2025 ஜனவரி 15, புதன்கிழமை

“வீட்டுக்கு தீ வைத்தபோது பெறுமதியை உணர்ந்தேன்”

Janu   / 2024 ஜூலை 10 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ​​ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்துள்ள 130 வீடுகளுக்கான உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன்போது அடையாளமாக ஜனாதிபதி சிலருக்கு வீட்டு உரிமைகளை கையளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா அல்லது அதற்கும் குறைவான வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அனைத்து வீடுகளுக்காகவும் 150,000 ரூபாவினை செலுத்தி முடித்திருப்போர் மற்றும் இதுவரையில் அந்த தொகையினை செலுத்தாமல் இருந்து ஒரு மாதத்திற்குள் அந்தத் தொகையை செலுத்தி முடிப்போர் உள்ளடங்களாக 50,000 பயனாளி குடும்பங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் முழுமையான வீட்டு உரிமை வழங்கப்படும்.

“உறுமய திட்டத்தின் மூலம் 20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமையும், 50,000 பேருக்கு வீடுகளுக்கான முழு உரிமையும் கிடைக்கும். காணியும் வீட்டு உரிமையும் கிடைப்பதென்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு இயன்றளவு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X