2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

ஆளுநரின் சட்டவிரோத செயல்

Freelancer   / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

சட்டப் பிரிவு 200 இன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.

பிரிவு 200 இன்படி, முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.

அரசமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துறைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது.

10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, எனவே அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட திகதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X