Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வருடத்தில், இயற்கை மற்றும் செயற்கை மாற்றங்களினால் நிகழ்ந்த, ஆரோக்கிய கேடுகளையும் சுகாதார நலனோம்பற் திட்டங்களையும் ஒவ்வொரு மாதத்துக்குரிய தனித்துவ சிறப்பம்சங்களாக தொகுத்துள்ளோம்.
ஜனவரி:
தொற்றாநோய் பாதிப்புக்களும் பரிகாரங்களும்
தொற்றாநோய்களின் பாரியளவிலான பாதிப்புக்களையும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பரிகாரங்களையும் பற்றிய பரந்தளவிலான விழிப்புணர்வுகள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெற்றன.
உலகளவில் ஒவ்வொரு வருடமும் நிகழும் 42 மில்லியன் தொற்றாநோய் மரணங்களில், 16 மில்லியன் மரணங்கள்(42%) தடுக்கப்படக்கூடிய, முதிர்வுறா இறப்புக்கள் என மதிப்பிடப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருடமும், 3 அமெரிக்க டொலர்களை சுகாதாரத்தில் முதலீடு செய்வதால் தொற்றாநோய்த் தாக்கங்களையும் மரணங்களையும் கணிசமாகக் குறைக்க முடியுமென குறிப்பிடப்பட்டது.
▄ துருக்கி, புகையிலைப் பொருட்களின் சில்லறை விலையின் 80 வீதத்தை, அவற்றின் மீதான வரியாக விதித்ததனால், புகையிலைப் பாவனையாளர்களின் எண்ணிக்கையை 13.4 வீதத்தினால் குறைத்திருந்தது.
▄ ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகக் குறைந்தளவு உப்போடு, உணவு பொதியிடும் முறைகள், பாரியளவில் முனைப்புப் பெற்றன.
பெப்ரவரி:
தொற்றுநோய்த் தாக்கங்களும் தடுப்புக்களும்
தொற்றுநோய்த் தாக்கங்களின் அபாயம் தொடர்பாகவும் வினைத்திறனான தடுப்புமுறைகள் பற்றியும் இம்மாதத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
▄ டெங்கு, மலேரியா, யானைக்கால் மற்றும் விலங்கு விசர்நோய் உட்பட்ட, 17 வகையான வெப்ப மண்டல தொற்றுநோய்கள் தொடர்பான, கவனயீர்ப்புக்கள் தீவிரம்பெற்றன.
▄ தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளை மிகவும் வினைத்திறனாக்குவதற்கு 2015 தொடக்கம் 2020 வரையிலான, 5 வருட காலப்பகுதியில் வருடமொன்றுக்கு 290கோடி அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டது.
n திட்டமிடலற்ற நகரமயமாக்கம் மற்றும் காலநிலை மாற்றங்களினால், வீரியமடைந்த தொற்றுக்களில், டெங்கு உலகின் 150ற்கும் மேற்பட்ட நாடுகளின் சுகாதாரத்துறைக்கு சவாலாக மாறியிருப்பதாக குறிப்பிடப்பட்டது.
மார்ச்:
சீனிப் பாவனைக் கையேடு
ஆரோக்கிய அடிப்படையிலான, சிறப்பான சீனிப்பாவனைப் பரிந்துரைகள், மார்ச்சில் முக்கியத்துவம் பெற்றன.
▄ நாளாந்த மொத்த சக்தித் தேவையில், 10 வீதத்துக்கும் குறைவான, நேரடி-சர்க்கரைப் பாவனையானது, அதீத உடற்பருமன் மற்றும் பற்சூத்தை போன்றவற்றை கணிசமாகத் தடுப்பதாக பரிந்துரைக்கப்பட்டது.
▄ 5 சத வீதத்துக்கும் குறைவான (25 கிராம் அல்லது 6 தேக்கரண்டிகள்), நாளாந்த நேரடி-சீனிப் பாவனையானது, மனித ஆரோக்கியத்தை மிகவும் சிறப்பாக பேணுவதாக குறிப்பிடப்பட்டது.
▄ ஓரலகு உணவில் காணப்படும் சர்க்கரையானது, இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், மரக்கறிகள் மற்றும் பால் போன்றவற்றைவிடவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பழச்சாறுகளில் அதிகமாகவும் ஆரோக்கியம் குறைந்ததாகவும் இருப்பதாக கூறப்பட்டது.
▄ சீனிப் பாவனையானது, ஐரோப்பாவில் 17 சத வீதமாகவும் ஆபிரிக்காவில் 11 சத வீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்:
அவசர நிலையும் உணவுப் பாதுகாப்பும்
இம்மாதம், பாதுகாப்பான உணவு பற்றிய பார்வையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
▄ 'உற்பத்திதொடக்கம் உணவுத்திட்டம் வரைக்கும் உணவைப் பாதுகாத்தல்' என்ற தொனிப்பொருளில், 7.0.2015இல், சர்வதேச சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
▄ பாதுகாப்பற்றதும் அழுக்கடைந்ததுமான உணவு மற்றும் நீரினால் காவப்படும் 200 வகையான நோய்களால் வருடாந்தம் 2 மில்லியன் மரணங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
▄ வருடாந்தம் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 40 வீதமானோர், தொற்றுகைக்கு உட்பட்ட உணவினால் காவப்படும் நோய்களால் பாதிக்கப்படுவதோடு இவர்களில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் சிறார்கள் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
▄ அசுத்தமான உணவானது, வயிற்றோட்டம் தொடக்கம் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கான தோற்றுவாயாக விளங்குவதாகவும் கூறப்பட்டது.
மே:
நேபாள நிலநடுக்கமும் உலக சுகாதார உதவியும்
இயற்கையின் சினத்தினால் நேபாளத்தில் நிகழ்ந்த, ஆரோக்கிய கேட்டில், மே மாதம் அதீத அவதானம் செலுத்தப்பட்டது.
▄ பூகம்பத்தினால் 484 சுகாதார நிலையங்கள் முற்றுமுழுதாகவும் 474 சுகாதார நிலையங்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன.
▄ 26 தொன் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அவசரகாலத் தேவையின் அடிப்படையில், உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.
▄ வெளிநாடுகளைச் சேர்ந்த 141 மருத்துவக் குழுக்களும் நேபாளத்தை சேர்ந்த 47 சுகாதார குழுக்களும் இரவு பகலாக தன்னிகரற்ற மருத்துவ சேவைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுத்திருந்தன.
▄ மிக மோசமான பாதிப்புக்குள்ளான சிந்துபலொக் மாவட்டத்தில், 32 பேர் பாரிய அறுவைச் சிகிச்சைகளையும் 2111 பேர் சிறிய சத்திர சிகிச்சைகளையும் 20,714 பேர் மருத்துவ சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டனர்.
ஜூன்:
இரத்ததானமும் உயிர்காத்தலும்
உயிர்காக்கும் உத்தம தானமாகிய, இரத்ததானத்தின் ஊக்குவிப்பு மாதமாக ஜூன் மிளிர்ந்தது.
▄ 'என் உயிர் காத்தமைக்கு நன்றிகள்' என்ற தொனிப்பொருளோடு, உலக இரத்ததான தினம், 14.06.2015இல் நினைவு கூறப்பட்டது.
▄ ஒவ்வொரு வருடமும் 108 மில்லியன் இரத்ததானங்கள் நிகழ்வதோடு, குறைந்த வருமானமுடைய நாடுகளில் நிகழும் 65 வீதமான இரத்தம் பாய்ச்சுதல்கள், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன.
▄ 2020இல் அனைத்து நாடுகளிலும், பணத்தை எதிர்பார்க்காத, 100வீத தன்னார்வ உதவியாக இரத்ததானம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
▄ ஒவ்வொரு ஆயிரம் பேரிலும், உயர்வருமானமுடைய நாடுகளில் 37 பேரும் மத்திய வருமான நாடுகளில் 12 பேரும் குறைந்த வருமான நாடுகளில் 4 பேரும் இரத்ததானம் செய்பவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை:
எயிட்ஸ் அற்ற புதிய தலைமுறையை நோக்கி
ஏதுமறியா குழந்தைகளிலிருந்து கொடிய தொற்றுநோயான எயிட்சை, முற்றாக களையவேண்டுமென இம்மாதம் கரிசனை காட்டியது.
▄ வருடாந்தம் எச்.ஐ.வி தொற்றுக்கு உட்பட்ட 1.4 மில்லியன் பெண்கள் கர்ப்பமுறுவதோடு, சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தவறுகின்ற தாய்மார்களின், பிள்ளைகளுக்கான தொற்றுச் சந்தர்ப்பம் 45 வீதமாக காணப்படுகிறது.
▄ 2009 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றோடு பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அரைவாசியால் குறைந்துள்ளதோடு, 2015இலிருந்து அவ்வெண்ணிக்கையை 5 மடங்கினால் குறைப்பதற்கான பொறிமுறைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
▄ தற்போது நடைமுறையிலுள்ள எச்.ஐ.வி சிகிச்சை முறையான,Anti-Retroviral TreatmentI பெற்றுக்கொள்கின்ற கர்ப்பிணித் தாய்மாரின் எண்ணிக்கையில் 100 சத வீத திருப்தியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஓகஸ்ட்:
தாய்ப்பால் ஊட்டலை ஊக்குவித்தல்
ஆரோக்கியத்தின் மூலாதாரமான, தாய்ப்பாலின் தனித்துவ சிறப்பம்சங்கள் பற்றி, அதிக அவதானத்தை ஓகஸ்ட் ஈர்த்திருந்தது.
▄ தாய்ப்பாலானது குழந்தைக்கு தேவையான குறைவிலா ஊட்டச்சத்தை வழங்குவதோடு, நோய்த் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்கான வினைத்திறனான நோயெதிர்ப்பு சக்தியை விருத்திசெய்கிறது.
▄ உலகளவில் 38 வீதமான குழந்தைகளே முறைப்படியான தாய்ப்பாலூட்டலைப் பெற்றுக் கொள்வதோடு,
தாய்ப்பாலூட்டற் பற்றாக் குறையினால், எட்டு இலட்சம் குழந்தை மரணங்களும் நிகழ்கின்றன.
▄ தாய்ப்பாலூட்டலை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாத முதல் வாரம் 'உலக தாய்ப் பாலூட்டல் வாரம்' ஆக அனுஷ்டிக்கப்படுவதோடு, இவ்வாண்டில், 'தாய்ப்பாலூட்டலும் சுமுகமான வேலைத்தளமும்' என்ற தொனிப்பொருளோடு நினைவு கூரப்பட்டது.
செப்டெம்பர்:
பொதுச் சுகாதாரத்தின் புதிய சகாப்தம்
பொதுச் சுகாதாரத்தின் ஒன்றிணைந்த புத்தாக்க சிந்தனைகள் செப்டெம்பரில் மேலும்; செழிப்பானது.
▄ 17 இலக்குகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின், நீடித்து நிலைத்து நிற்கும் அபிவிருத்தித் திட்டத்தில், ஒவ்வொரு இலக்கிலும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் முன்னிலை பெறுகிறது.
▄ '3ஆவது இலக்கில் அனைத்து வயது மட்டத்திலும் ஆரோக்கிய வாழ்க்கையை உறுதிப்படுத்தி, நன்றாக இருத்தலை ஊக்குவிப்பதற்கான உத்திகள்' என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
▄ வறுமை ஒழித்தல், பட்டினியை பூஜ்ஜியமாக்குதல், சுத்தமான நீரும் சுகாதாரமும் பால்நிலைச் சமத்துவம் போன்ற திட்டங்கள் பொதுச்சுகாதார மேம்படுத்தல்களை வினைத்திறனாக்குகின்றன.
ஒக்டோபர்:
வளமான வயதாதல்
இம்மாதத்தில், ஆரோக்கிய வயதாதலின், அடிப்படை சேவைகள் மீதான ஆர்வம் மேலோங்கியது.
▄ 2050ஆம் ஆண்டளவில், உலக முதியோர் எண்ணிக்கையானது இரட்டிப்பாகும் என எதிர்வு கூறப்படுவதோடு, இவர்களில் 80 வீதமானவர்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளிலேயே இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
▄ 1.10.2015இல் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச முதியோர் தினத்தையொட்டி 'வயதாதலும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட உலக சுகாதார ஊடக அறிக்கையில், முதியவர்களுக்கான தனித்துவ சுகாதார கட்டமைப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர்:
மூளைக் காய்ச்சலை முற்றாக நீக்குதல்
மூளைக் காய்ச்சலை வேரறுப்பதற்கான நவீன வேலைத்திட்டங்களில் நவம்பர் மாதம் கவனம் செலுத்தியது.
▄ A வகையான மூளைக்காய்ச்சலானது, தொற்றுக்குட்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே பாரிய மூளைப்பாதிப்புக்களை அல்லது இறப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டது.
▄ ஆபிரிக்க கண்டத்திலுள்ள 26 நாடுகளில் 237 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும், பாரிய தடுப்பூசி நிகழ்ச்சி திட்டத்தின் மூலம், எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் யு வகையான மூளைக்காய்ச்சலை முற்றாக நீக்குவதற்கான செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டன.
▄ ஆபிரிக்காவில் 1996-1997 காலப்பகுதியில் நிகழ்ந்த சடுதியான யுவகை மூளைக்காய்ச்சல் தொற்றுக்களினால் ஒரு சில மாதங்களுக்குள் இரண்டரை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 25,000 பேர் இறந்தனர்.
டிசெம்பர்:
காலநிலை மாற்றங்களும் ஆரோக்கியமும்
மானிட சுயநலத்தால் நிலையிழந்த காலநிலையை, மீண்டும் மனித நலம் காக்கும் வகையில் பேணுவதற்கான கவனஈர்ப்பை டிசெம்பர் கற்பித்தது.
▄ ஒவ்வொரு வருடமும் நிகழும், ஆயிரம் இறப்புக்களில் 10பேர் காலநிலை மாற்றத்தினால் காவுகொள்ளப்படுகின்றனர். காலநிலை மாற்றமானது நோயியல் வட்டத்தையும், காற்று, உணவு, நீர் மற்றும் சுகாதார நிலைகளையும் கணிசமாக பாதிக்கின்றது.
▄ வருடாந்தம் 7மில்லியன் மரணங்கள், மாசடைந்த காற்றின் மூலம் விளைவாக்கப்படுகின்ற நோய் நிலைமைகளினால் ஏற்படுகின்றன.
▄ 2030-2050க்கு இடைப்பட்ட காலப் பகுதியில், காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் தீவிரத்தன்மையினால் மலேரியா, வயிற்றோட்டம், வெப்பத்தகைப்பு மற்றும் போசனைக் குறைபாடு போன்ற நோய் நிலைகள் வழமையை விடவும் இரண்டரை இலட்ச மேலதிக மரணங்களை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்படுகிறது.
Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago
2 hours ago