Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 07 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது. 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். உட்புற சாலைகளை பயன்படுத்தலாம் என சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை வரையிலும் நெரிசல் உணரப்பட்டது. மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.
நிகழ்வு முடிந்து நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலில் நகர்ந்து செல்ல முடியாமல் தடுமாறினர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாமல் திணறினர். அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர். சிந்தாதிரிப்பேட்டை யில் பைக் ஒன்று அதிக வெயில் மற்றும் இன்ஜின் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின. காவல், போக்குவரத்து, ரயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago