2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’டெங்கின் ஆதிக்கத்துக்கு கிணறுகள்தான் காரணம்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், வ.சக்தி, ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கின் ஆதிக்கத்துக்கு உரிய பராமரிப்பு முறையற்ற கிணறுகள்தான் காரணமாக அமைந்துள்ளது என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதி டெங்கு அபாய வலயமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆராய்ச்சி செய்வதற்காக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்  பூச்சியலாளர்கள் அப்பகுதிக்கு விஜயம் செய்து, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின்படி, டெங்கின் ஆதிக்கத்துக்கு குழாய்க் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகள் போன்றவைகள்தான் அதிகம் செல்வாக்கு செலுத்துவதாக அறிவித்துள்ளனர்.

அந்தவகையில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க குழாய்க் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகள் போன்றவைகளை அமைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கிணறுகள் அமைப்பதை உடனடியாக இடைநிறுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்வதோடு, கிணறுகள் அமைக்க வேண்டியிருப்பின் பிரதேச சபையின் முறையான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 11 மாதங்களில் 2,847 பேர் டெங்குக் காய்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 04ஆம் திகதி வரையும் 135 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் இவர்களின் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 56 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி, மக்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில், இன்று (16) முன்னெடுக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .