2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

இருளில் தள்ளும் அரசியலுக்கு ’பலியாகி விடாதீர்கள்’

Freelancer   / 2024 செப்டெம்பர் 19 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு பிள்ளையும் ஆங்கில மொழிப் புலமையைப் பெறுவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக " English for all" என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கல்வி அமைச்சராக தான், வெள்ளை அறிக்கை மூலம் இந்த பிரேரணையை கொண்டு வந்த போது அதற்கு எதிராக ஜே.வி.பி வீதியில் இறங்கியதை  நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டம் அன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று நாட்டில் ஆங்கில மொழி தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆங்கில மொழி அறிவு இன்மையால் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன? என இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். மல்வானை மக்களுடனான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

Gen Z தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி, வேலைத்திட்டங்களற்ற பொய்யான வாக்குறுதிகளுக்கு மட்டுப் படுத்தப்பட்ட சஜித் மற்றும் அநுரவின் அரசியல் நலன்களுக்கு இளைஞர்கள் பலியாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

நான் பிரதிநிதித்துவப்படுத்திய பியகம தொகுதிக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் மல்வானை மக்களை சந்திப்பதை நான் வழமையாகக் கொண்டிருந்தேன். மல்வானை மக்கள் எப்போதும் எனக்கு  பாரியளவு ஆதரவை வழங்கியுள்ளனர்.

அன்று மல்வானை மிகச் சிறியதொரு நகரம். வர்த்தக வலயம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மல்வானை ஒரு பாரிய நகரமாக மாறியது. இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மல்வானை வர்த்தகம் மற்றும் வர்த்தக வலயத்துடன் இணைந்து  இந்தப் பகுதியில் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 

2022 இல் பாரிய நெருக்கடியை சந்தித்தோம். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, மல்வானை வர்த்தக மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பொருட்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி இருக்கவில்லை. தற்போது அந்த நிலையிலிருந்து விடுபட்டுள்ளோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

நான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. பணத்தை அச்சிடவோ அல்லது கடன் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரூபா வலுவடைந்து, பொருட்களின் விலைகள் குறைந்து, நாடு நிலைபெறத் தொடங்கியது. இவை அனைத்தையும் மேற்கொள்ளும் அதே நேரம், குறைந்த வருமானம் பெறுவோருக்கு சமுர்த்தியை விட மும்மடங்கு  அதிகமாக பயன்களை அளிக்கும் “அஸ்வெசும”  திட்டத்தை செயல்படுத்தவும், அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக தற்போது உதய ஆர்.செனவிரத்ன குழுவின் அறிக்கையை அமுல்படுத்தவும் எம்மால் முடிந்தது என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .