2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

2 பிள்ளைகளை தலைகீழாக தொங்க விட்ட ‘முக்கோண’ தாய்

Editorial   / 2024 மே 29 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 11 வயதான சிறுவனை மரமொன்றில்  தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, கம்பால் அடித்து சித்திவதை செய்ததுடன் இரண்டரை வயது ஆண் பிள்ளையை தொங்கவிட்டு, அடித்து துன்புறுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் அவ்விரு பிள்ளைகளின் தாயாரான  28 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

 மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்ட  இரு சிறுவர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 முதலாவதாக இந்து முறைப்படி திருமணம் முடித்த பெண், கணவனை விட்டுவிட்டு அவருக்கு பிறந்த முதல் குழந்தையுடன் இஸ்லாம் மதத்துக்கு மாறி, முஸ்லிம் நபரொருவரை திருமணம் முடித்துள்ளார். அவ்விருவருக்கும் குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், அவரையும் விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். அவ்விருவருக்கும்  இரண்டரை வயதில் ஆண் பிள்ளை உள்ளது.

அவரையும் விட்டுவிட்டு, தன்னுடைய  இரு பிள்ளைகளுடன் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்துக்கு மீண்டும் வந்து அங்கு வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை, புகைத்தலில் ஈடுபட்டார் என அச்சிறுவனை பிடித்து மரமொன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். ஏப்ரல் மாதத்திலேயே இவ்வாறு சித்திரவதை செய்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, இரண்டாவது இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தந்தையான புத்தளத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது. அதனையடுத்து உடனடியாக ஏறாவூருக்கு சென்று, தன்னுடைய மகனை தருமாறு அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார்.   

இதனையடுத்து அந்த தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரணை செய்த பொலிஸார், அந்த தாயாரின் அலைபேசியை சோதித்துள்ளனர். அதில், அவ்விரு சிறுவர்களையும் தடியால் அடித்து துன்புறுத்தியமை  தொடர்பில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன.

அதன்பின்னர், அப்பெண்ணை கைது செய்த பொலிஸார், அவ்விரு பிள்ளைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த  ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .