2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனைவியின் தொல்லையால் வீட்டைவிட்டு ஓடிய கணவர்

Editorial   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் கூட சண்டை போடுவார். எனது சுதந்திரத்தை முழுவதுமாக பறித்துக் கொண்டார். அவருடன் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னை சிறையில் வேண்டுமானால் கூட அடையுங்கள். ஆனால் அவருடன் சேர்த்துவைக்காதீர்கள்” என  கணவன் கெஞ்சியுள்ள சம்பவம், பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). மென்பொருள் பொறியாளரான இவ‌ர் அங்குள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டிலிருந்து கடந்த 4-ம் திகதி வெளியே சென்ற இவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, தனது கணவரை காணவில்லை என ஒயிட் ஃபீல்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முகேஷை யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை பொலிஸார் விசாரணையை தொடங்கினர். முகேஷின் செல்போன் எண் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க பொலிஸார் முயன்றனர். ஆனால், அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

  முகேஷ் தன்னுடைய செல்போனில் புதிய சிம் கார்டைப் பொருத்தி ஆக்டிவேட் செய்த நிலையில், அவர் நொய்டாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அவரைப் பிடிக்க நொய்டாவுக்கு சென்றனர். அங்குள்ள வணிக வளாகத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த முகேஷை பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

  அவரிடம் பொலிஸார் விசாரித்தபோது, “4 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. என் மனைவி ஏற்கெனவே விவாகரத்தானவர். அவருக்கு 12 வயதில் மகள் இருந்தபோதும், அதற்கு சம்மதம் தெரிவித்தேன். எங்களுக்கு அதன்பிறகு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு என் மனைவி என்னை மிகவும் கட்டுப்படுத்த தொடங்கினார். வீட்டில் சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் கூட சண்டை போடுவார். எனது சுதந்திரத்தை முழுவதுமாக பறித்துக் கொண்டார். அவருடன் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னை சிறையில் வேண்டுமானால் கூட அடையுங்கள். ஆனால் அவருடன் சேர்த்துவைக்காதீர்கள்” என முகேஷ் கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி பெங்களூரு அழைத்து வந்தனர். இருவருக்கும் மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டனர். இதற்கு முகேஷூம் அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், பொலிஸார் கவுன்சிலிங் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிவெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .