2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மோடிக்கு பிறந்த நாள்: வாழ்த்துகள் குவிகின்றன

Freelancer   / 2024 செப்டெம்பர் 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று 74ஆவது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நாடு முழுவதிலும் பா.ஜ., தொண்டர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்கள் மிகச்சிறந்த தலைமைப் பண்பின் மூலம் நாட்டின் வளத்தையும், கௌரவத்தையும் மேம்படுத்தியுள்ளீர்கள்”என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பிரபலமான பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். அயராத உழைப்பு, பக்தி மற்றும் தொலைநோக்கு பார்வையால் மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலகளவில் புதிய நற்பெயரையும் பெற்றுத் தந்த பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தமது வாழ்த்துச் செய்தியில், “வலிமையான, வளமான இந்தியாவுக்கான உங்களின் பார்வை ஒவ்வொரு இதயத்திலும் எதிரொலிக்கிறது. ஆற்றல்மிக்க தலைமையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நாட்டை மாற்றி அமைக்கவும், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவும் தொடரட்டும்” என்று கூறி உள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள வாழ்த்தில், “உங்களின் தலைமையின் கீழ் நாடு பொருளாதார வல்லரசாக மாறுகிறது. 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற உங்களின் எண்ணம் நிறைவேற சக்தி கிடைக்க வேண்டும். தங்களின் முயற்சிகளுக்கு மகாராஷ்டிரா துணை நிற்கும். நாட்டின் கேப்டனான உங்கள் தலைமையில் 21ஆம் நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டு” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோடி பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பா.ஜ., கட்சியினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், இரத்த தான முகாம்கள், பொது மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .