2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கருச்சிதைவும் பாதிப்புகளும்

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமான பெண்கள், தமது வாழ்வில் அடுத்த நிகழ்வாக குழந்தை பேறை அடைய வேண்டுமென்றே எதிர்பார்ப்பர். அது பல பெண்களுக்கு வாய்ப்பதில்லை. இன்று பல பெண்கள், கருச்சிதைவு என்ற ஒரு காரணத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   

கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின், கருச்சிதைவு ஏற்படுகிறது, குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது, உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. எனவே கருச்சிதைவு என்பது, மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பைத் தடுக்கும்.   

மலேரியா, சிபிலிஸ், கர்ப்பிணி கீழே விழுவதால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களாலும் கருச்சிதைவு ஏற்படக்கூடும்.  

சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பலோப்பியன் குழாயில் வளர்ச்சியடைவதால், கருச்சிதைவு ஏற்படுகிறது.  

அதேபோன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையாலும் ஏற்படும் கர்ப்பமானது, பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இத்தகைய கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.  
கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால், கரு, சரியான வளர்ச்சி பெறாததால். கருப்பையின் வாய் திறந்திருந்தால் சில பெண்களில் கருச்சிதைவை எதிர்கொள்வர்.   

ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்ப நிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால், வைத்திய பரிசோதனைகளைச் செய்து, அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.  

கருச்சிதைவுக்கான அறிகுறிகள்

கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு, மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும். பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளியேறும்.  

கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாள்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.  

தூண்டுதலின் பேரில் கருச்சிதைவு அடையச்செய்தல்

சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து, கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாள்களிலேயே செய்ய வேண்டும்.  

கருச்சிதைவை தவிர்க்கும் வழிகள்

கர்ப்பம் என்று உறுதியான உடனேயே, கணவன் மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன்மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.  

அதிகக் களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.  
கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில், உடனே வைத்தியரை அணுகி ஆலோசனை பெற்றே, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், சுய வைத்தியம் கூடாது.  

குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதங்களுக்காவது, பயணங்களைத் தவிர்ப்பது நலம்.  

நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.  
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள, அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.  
முதல் மூன்று மாதங்களில் கருசிதைவுக்கான ஆபத்து அதிகமென்பதால், எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.  

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரைத் தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றே, எப்போதும் இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக உள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .