2025 பெப்ரவரி 22, சனிக்கிழமை

அர்ச்சுனவுக்கு பேச அனுமதி வழங்க மறுப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 21 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபாகரன் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூடிய கருத்து தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி கருத்துக் கூற யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு எம்.பியான அர்ச்சுனா இராமநாதன் முயற்சித்த போதும், அவரின் கருத்தில் ஒழுங்குப் பிரச்சினை இல்லையென கூறி அவருக்கு அது தொடர்பில் தொடர்ந்தும் பேச அனுமதி வழங்கப்படவில்லை.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) வரவு - செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது ரோஹித அபேகுணவர்தன, 2006இல் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவிலாற்றை மூடி விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால் 2009இல் அவர் இறக்க நேரிட்டதாக குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அர்ச்சுணா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.

ரோஹித அபேகுணவர்தன தனது உரையில், 

“நாட்டில் விவசாயிகள் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தை அமைக்கவும், அரசாங்கத்தை வீட்டுக்கும் அனுப்பக்கூடியவர்களாக இருக்கின்றனர். 

“வரலாற்றை எடுத்துக்கொண்டால் 2006இல் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவிலாற்றை மூடி விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால் 2009இல் அவர் தனது இயக்கத்துடன் இறக்க வேண்டியேற்பட்டது. 

“அதேபோன்று கோட்டாபய ராஜபக்‌ஷ இரசாயன உரத்தை தடை செய்து ஒரே இரவில் சேதன உரத்தை பயன்படுத்த அறிவித்தார். இதனால் அவரின் ஆட்சியே இல்லாமல் போய் வீட்டுக்கு போக நேரிட்டது. இதனால் விவசாயிகளுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்தக் கருத்து தொடர்பில் சபையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி எழுந்த அர்ச்சுனா எம்.பி கூறுகையில்,

“நான் வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். இந்த இடத்தில் சில விடயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். இவர் எங்களின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் கதைத்தார். 2009இல் அவரை இல்லாமல் செய்ததாகவும் கூறினார். அப்படியிருக்கையில் ஏன் இன்று வரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை என்பதனை கூறுங்கள்” என்றார்.

இதன்போது எழுந்த அமைச்சர் வசந்த சமரசிங்க, “ஒழுங்குப் பிரச்சினை என்றால் என்ன என்று தெரியாமல் தேவையில்லாத விவாதத்தை உருவாக்குகின்றார்” என்றார்.

இவ்வேளையில் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்லவென” என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ரோஹித அபேகுணவர்தன எழுந்து கூறுகையில், 

“நான் ஒருபோதும் இவர்களின் தலைவர் என்று பிரபாகரனை கூறியதில்லை. அவரை எவரின் தலைவராகவும் எனக்கு கூற வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு பயங்கரவாதி, இன்று, நேற்று, நாளை என எப்போதும் அவர் பயங்கரவாதியே” என்றார்.

இதன்போது தொடர்ந்தும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப அர்ச்சுனா எம்.பி முயன்ற போதும், அதற்கு இடமளிக்காத பிரதி சபாநாயகர், மதியபோசனத்திற்காக சபையை 12.30 மணி முதல் ஒரு மணித்தியாலத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், 1.30 மணிக்கு மீண்டும் சபை கூடிய போது, மீண்டும் தனது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்ற அர்ச்சுனா எம்.பி முயற்சித்தார். 

இவ்வேளையில் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி குழுக்களின் தலைவர் ஹேமாலி வீரசேகர, “அதில் ஒழுங்குப் பிரச்சினை இல்லை. அது நிலையியல் கட்டளையை மீறுவதாகும்” என்றார்.

எனினும் தொடர்ந்தும் தனக்கு பேச அனுமதிக் கேட்ட அர்ச்சுனா எம்.பி, “நானொரு கட்சித் தலைவர், எனக்கு ஒரு நிமிடத்தை தாருங்கள், மற்றையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் நீங்கள் தமிழ் சிறுபான்மையினர் கேட்கும் போது நிலையியல் கட்டளையை பார்க்கின்றீர்கள். ஏன் இந்த நாட்டில் இவ்வாறு நடக்கின்றன” என்றார்.

ஆனால் அர்ச்சுனா எம்.பிக்கு தொடர்ந்தும் பேசுவதற்கு பிரதி குழுக்களின் தலைவர் அனுமதி வழங்கவில்லை.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X