2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தொற்று நோய்களாக மாறி வரும் தொற்றா நோய்கள் பகுதி - 02

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றா நோயின் வீரியத்தையும் அவற்றுக்கு வழிகோலுகின்ற அடிப்படை ஆபத்துக் காரணிகளையும் இத்தொடர் கட்டுரையின் கடந்த வார பகுதி-01 சுட்டிக்காட்டியிருந்தது என்பதை வாசகர்களுக்கு நினைவுப்படுத்தி இவ்வார பகுதி-02 தொடரவிருக்கிறது. 

குறிப்பாக தொற்றா நோய்களிலிருந்தும் அவற்றின் பாதிப்புக்களிலிருந்தும் பல சந்தர்ப்பங்களில் மீண்டெழுவதும், சில வேளைகளில் வீழ்ந்து மடிவதும் அமுத சுரபிக்கு ஒப்பானதாக இருக்கிறது. 

ஏனெனில், தொற்றா நோய்களும் அவற்றின் தாக்கங்களும் சுகநிலையை அடைந்த ஒரு நோயாளியை மீண்டும் தாக்குவதும் இன்னுமொரு சுகதேகியை நோயாளியாக்கி, குறிப்பிட்ட நோயின் புதிய உறுப்பினராக அடையாளப்படுத்துவதும் நோயாளர்களின் தேறிய எண்ணிக்கை மட்ட அதிகரிப்பு என்பதன் அடிப்படையில், அமுத சுரபியின் நிலையைப் போன்றது.

தொற்றா நோயொன்றின் பிடியிலிருந்து மீண்டு வருகின்ற ஒருவர், இன்னுமொரு தொற்றா நோயின் தாக்கத்துக்குள்ளாவதும், மீண்டும் அதே தொற்றா நோயினால் பாதிக்கப்படுவதுமாக இருக்கும்.

ஒரு நோயின் தாக்கத்திலிருந்து தப்பிப்பிழைக்க எத்தணிக்கின்ற தொற்றா நோயாளி, பின்பற்றுகின்ற சில நடைமுறைச் செயற்பாடுகள், மீண்டும் அவரை இன்னுமொரு தொற்றா நோயின் ஆளுகைக்குள் சிறைப்பிடிக்கலாம்.

இந்நிலைமை முன்பை விட ஆபத்தானது. மீளவும் ஒருவரை ஆக்கிரமிக்கின்ற தொற்றா நோய்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தொற்றா நோய்கள் ஒருவரை பாதிக்கின்ற நிலைகளும் ஒருவரின், உயிருக்கே மிக இலகுவில் உலைவைத்துவிடும்.

இதனால்தான், இன்றைய சூழ்நிலையில் தொற்று நோய்களை விடவும் தொற்றா நோய்களின் பாதிப்புக்கள் வீரியமாக இருக்கின்றன. எனவேதான், தொற்றா நோய்களின் சிகிச்சை முறைகளை பற்றி சிந்திக்கின்ற போது, அவற்றுக்கான கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முறைகள் மிகவும் முக்கியத்துவமும் பெறுகின்றன.

இத்தொடர் கட்டுரையானது, நோய் பற்றிய வரைவிலக்கணம், நோய்க் காரணிகள், நோயைக் கண்டறியும் முறைகள் என்பன பற்றி ஆழமாக ஆராய்வதை தவிர்த்து, தேவையான இடங்களில் அவற்றைத் தேவையான அளவுகளில் தெளித்து வாசகர்களைத் தெளிவுபடுத்தும்.

மேலும், நோயினால் பாதிக்கப்பட்டவர்;களை நோயின் சிக்கல் விளைவுகளுக்குள் உட்படாமல் மீட்டெடுப்பதற்கான கட்டுப்பாட்டு முறைகளையும் சுகதேகியாக இருக்கின்ற ஒருவர் அல்லது நோயின் ஆளுகைக்கு அருகில் இருக்கின்ற ஒருவர் அந்நோயிலிருந்து இலகுவாக தப்பித்துக் கொள்வதற்கான அல்லது அந்நோய் தீண்டாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகள் பற்றியே மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்கவிருக்கின்றது. இதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் உள்ளது.
அத்தோடு, தொற்றா நோய்களுக்கான மருந்து மாத்திரைகளோடு, நோய் சார்ந்த விளக்கங்களும் கட்டுப்பாட்டு தடுப்புமுறை அறிவுரைகளும் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அளவுக்கதிகமாகவே வழங்கப்பட்டாலும், தொற்றா நோய்களினால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்பு மற்றும் இறப்பு வீதம் இன்றுவரைக்குமான அளவிடைப் புள்ளி விவரங்களிலே அதிகரிப்பு நிலைமையையே சுட்டுகின்றது. 

ஆகவே இதற்கான காரணிகள் முனைப்பான மருத்துவ ஆய்வுகளினூடு அடையாளப்படுத்தப்பட்டு, தொற்றா நோய்களின் பாதிப்பு மற்றும் இறப்பு வீதங்கள் கணிசமான அளவுக்கு குறைக்கப்படல் வேண்டும்.

எனவேதான், மேற்குறிப்பிடப்பட்ட தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, ஆலோசனை முறைகள் மற்றும் அதிகரித்திருக்கின்ற நோய்களின் பாதிப்பு மற்றும் இறப்பு வீதங்களுக்கிடையிலே காணப்படுகின்ற பொருத்தப்பாடற்ற இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அப்போதுதான் நோயினால் பாதிப்புறுகின்றவர்கள், நோய் நிவாரணங்களின் அனுகூலங்களை முறையாக அனுபவித்து பயன்பெற முடியும் என்பதே அவ்வாதங்களுக்கான நியாயப்படுத்தல்களாக குறிப்பிடப்படுகின்றன.

ஆகக்குறைந்தது மேற்குறிப்பிட்ட நோக்கத்தின் ஒரு பகுதியையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எத்தனிப்போடு இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியும் இனி வரவிருக்கின்ற பகுதிகளும் வரையப்படுகின்றன.

இங்கு குறிப்பிடப்படுகின்ற தொற்றா நோய்களுக்கான கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முறைகள் நாளாந்த, நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றித்து, ஒத்துழைத்து மேற்கொள்ளக்கூடியவையாக இருப்பதுதான், இக்கட்டுரைத் தொடரின் தனித்துவ சிறப்பம்சமாகும்.

இங்கு குறிப்பிடப்படுகின்ற விரிவானதும், தெளிவானதுமான விளக்கங்களை வாசகர்கள் இலகுவாக வாசித்து, கிரகித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், கட்டுரையின் இனிவரும் பகுதிகள் சம்பாசனைகளாகவும், சிறுசிறு துணைத் தலைப்புக்களோடும் வாரக்கப்படுகின்றன.

முதலில் நோயாளி மற்றும் மருத்துவருக்கிடையிலான சம்பாசனை பற்றி பார்ப்போம்

? நோயாளி: வணக்கம் டொக்டர், நான் நீண்ட கால நீரிழிவு நோயாளி, தொற்றா நோய் என்றால் என்னவென்று விளக்க முடியுமா?

மருத்துவர்: வணக்கம், ஒரு நோயாளியில் இருந்து இன்னுமொரு நோயாளிக்கோ அல்லது சுகதேகிக்கோ தொற்றமுடியாத நோய்களாகும். உங்களுடைய இரண்டாம் வகை நீரிழிவு நோயானது, உங்களிடத்தில் இருந்து உங்களுடைய மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ தொற்றமுடியாது.   

? நோயாளி: இலங்கையில் காணப்படுகின்ற ஏனைய தொற்றா நோய்களைக் குறிப்பிட முடியுமா?

மருத்துவர்: பொதுவாக தொற்றா நோய்களை அவற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை வீத அடிப்படையில், பெருமளவில் காணப்படும் தொற்றா நோய்கள் என்றும் சிறிய அளவில் காணப்படுகின்ற தொற்றா நோய்கள் என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

? நோயாளி: அப்படியென்றால், பெரிய அளவிலே காணப்படுகின்ற தொற்றா நோய்களைக் குறிப்பிட முடியுமா?

மருத்துவர்: நிச்சயமாக, உங்களுக்கு இருக்கக்கூடிய நீரிழிவு, பல்வகை இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நாட்பட்ட சுவாச நோய்கள் (ஆஸ்துமா, நாட்பட்ட தடங்கல் சுவாச நோய்), பல்வகை புற்று நோய்கள், நாட்பட்ட சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

? நோயாளி: அப்படியென்றால் எனக்கிருப்பது பெரியளவிலான தொற்றா நோய், நான் இன்னும் அதிகமாக என்னுடைய சுகாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்தானே டொக்டர்?

மருத்துவர்: ஆமாம், நீங்கள் சரியான முறையில் கவனமெடுக்காவிட்டால், நீரிழிவின் பாதிப்புக்களும் பக்க விளைவுச் சிக்கல்களும் உங்களுடைய எதிர்;கால வாழ்வுக்கு மிக சவாலாக இருக்கும்.

? நோயாளி: நல்லதொரு முக்கியமான அறிவுரை கூறினீர்கள். அதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள். அடுத்து சிறிய அளவிலான தொற்றா நோய்கள் பற்றி குறிப்பிடுவீர்களா?

மருத்துவர்: நல்லது, வீதி விபத்துக்களினால் ஏற்படுகின்ற காயங்கள், தற்கொலைகள், மனவழுத்தம் போன்ற தொற்றா நோய் நிலைகளைக் குறிப்பிடலாம். இவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் கொள்ளல் வேண்டும்.

? நோயாளி: தயவு செய்து, ஒருவருக்கு தொற்றா நோய்கள் ஏற்படுவதற் கான காரணங்களைக் கூற முடியுமா?

மருத்துவர்: ஆமாம், மிக இலகுவாக கூறமுடியும். முதலில் இவற்றைப் பொதுவான மற்றும் தனித்துவமான ஆபத்துக் காரணிகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். அதிகரித்த உடற்பருமன், புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை, மதுவருந்தும் பழக்கம், நேர்த்தியற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, உடல் மற்றும் உள அழுத்தங்கள் மற்றும் மாசுற்ற  சூழல் போன்றவற்றைப் பொது ஆபத்துக் காரணிகளாகவும், சில பரம்பரையலகு விவகாரங்கள், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாமை மற்றும் தற்கொலைகளுக்கான நஞ்சருந்துதல் என்பனவற்றைத் தனித்துவ ஆபத்துக் காரணிகளாகவும் குறிப்பிடலாம்.

? நோயாளி: மன்னிக்க வேண்டும் டொக்டர், நீங்கள் கூறிய காரணிகளை விளங்கிக் கொண்டேன். ஆனாலும் பொதுவான மற்றும் தனித்துவக் காரணிகள் என்று வேறுபடுத்தி விளங்கிக் கொள்வது சற்று கடினமாக இருக்கிறதே?

மருத்துவர்: பரவாயில்லை, இன்னும் தெளிவாகக் கூறுகிறேன் கேளுங்கள். அதிகரித்த உடற்பருமனைக் கொண்ட ஒருவருக்கு இரண்டாம் வகை நீரிழிவு,  இருதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் இருக்கின்றன. புகைப்பிடித்தல் பழக்கமுடைய ஒருவருக்கும் மதுவருந்தும் பழக்கமுடைய இன்னுமொருவருக்கும் மேற்குறிப்பிட்ட நோய்கள் இருக்கின்றன. ஆகவே மேற்குறிப்பிட்ட மூன்று வகையான ஆபத்துக் காரணிகளும் மேற்சொன்ன மூன்று வௌ;வேறான தொற்றா நோய்களுக்குமான பொதுவான ஆபத்துக் காரணிகளாக இருக்கின்றன.

? நோயாளி: பொதுக் காரணிகள் பற்றி தெளிவாக விளங்கிவிட்டது. இப்போது தனித்துவக் காரணிகள் பற்றி சற்றுக் கூறுங்களேன்?

மருத்துவர்: இன்று பெண்களை வெகுவாகப் பாதிக்கின்ற மார்பகப் புற்று நோய்க்கான ஆபத்துக் காரணிகளை ஆராய்வோமாக இருந்தால், பொதுவாக மாதவிடாய் நிறுத்தத்துக்கு பின்னரான அதிகரித்த உடற்பருமன், மது பாவனை, தாய்ப்பாலூட்டாமை, சிலவகைக் கருத்தடை முறைகள், பரம்பரையலகு மாற்றம் மற்றும் பரம்பரை வியாதியாகவிருத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதில் ஒருவரின் நோயுருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்திய ஆபத்துக் காரணிகள். மற்றவரில் தாக்கம் செலுத்தவில்லையயாயின், அவை அவரவருக்குரிய தனித்துவ காரணிகளாகவே அமையும்.

? நோயாளி: நன்றி  டொக்டர், மிகத்தெளிவாக விளங்கிவிட்டது. எவ்வாறாயினும், நான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதில் மாற்றமில்லை. இப்போதைய என்னுடைய கவலை என்னவென்றால், ஏனைய தொற்றா நோய்கள் என்னை தீண்டாமலும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் ஏதாவது ஆலோசனை கூற முடியுமா?

மருத்துவர்: நீங்கள் நிச்சயமாக சுகதேகியாக நிம்மதியாக வாழ முடியும். ஆனாலும் எப்பொழுதும் உங்களுடைய ஞாபகத்துக்கு வர வேண்டிய விடயம் யாதெனில், சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை சரியாக பின்பற்ற தவறுகின்ற போது, நீரிழிவு முன்னோக்கி நகர்;ந்து அதன் பாதகமான பக்கவிளைவுச் சிக்கல்களை ஏற்படுத்தும்.

? நோயாளி: அப்படியென்றால் நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர்: நீங்கள் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளி என்பதால், உங்களை சூழ்ந்திருக்கின்ற நோய்க்கான ஆபத்துக் காரணிகள் மாற்றியமைக்கப்படக்கூடியவை. அதற்கான முயற்சியை முன்னெடுப்பீர்களானால், நோயின் தீவிரத்தன்மையை கணிசமான அளவிலே குறைத்து அதனை பின்னோக்கி நகர்த்த முடியும். இதனால் நீங்கள் நீரிழிவு நோயினால் அவஸ்தையுறுகின்ற நிலையிலிருந்தும் ஏனைய தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுகின்ற தன்மைகளிலிருந்தும் மிக இலகுவாகவும் விரைவாகவும் தப்பித்துக் கொள்ள முடியும்.

? நோயாளி: சரி, அதற்காக நான் என்னுடைய பழக்க வழக்கங்களை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும்?

மருத்துவர்: இதுதான் மிகவும் முக்கியமான கேள்வி. அதற்காக, முதன் முதலாக நீங்கள் உங்களுடைய புகை பிடித்தல் மற்றும் மதுப் பழக்கத்தை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இவை தொற்றா நோய்களின் பொது மற்றும் அடிமைப்படுத்துகின்ற ஆபத்துக் காரணிகள் என்பதனால், ஏனைய தொற்றா நோய்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

? நோயாளி: நிச்சயமாக, உங்கள் முன்னால் சத்தியம் செய்கிறேன். இந்தக்கணத்திலிருந்தே அந்த கெட்ட பழக்கங்களை விட்டு விடுகின்றேன். இவற்றையெல்லாம் தவிர்த்த பிறகும் இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமா? 

மருத்துவர்: ஆமாம், அவை இலகுவான விடயங்கள். உங்களுடைய மருந்து மாத்திரைகளை சரியான அளவு மற்றும் சரியான நேரங்களில் உட்கொள்ள வேண்டும். நேர்த்தியான உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் சீரான உடல் மற்றும் உளப்பயிற்சிகளை மேற்கொண்டால் நிச்சயமாக உங்கள் நோயிலிருந்தும் அதன் பாதிப்புக்களில் இருந்தும் புன்னகையோடு மீண்டு வரலாம். அது மட்டுமல்லாமல் மேற்கூறிய செயற்பாடுகள் 80% இற்கும் மேற்பட்ட அளவிலே நீரிழிவு போன்ற தொற்றா நோய்களை கட்டுப்படுத்தியிருக்கின்றன என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

மேற்கூறிய உரையாடல்கள் குறிப்பிட்டதொரு தொற்றா நோய் சார்ந்து இருந்தாலும் தொற்றா நோய்களின் பொதுவான ஆபத்துக்காரணிகளை அடையாளப்படுத்தியிருக்கிறது.

Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X