய பரம்பரை அலகுகளும் காணப்படும். எவ்வாறெனினும் நெருங்கிய உறவினர் அல்லாதவர்களில் இவ்விகார அபாயம் மிகக்குறைவாகவே இருக்கும்.
ஆனால், இரத்த உறவு முறையில் பொதுவான மூதாதையரை கொண்டிருக்கும் நெருங்கிய உறவினர்கள், ஏறக்குறைய ஒத்த பரம்பரையலகுச் சங்கிலியையும் விகாரத்துக்குரிய பரம்பரையலகுகளையும் அதிகளவில் கொண்டிருப்பர்.
இதனால் நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள், பரம்பரையலகு குறைபாட்டு குழந்தைகளையும் காவிக் குழந்தைகளையும் உருவாக்கும் சந்தர்ப்பங்களை வெகுவாகவே அதிகரிக்கும். இரத்த உறவுத் திருமணங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றபோது, பரம்பரை நோய் அபாய அளவும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும்.
இரத்த உறவு முறைத் திருமணங்களும் பரம்பரை நோய் பரிகாரங்களும்
பரம்பரை நோய் பாதிப்புக்கள் பற்றிய பரந்தளவிலான விழிப்புணர்வுகளும் அறிவூட்டல்களும் மிகவும் அவசியமாக இருப்பதோடு, திருமணத்துக்கு முன்னரான மரபணுப் பரிசோதனைகளும் பரம்பரையலகுப் பிறழ்வு பற்றிய மருத்துவ ஆலோசனைகளும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
பரம்பரைக் குறைப்பாட்டு குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோரின் வேதனை மரண வேதனையிலும் பன்மடங்கு பெரியது. உன்னத உயிர்களை உற்பத்தி செய்து உலகுக்கு அளிக்கும் அனைவருமே, தங்களது குழந்தையும் இன்னுமொரு வளமான எச்சத்துக்;குரிய மூலமாகவே இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.
உயிர் உற்பத்தியில் பரம்பரையலகுப் பிறழ்வுகள் நிகழ்ந்ததன்; பின்னர் நிவர்த்திப்பதற்கான உத்திகள், மருத்துவ உலகுக்கு இன்றளவிலும் சவாலாகவே இருக்கிறது. ஆகையினால் ஏனைய எல்லாக் காரணங்களையும் பின்தள்ளி, இரத்த உறவுத் திருமணங்களை தவிர்த்து, செல்வங்களில் உயர்ந்த செல்வமாய் குறைகளற்ற குழந்தைகளை உருவாக்கும் உறவுகளாக, திருமண பந்தங்களை முதன்மைப்படுத்துங்கள்.
Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
4 hours ago