2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

13 வயது சிறுமி 60 பேரால் வன்புணர்வு

Editorial   / 2025 ஜனவரி 12 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 வயதான சிறுமி ஒருவர், 60 பேரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த 13 வயதான சசிறுமியை கடந்த 5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கேரள அரசின் குழந்தைகள் நலத்துறை சார்பில் வீடு வீடாக சென்று சிறுவர், சிறுமிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி கேரள குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் அண்மையில் பத்தினம்திட்டா பகுதியில் சிறுவர், சிறுமிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினர். அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது பின்தங்கிய பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த சிறுமியை, குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் சந்தித்து பேசினர். அந்த சிறுமி தனது 13 வயது முதல் சுமார் 5 ஆண்டுகள் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்து உள்ளனர். மனநல நிபுணர் உள்ளிட்டோர் சிறுமிக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து குழந்தைகள் நலத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவயது முதலே தடகள விளையாட்டு வீராங்கனையாக இருந்துள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர் சுபின், சிறுமியுடன் நெருங்கி பழகி உள்ளார். இவர் சிறுமியின் தந்தைக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.

சிறுமிக்கு 13 வயதானபோது சுபின் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோவில் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த நண்பர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி உள்ளன. இதை பார்த்த பலரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி படித்த பள்ளியை சேர்ந்த விளையாட்டு கல்வி ஆசிரியர்கள், சக விளையாட்டு வீரர்கள், சக மாணவர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தி உள்ளனர். சில நேரங்களில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

இந்த கொடூரம் தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பத்தினம்திட்டா மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்து உள்ளன. திருவனந்தபுரத்தை சேர்ந்த சிலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு கேரள குழந்தைகள் நலத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் 60-க்கும் மேற்பட்டோர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறாரும் உள்ளனர். தனிப்படை அமைக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 15 பேரை கைது செய்துள்ளோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவர்" என்று தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .