2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பண்ணையாளர்களது பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியிலுள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர், அப்பகுதிக்கு நேற்று (13) விஜயம் செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

“இந்த அரசாங்கம், ஒரே நாடு - ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டு, தமிழ் மக்களை ஒரு கண்ணாலும் பெரும்பான்மையின மக்களை இன்னொரு கண்ணாலும் பார்க்கின்ற நிலைமை மீண்டும் வந்திருக்கின்றது” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இங்கு சாடினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்திலே மேய்ச்சற்தரைப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. பல மேய்ச்சற் தரைகள் இங்கு இருந்தாலும் இன்று பேசுபொருளாக இருப்பது மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சற்தரைப் பிரச்சினையாகும். 

“இந்த அரசாங்கத்தினதும் ஆளுநரினதும் பின்புலத்துடன் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையின மக்கள் இங்கு வந்து சேனைப் பயிர்ச்செய்கை மட்டுமல்லாமல் வேளாண்மைகூட செய்துகொண்டிருக்கும் நிலைமையை நேரடியாக இங்கு வந்து பார்த்திருக்கின்றோம். இந்தப் பண்ணையாளர்களை சந்தித்துப் பேசியிருக்கின்றோம். உண்மையில் இவர்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கின்றது” என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி, “மயிலத்தமடு, மாதவனை பகுதகளில் இருக்கின்ற சூழலை பார்க்கின்றபோது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இந்த அரசாங்கத்தில் ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் இந்தப் பிரதேசங்களில் இன ரீதியாக வாழும் மக்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்காக செய்கின்ற முயற்சியால் இன்று மூவின மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

“இந்தப் பிரதேசத்தில் மூவினத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களும் இருக்கின்றார்கள். அரசாங்கமானது, மக்களின் கவனத்தை நாட்டிலிருக்கின்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி, இவ்வாறான குடியேற்த் திட்டங்களை செய்வதற்கு முயற்சி எடுத்தால் இன்று அனைவரும் கஷ்டமான சூழலுக்கு முகங்கொடுத்துள்ளனர்” என்றார்.

மேலும், “இந்த அரசாங்கத்தின் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடை பண்ணையாளர்கள் அனுபவிக்கின்ற  துன்பங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும். இல்லையென்றால், இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .