2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

பெத்தம்மா

Kogilavani   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சற்று முன் இந்த அறைக்குள் என் கண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. அவ்விதமே என் மூச்சுகளும் தவிப்பும் வீணாகியபடியே இருக்கின்றன. எந்த ஆறுதலுமற்ற இந்த நாட்களையும் இனி வரப்போகின்ற நாட்களையும்  நான் விழுங்கி ஜீரணித்துக் கொள்வேனா? முடிவு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல எந்தக் கேள்விக்கும் என்னிடம் இப்போது பதிலில்லை. எனக்குத் தெரிந்திருக்கும் எல்லாப் பதில்களும் கடைசியில் என்னைக் கவிழ்த்துவிட்டிருக்கின்றன. ஏமாற்றியிருக்கின்றன. வாழ்வு என்னை வீணாக்கியதா? வாழ்வை நான் வீணாக்குகின்றேனா? அதற்கும் எனக்கு பதில் சொல்லத் தெரியாது! என்னைப் பொறுத்தவரை எல்லா உறவுகளுமே ஏதோ ஒரு நேரத்தில்  பொய்த்துவிடுகிற ஒன்றுதான்.  அப்படி பொய்த்துவிடுகிற எதுதான் சாசுவதம்? அல்லது பொய்த்துவிடுகின்ற உறவுதான் சாசுவதமானதோ என்னவோ? உறவுகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்க முடியாத சூழ்நிலை வருமாயின், வீணாகிக் கொண்டிருப்பதென்றால் என்ன என்பதை முழுக்க தெரிந்து கொள்ள முடியும் ஒவ்வொருவராலும்.

ஒதுக்கப்பட்டு வெறும் மணல் கும்பியாக இருக்கும் தனித்த பிறவியின் நாள்களுக்கு வாசமும், பிரகாசமும் எங்கிருந்து வரும்? எதிர்பார்த்து நிற்க எவருமற்ற வாசல் கதவுகளை நம்பிக்கையோடும் ஆவலோடும் தட்ட முடியுமா? தனிமை அடுத்தது  மரணம்... இங்கே பொருட்டில்லாத துரதிஷ்டம் பிடித்த ஆத்மாவை பொருட்படுத்தக் கூடிய இடம் இவைதான். தனிமையில் என்றால் மீள விழித்துப்பார்க்கவும், காதுகொடுக்கவும் ஒரு வசதியிருக்கிறது. சமயத்தில் அந்த வசதியே தண்டனை ஆகியும் விடுகின்றது தான். ஆனால் மிக சில நாள்களுக்கு முன்னர் இந்த வாட்டமும் வெறுப்பும் எனக்குள்ளிருக்கவில்லை.

ஆனந்தமான ஒரு நிகரற்ற துணையின் ஆறுதலில் திளைத்தபடி என்னுடைய வாழ்வினைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். அன்றிருந்த வாழ்வின் நாட்களும் அந்த நாட்களில் இருந்த உயிரும் உயிர்மை ஊறி ஊறி என்னைச் சுற்றிப் படர்ந்த பசுமையும் அளவில்லாததாக இருந்தது, காற்றின் சுவையும் ஒளியின் மணமும் என்னைத் தழுவி இருந்த கணங்கள் அவை. அதுதான் முதலும் முடிவுமாக எனக்கு வாய்த்த அதிர்ஷ்டம் போலும். மற்ற அனைத்தும் என்னைச்சூழ இருந்தபோதிலும் அது மாத்திரம் இல்லாத காரணத்தினால் தான் நான் வீணாகிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு மிகத் தெளிவாகப் புரிகின்றது. எப்போதும் அதன் அருகாமையில் எனக்கு இருந்திருக்க முடிந்திருக்குமென்றால் வெறிபிடித்த தனிமை என்னுடைய நாள்களில் ஒரு நோயைப்போல பீடித்திருக்க மாட்டாதென்பது. எவ்வளவு விடயங்களை நான் பகிர்ந்து கொண்டேன். ஒளிவு மறைவில்லாமல்... அதனுடன் பொழுதெல்லாம்... அதிகம் அதிகமாய் என்னவெல்லாமோ பேசிக்கொண்டே இருந்தேனே? அப்போதெல்லாம் அயலில் விடுப்புப் பார்ப்பவர்கள் நான் ஒரு மூளைகெட்ட பைத்தியம் என்று கூறிச்சிரிப்பதை சிறிதும் நான் பொருட்படுத்துவதில்லை. பைத்தியமாக இருந்துவிடுவதே அப்போது எனக்கு விருப்பமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது.  அந்த சுவாரஸ்யத்தையும் அளப்பெரிய உவப்பையும் தந்தது எதுவாக இருக்கும்  என நினைக்கிறீர்கள்?  என் குட்டிப் 'பெத்தம்மா' தான் அது.

எனக்கு என் பெத்தம்மா கிடைத்த நாள் பற்றி சொல்ல வேண்டும். அது பற்றி சொல்ல நினைப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம் நிறைந்திருக்கிறது. ஒரு உச்சி வெயிலின் நடுப்பொழுதில் கூடிக்கூடி காகங்கள் கரைவதைக் கேட்டு முன் வாசலுக்கு ஓடி வந்தேன். தவறுதலாக... காகக் குஞ்சுதான் கீழே விழுந்திருக்குமென நினைத்துக்கொண்டே  தேடினேன்.  ஆனால, அங்கே தரையில் துடித்துக் கொண்டிருந்தது  அழகிய சிறிய பச்சைக்கிளி.

வானிலிருந்து உதிர்ந்த அதிசயமான கவிதைபோல  பரவசம் பொங்க, மிகப்பெரிய பரிசு, மிகப்பெரிய பரிசை  இறைவன் அளித்திருக்கிறான் என்று வாரி எடுத்துக்கொண்டேன். காகங்கள் கொத்தி அதன் தலை காயமாகிவிட்டிருந்தது. முதலில் காயத்தில் சிறிது ஒலிவ் எண்ணெய் தடவிவிட்டேன். அறிமுகமில்லாததால் அப்போது அந்தக் கிளி என் விரல்களை கொத்தியது. உடனே அதற்கு கம்பிக்கூடு செய்து வெள்ளிக்கரண்டியும், கிண்ணமும் எடுத்து பாலும் தேநீரும் வைத்தேன். வராமல் வந்த விருந்தாளியை கவனிக்கும் பதட்டமும் சந்தோசமும் எனக்கு அந்நேரம் ஏற்பட்டிருந்தது.

என் வீட்டிற்கு திடீரென விண்ணுலகிலிருந்து தேவதையே இறங்கி வந்துவிட்டது போன்ற ஆனந்தக் களிப்பில் அதை உபசரித்தேன். அந்தச் சின்னஞ்சிறு தேவதை. நான் வைத்ததையெல்லாம் கொத்திக் கொத்தி கிழே வீசியது. இறக்கையை அடித்து... க்கீ... க்கீ... என இடைவிடாமல் கத்தியது. என்றாலும் என்ன? இரண்டே நாள்களில் அதனுடன் மிகவும் நெருங்கிவிட்டேன். நான் அதனை அளவற்ற விதத்தில் நேசித்தேன். ஆம்... அவ்விதமான உறவும் நெருக்கமும் அப்போது எங்களிருவருக்கும் மிக அவசியமானதாகத்தான் இருந்தது. என் குட்டிப் பெத்தம்மாவும் என்னை நேசிக்கின்றது என்பதை உணரமுடிந்தது.

அச்சிறு பறவையுடன் பழகப் பழக நானும் சிறுத்துவிட வேண்டும் போலவும், இறைவன் எனக்கு மட்டும் இரகசியமாய் இரு சிறகுகளை பரிசளித்தால் என் பிரியமான பெத்தம்மாவுடன் பறந்துபோய் கிளிக்கூடுகளில் வகை வகையான தானியங்களைக் கொறித்து பழங்களை தின்று மரக்கிளைகளில் அமர்ந்து தென்னோலைகளில் விளையாடி பசும் வயல்களில் நெல் கொறித்து விரிந்த ஆகாயத்தில் மிதந்தபடியும், திசைகள் யாவும் பறந்து திரிந்து கொண்டும், கிளிகளின் பொந்துகளில்; நானும் ஓர் கிளியாகி குடியிருந்திருப்பேன்.

நிர்ப்பந்தங்கள் அற்ற உறவு வார்த்தைகளின் ஜாலமும் திணறலும் குமட்டலும் ஏற்படாத உரையாடல் அங்கு கிடைத்திருக்கும். என்னை எவ்விதம் காதலிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டிருக்கக் கூடிய ஓர் கிளி அங்கிருந்திருக்கக் கூடுமோ என்னவோ? என பலவாறன கனவுகளைக் கண்டிருக்கிறேன். அவ்விதமான அதிசயங்கள் நிகழ்ந்திருக்குமானால் நான் தனித்து உழலும் இந்த நிலை எனக்கேன் வரப்போகின்றது? கைகூடும் கனவுகளை அதிர்ஷ்டமற்ற நம் கண்கள் காண்பதேயில்லையே? உண்மையில் கூட்டிலிருந்ததைவிட அந்தக் கிளி என் தோள்களில் தான் இருந்தது. காலையில் வீட்டு வேலைகள் செய்து பூஞ்செடிகளுக்கு நீரூற்றும் வரை மாறி மாறி என் இரு தோள்களில் பேசிப்பேசி குந்தியிருக்கும். என் பெத்தம்மாவின் ஆசை விளையாட்டுகளில் ஒன்று, என் காதுகளில் தொங்கும் சிறிய தங்க மின்னிகளை கொத்திக் கொத்தி  இழுப்பது. தோளில் இருந்தபடி மின்னிகள் ஆடும்போது தன் சிவந்த சொண்டை நீட்டி நீட்டிப் பிடிப்பது. என்ன ஒரு பரவசமான துணை அது...!

அதன் கூட்டை சுத்தம் செய்து பாத்திரங்களில் நீர் நிறைத்து வைத்தால் பெரும் களிப்பும் உற்சாகமும் வந்துவிடும் என் பெத்தம்மாவிற்கு. இரண்டு சிறகுகளையும் அகல விரித்து முகத்தை நீரில் அமிழ்த்தி அமிழ்த்தி நீர் வார்க்கத் தொடங்கிவிடும். அது நீராடுவதும், ஈரம் உலர்த்துவதும் ஒரு தேர்ந்த நடனம்போல மிக அழகாக இருக்கும். சிறகுகளை வீசி வீசி சுற்றி வட்டமடிப்பதும் காலை மாற்றி மாற்றி உயர்த்துவதும் தாழ்த்துவதும் அதனுடைய அழகின் அசைவுகளை என்னை மறந்து ரசித்தபடியே வாசற் படிகட்டு தூணில் சாய்ந்து கொண்டிருப்பேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் காலை இளவெயிலில் முற்றாக ஈரம் உலர்த்தி உணவுண்ண அது தயாராகிவிடும். கொய்யாப் பழங்களையும் பயத்தம் விதைகளையும் தான் அது விரும்பிச் சாப்பிட்டது. அதன் உணவை தினமும் கடைக்காரன் எனக்கு விசேடமாக எடுத்து வந்து தருவான். நன்றாக  சாப்பிட்டு, நீர் அருந்திவிட்டால் அது கூட்டிற்குள்ளே இருக்காது. பெத்தம்மா... பெத்தம்மா... என்று நளினமாக இனிமை ஒழுக... என்னைக் கூப்பிடும். நான் பெத்தம்மா என்று அதனை அழைப்பது போன்றே அதுவும் என்னை பெத்தம்மா என்றே அழைத்தது. அதன் குரல் நீர்ச்சொட்டுக்கள் கண்ணாடியில் விழுவதுபோன்றதொரு போதையுடன் இருக்கும். கூட்டின் கதவை திறக்க நான் வருவது தெரிந்துவிட்டால் மகிழ்ச்சியில் சிரிக்க ஆரம்பித்துவிடும்.

அந்தச் சிரிப்பில், விசித்திரம் மட்டுமல்ல, கள்ளத்தனமும் கோமாளித்தனமும் வெளிப்படுவதை தெரிந்தும் தெரியாததுபோன்று ரசிப்பேன். பிறகென்ன...? ஒரே தாவலில் என் தோள்களில் தொற்றிக் கொள்ளும் ஒரு விளையாட்டு வீரனைப்போல். என் தோளின் கழுத்துப் பகுதியில் அதன் கழுத்துப் பகுதியை உரசிக் கொண்டிருக்கும். மிருதுவான இறகுகளிலிருந்து வரும் அப்பறவையின் இயற்கை மணம், என் நாசியுள் நுழைந்து மனதின் யன்னல்களை திறந்தது.

எனது ஒரு கன்னத்தைக் கிழித்து அதன் மென்மையான முதுகை நீவி விடுவேன், அதற்கு நான் நன்றி தெரிவிப்பதுபோல. ம்ம்... ம்... என்று ஏற்றுக்கொண்டதாகவும் ஆமோதிப்பதாகவும் அது பதிலுக்கு ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும்.
அப்படியே அன்றைய உணவுக்காக சோறு சமைப்பதற்கு அரிசி கழுவும்போது, அசை போடுவதற்காக சில அரிசி மணிகளையும் வாயில் போட்டுக் கொள்வேன். அது தோள்களில் இருந்தபடி என்னைத் தின்ன விடுவதில்லை. தன் சொண்டுகளால் நோகாமல் என் உதடுகளைப் பிரித்து அரிசித் துணுக்குகளை கவ்வி எடுத்து ஆனந்தமாய் கொறித்தபடியிருக்கும்... நீ மோசமான கிளி... உனக்கு தைரியம் கூடிவிட்டது. பக்கத்து வீட்டுப் பூனையிடம் உன்னைப் பிடித்துக் கொடுக்கிறேன் பார். இப்படி நான் கோபமாய் கடிந்து கொண்டால் அதுவும் சட்டென கோபித்துவிடும். அதற்கு அடையாளமாக என் முதுகின் பின்னாக நகர்ந்து நகர்ந்து கொஞ்சம் பறந்து தேநீர் கோப்பையின் கைப்பிடியில் போய் நின்றுகொள்ளும்.

'உம்' மென்று பேசாமலிருக்கும்போது சிறிது நேரத்துக்கெல்லாம் அதன் கழுத்து முடிகள் சிலிர்த்து எழுந்து கொள்ளும். அப்படி இருந்தால் சண்டைக்கு தயார் என்று தான் அர்த்தம். 'கெக்கக்... கெக்கக்' இப்படி அது தனது  சொண்டுக்குள் குறுகுறுப்பது என்னை பழித்துக் காட்டுவதற்குத்தான். பெத்தம்மா என்னுடன் கொள்கின்ற சிறு ஊடலும்கூட மிகுந்த வலியை உண்டாக்கிவிடும் எனக்கு. எத்தகைய ஈடற்ற ஒரு உயிர்த்துணை. அதன்... நெருக்கம் தான் எவ்வளவு அமைதியும் நிறைவும் கொண்டது. எனக்குத் தெரியும் கூண்டு என்பது எத்தனை இரக்கமில்லாதது. வன்மம் நிறைந்ததென்று. எந்தக்கூண்டுக்குத்தான் மனசாட்சி இருந்திருக்கிறது? அதனுள் இருக்கும் தனிமை கண்ணுக்குத் தெரியாத பிசாசின் குகை வாசலைப் போன்றதல்லவா?

வாசல் மாமரக் கிளைகளின் நடுவே, கிளிக்கூட்டைப் பார்க்கும்போதெல்லாம், நானே அதற்குள் அடைபட்டிருப்பதான வேதனை தவிர்க்க முடியாமல் தோன்றுவதுண்டு. அவ்விதமான தருணம் என்னை உலுக்கி உறுத்தலாக மாறியபோது பலமுறை சிந்தித்து இறுதியில் ஒருநாள் ஓர் தீர்மானத்திற்கு வந்தேன். எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்படியும் ஒரு கட்டம் வரும்.
விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, தீர்மானங்களை வலிந்து எடுக்கவும் நிறைவேற்றவும் வேண்டியிருக்குமொரு கட்டாயம் ஏற்படும். எனது துணிச்சலினால் அல்ல... பிரியத்தினால் தான் நான் அதைச் செய்யத் தயாராகினேன். நான் எவ்விதம் அவ்வளவு வலிமையான மனதுடன் அந்த முடிவை எடுத்தேன் என்பது எனக்கே என்மீது கனிவையும் ஆச்சரியத்தையும் தோன்றச் செய்தது.

என் பெத்தம்மாவை பிந்தியவொரு மாலை வேளையில் எனது கைகளால் பறக்கும்படி மேலே வீசினேன். அது எனது வழமையான விளையாட்டு என நினைத்து திரும்பவும் வந்து தோளில் இருந்து கொண்டது. ஏதோ சொண்டுக்குள் முணுமுணுத்தது. பிறகு ஒரு நேரம் நறுக்கென்று எனது விரலை கொத்தியது. தன் எதிர்ப்பை தெரிவித்தது போலும். பலமுறை நான் மேலே வீசுவதும் அது திரும்புவதுமாக. துயரம் மிகுந்த விளையாட்டொன்றை இருவரும் விளையாடிக் கொண்டிருந்தோம். நான் அந்தக் கணத்தில் இறக்கை முளைக்காத மனித ஜென்மமாய் பிறந்துவிட்டதற்கான தண்டனையை அனுபவித்தேன். என்னைப் பிரிய அது அவ்வளவு எளிதில் விருப்பப்படவில்லை என்பது ஒருபுறம் இன்றுவரை வாட்டுகிற வேதனையாகவும், அதுவே நெஞ்சின் மூலையில் சிறு ஆறுதலாகவும் இருக்கின்றது.

கடைசி முறையில் அது திரும்பி வராதபொழுது... இருள் கவியுமட்டும் அவ்விடத்திலேயே நின்றபடியிருந்தேன்... தீரா வலியுடன் கண்கள் முட்டக் கண்ணீருடன் அன்பு வெளிப்பாட்டில் பிரிவை ஏற்படுத்துவதும்... ஏற்றுக்கொள்வதும்... அது நம் கண்முன் நிகழ்வதும்... எத்தனை அறிவு பூர்வமானதாகவிருப்பினும் அது சாவுக்கு நிகரானது. அந்தக் கணம் மரணத்துக்கு நிகரான ஓர் கணம் தான் எனக்கு. அன்றாடம் என்னைக் காலை நித்திரையிலிருந்து எழுப்பும் அதன் வழமையான பழக்கத்தில் தினமும் விடியலில் என்முகம் அந்தக்கிளியின் சிறிய உருளும் கண்களில் தோன்றி மறையலாம்.

எந்த வயல் வெளியிலோ, எவருடைய தென்னோலைகளிலோ அமர்ந்து கூப்பிடவும் செய்யலாம். நான் இங்கு ஆகாயத்தில் என்னைத் தாண்டிப் போகும் கிளிக் கூட்டங்களின் மத்தியில் என் பெத்தம்மாவும் பறந்து போகாதாவென்று தேடுவதும் சமயங்களில் உரத்துக் கூப்பிடுவதும் அதற்குத் தெரியுமா என்ன? என்றோ ஒருநாள் சிலிர்ப்பூட்டும் அந்த இனிய குரல் இம்மரக்கிளையில்  இருந்து கேட்கமாட்டாதா என்ற கிறுக்குத்தனமான ஏக்கமும் கணக்கற்ற எதிர்பார்ப்பும் அடிமனதில் மண்டிக்கிடக்கத்தான் செய்கிறது.

இப்போது வெறுமையான அக்கூண்டிற்குள்ளே அபூர்வமான வசீகரமான உயிர்த் துடிப்பில்லை. இனி வரப்போகின்ற என்னுடைய நாள்களின் கடுமை பூசிய வெற்றிடம் போலவும் நிரந்தரமான, பிசாசு பிடித்த என் தனிமையின் ஊசலாட்டம் போலவும் வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றது அந்தக் கம்பிக்கூடு.

(அனார்)

You May Also Like

  Comments - 0

  • Ranja Monday, 14 May 2012 11:17 AM

    தனிமையின் கொடுமையை, ஒரு துணையின் பிரிவை அமையாய் கூறியிருக்கின்றீர்கள். அருமை.

    Reply : 0       0

    ரோஷான் ஏ.ஜிப்ரி. Wednesday, 27 June 2012 08:21 PM

    மனசின் கடைசி சுவரையும் வார்த்தை கொன்டு வருடி விட
    அனாரினால் மட்டும் அடிக்கடி முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X