2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சர்வகட்சி மாநாட்டை டெலோவும் புறக்கணித்தது

Princiya Dixci   / 2022 மார்ச் 22 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ புறக்கணிக்கின்றது. ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதியிடம் நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டும்படியான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

“தற்போதும் அவ்வாறான நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டுகின்ற பட்சத்திலே மேற்கொண்டு சிந்திக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றோம். தற்போது சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியிருக்கினற இந்த தருணத்திலே நாங்கள் அதனையும் புறக்கணிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

“நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் போது அங்கிருக்கின்ற பொலிஸாரால் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

“தற்போது வடக்கு, கிழக்கை நோக்கியே அமைச்சர்களின், அரச பிரதிநிதிகளின் பயணங்கள் இருக்கின்றன. காரணம் பெரும்பான்மையின மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளார்கள்.

“இத்தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியிலே வந்து தங்களுடைய கருத்துகளைச் சொல்லுகின்ற போது பெரும்பான்மையின மக்கள் தங்களுக்குச் சார்பாக மாறுவார்கள் என்ற யுத்தியோடு, தமிழ்ப் பிரதேசங்களிலே வந்து பௌத்த விஹாரைகளை அமைத்து, எமது மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும்.

“வெளிநாடுகளில் பொருளாதார பின்னடைவு நிலைமைகள் ஏற்பட்டால் தலைவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வார்கள். இதேபோல், இன்றைக்கு மிகவும் மோசமான பின்னடைவைக் கண்டிருக்கின்ற இந்நாட்டின் தலைவர்கள் இராஜினாமா செய்வதுதான் சாலச் சிறந்தது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .