2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரச காணிகள் ஆக்கிரமிப்பு; நிலைமையை ஆராய்ந்தார் தேரர்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 09 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிவிலுள்ள புணானை, ஜெயந்தியாய மற்றும் றிதிதென்ன ஆகிய பிரதேசங்களில் ரயில் பாதையை ஊடறுத்து செல்லும் அரச காணிகளை அப் பிரதேசங்களைச் சேர்ந்தோர் சிலர் சட்ட விரோதமான முறையில் அபகரித்து வருவதாக பிரதேச மக்கள் முறையிட்டுள்ளனர்.

இதயைடுத்து அப் பிரதேசகங்களுக்கு திம்புலாகல ராகுலாங்கார நாகினி தேரர், நேற்று (08) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, நிலைமைகளை அவதானித்தார்.

புணானை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சிலருடன் தேரர் குறித்த இடங்களுக்கு சென்று, காணிகளில் கட்டடம் கட்டுவோர் மற்றும் சுற்று வேலி இடுவோரிடம் விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கவனத்தில்கொண்டு, சிறு தானியப் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக நெடுங்சாலைகள் போக்குவரத்து அமைச்சின் கீழ், ரயில் பாதையை அண்மித்த நிலங்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்யும் முகமாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

“இவ்விடயம் தொடர்பாக அறிந்த மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்தோர் சிலர் காணிகளை பிடித்து, தென்னை மரங்களை நாட்டியும்,கற்களைக் கொண்டு கட்டடங்களை அமைத்து அரச கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்.

“அத்துடன், இப் பிரதேசங்களின் ஊடாகவே யானைகளின் நடமாட்டங்கள் உள்ளன. இவர்களின் இவ்வாறான செயற்பாட்டால் யானைகளின் வாழ்வியல் செயற்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும்.

“எனவே, ரயில் திணைக்களத்துக்குரிய காணிகளை சட்டவிரோதமாக அபகரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

மேலும், இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேரர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், வருகை தந்த பொதுமக்கள் சிலர் இவ் காணி பங்கீடு தொடர்பில் பக்கச் சார்பில்லாமல் மூவின மக்களுக்கும் குறித்த காணியை பங்கீடு செய்து வழங்கமாறு கேட்டுக்கொண்டனர்.

கடந்த ஒரு வார காலமாக புணானை தொடக்கம் றிதிதென்னை வரையுமான சுமார் 10 கிலோமீற்றர் தூரமுள்ள காணிகள் அபகரிக்கப்படும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இதனால் சட்ட ஒழுங்கை நடைமுறைப் படுத்துவதில் பொலிஸார் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட ரயில் திணைக்களமும் மௌனம் காத்து வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .