2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைமை

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், க.விஜயரெத்தினம்

சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டமை நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலாகுமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக செயலாளரும், அக்கட்சியின் பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இலங்கை மக்களின் சமையல் கலாசாரம் ஆரம்பத்தில் விறகு அடுப்புகளாக இருந்தது. அதன்பின்னர் உமி அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பு என மக்களுக்கு பழக்கம் மாறுபட்டது. பின்னர் சமையல் எரிவாயு அடுப்பு அறிமுகம் செய்யப்பட்டபோது, அதனை நகர்புற மக்கள் மட்டுமன்றி கிராமப்புற மக்களுக்கும் இலகுவான பாவனையாக பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டது.

“வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கும் சமூர்த்தித் திட்டம் ஊடாக இலகு கடன் அடிப்படையில் எரிவாயு அடுப்புக்களை பெற்று, அதனை  கூடுதலான மக்கள் இன்று பாவித்து வருகின்றனர்.

“சாதாரண தேனீர் கடை தொடக்கம் ஐந்து நட்சத்திர உணவகங்கள் வரையும் எரிவாயுவைப் பயன்படுத்தியே சகல உணவு வகைகளும் செய்யப்படுகின்றன. உண்மையைக் கூறுவதானால் எரிவாயு என்பது இன்று ஓர் அத்தியாவசிய மூலப்பொருளாகவே உள்ளது.

“விறகுப் பாவனையை அடுப்பை நம்பியிருந்த இலங்கை மக்களுக்கு எரிவாயு அடுப்பு பாவனையை அறிமுகம் செய்து, அதனை 80 சதவீதமான மக்கள் பாவிக்கும் போது, திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டமையை ஏற்கமுடியாது.

“இது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைபோன்றே இலங்கை மக்களுக்கு இந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார். 

இதேவேளை, இன்று (17) முதல் நாட்டில் எரிவாயு விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .