Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 பெப்ரவரி 12 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.
இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது.
இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது நேரடியான பங்கேற்பு முதல், மனதளவிலான ஆதரவு வரைப் பலதரப்பட்டதாக இருந்தது. இது மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இப்போது எம்முன், பல கேள்விகள் உள்ளன. இதை எவ்வாறு தக்கவைப்பது?இதற்கான வேலைத்திட்டம் என்ன? இதை யார் முன்னெடுக்கப் போகிறார்கள்? இலங்கையில் ஜனநாயகத்தையும் சமூகநீதியையும் தக்கவைப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதை முன்னகர்த்துவதா, இல்லையா?
இக்கேள்விகளுக்கான பதிலை, ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை, பேரணியின் பிரகடனத்தில் இருந்து தேடித் தொடங்கலாம். அவ்வறிக்கை, அடிப்படையில் மூன்று விடயங்களைச் சொல்கிறது.
முதலாவது, தமிழருக்கான நீதியைச் சர்வதேச சமூகத்திடம் கோருவது.
இரண்டாவது, தமிழரின் உடனடியான பிரச்சினைகளைத் தீர்க்க, அரசிடம் கோருவது.
மூன்றாவது, மலையகத் தமிழரதும் முஸ்லிம்களதும் பிரச்சினைகளுக்கான தீர்வை, அரசிடம் கோருதல்.
இந்தப் பிரகடனத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அடுத்து, என்ன செய்வது போன்ற எதுவும் இல்லை. இது புதிதல்ல; தனிநாடுதான் தீர்வு என்று, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நிறைவேற்றிய பின்னர், அதை வெல்வதற்கான வழி என்ன என்ற கேள்விக்கு, “அது இரகசியம்” என உரைத்த கதையை நாமறிவோம்.
எனவே, திட்டமில்லாத, நீண்ட முன்னோக்கு இல்லாத குறுகியகால அரசியல் நலன்களுக்காகவும் திசைதிருப்பல்களுக்காகவும் உருவாக்கப்படும் உணர்ச்சிப் பேச்சுகளும் வீராவேசமும் எமக்கு அழிவையே தந்திருக்கின்றன.
இந்த P2P போராட்டம், நீண்ட திட்டமிடலோ, மக்களுடனான கலந்துரையாடலோ இன்றித் தொடங்கப்பட்டது. இன்று, அதை மக்கள் போராட்டம் என்று சொல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மக்களுடன் பேசாமலேயே இதைத் தொடங்கினார்கள்.இதற்கான மக்கள் திரளைச் சேர்க்கும் திட்டம், அவர்களிடம் இருந்திருக்கவில்லை.
தமிழ் மக்களின் உரிமைக் குரலுக்கான போராட்டத்துக்கு, மக்கள் தன்னெழுச்சியாக ஆதரவு தந்தார்களேயன்றி, போராட்ட ஒழுங்கமைப்பாளர்களால், மக்களின் பங்கேற்புக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. இது கவலைக்குரியது. ‘முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம்; நீங்கள், எங்கள் பின்னே வாருங்கள்’ என்பதுதான், தமிழ்த் தேசிய அரசியல் செல்நெறியாக இருந்தது. இது இராமநாதனில் இருந்து, இன்றுவரையும் தொடர்வது அவலம்.
இலங்கையினதும் ஏனைய மூன்றாம் உலக நாடுகளினதும் வரலாற்றைக் கூர்மையாக அவதானித்தால், ‘சிவில் சமூகம்’ எனும் அடையாளத்தில், மக்கள் சார்பாகப் பேசும் புதிய பிரமுகர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மாற்றாக, மக்கள் எவ்வகையிலும் தெரிவுசெய்யாத அலுவலர்களும் முகவர்களும் தங்களைச் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக நிலைநாட்ட முயலுகின்றனர்.
இவர்கள் இரண்டு பணிகளைச் செவ்வனே செய்கிறார்கள். அதில் பிரதானமானது, அயலார் நிகழ்ச்சி நிரலை உள்ளூர் மயமாக்குவதன் மூலம், நல்ல சேவகர்களாக இருப்பது.
இரண்டாவது, போராட்டங்களை அரசியல்நீக்கம் செய்வது. இதன்மூலம், வெகுஜன ஜனநாயக நோக்கில், மக்களின் அடிப்படையிலான வெகுஜன நலன் பேணும் அமைப்புகள் உருவாகாமல், இவை பார்த்துக் கொள்கின்றன. இவை, நாம் சிந்திக்க வேண்டிய விடயங்கள்.
P2P பிரகடனம் தொடக்கத்திலேயே, தமிழரின் சுயநிர்ணயம் பற்றிப் பேசுகிறது. இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களான, முஸ்லிம்களினதும் மலையகத் தமிழரினதும் சுயநிர்ணய உரிமையை, நாம் ஏற்றுக் கொள்கிறோமா?
இப்பிரகடனம், தமிழர் தேசம், சிங்கள தேசம் என்று இரண்டு சொல்லாடல்களுக்குள் இயங்குகிறது. இந்தச் சொல்லாடலே, அடிப்படையில் ஏனைய சிறுபான்மையினரின் உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கிறது.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை முழுமையாக நோக்கின், அதை வெறுமே சிங்கள, தமிழ்த் தேசிய இனங்களின் பிரச்சினையாக நோக்குவது, பிரச்சினையின் ஒரு பகுதியையே தீர்க்கும். எனவே, தொடர்ச்சியான பெரிய நிலப்பரப்பொன்றுக்கு உரிமைகோரக் கூடிய சிங்கள, தமிழ்த் தேசிய இனங்கள் மட்டுமன்றி, தமக்கெனத் தொடர்ச்சியான பெருநிலப்பரப்பற்ற போதும், பொதுவான மொழி, பண்பாட்டு, அரசியல் வரலாற்றுப் பொதுமைகளையுடைய முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தையும் சுயாட்சியையும் ஏற்றல் என்ற அடிப்படையில் மட்டுமே, தேசிய இனப் பிரச்சினைக்கு, நிலைக்கக் கூடிய, நல்ல தீர்வொன்றைக் காண இயலும்.
தேசிய இனப் பிரச்சனையின் தீர்வு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மேலும், சுயநிர்ணய உரிமை எனும் நியதி, அதன் முழு மெய்ப்பொருளில், பிற தேசிய சிறு பான்மையினரது அபிலாஷைகளைக் கையாள்வதற்கும் பயன்பட வேண்டும். இதை, இந்தப் பிரகடனம் செய்யத் தவறியுள்ளது.
எமது பிரச்சினைகளை மற்றவர்கள் விளங்க வேண்டும்; ஆதரவு தரவேண்டும் என்று நினைப்போர், மற்றவர்களின் பிரச்சினைகளையும் விளங்க வேண்டும்; ஆதரவு தரவேண்டும். ஈழத்தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் இடையிலான உறவு, ‘ஈவோருக்கும் இரப்போருக்கும்’ இடையிலான உறவாக இருக்க முடியாது. ஒரு தேசியவாத அகங்காரத்துக்கு, எதிரான இன்னொரு தேசியவாத அகங்காரம் ஆபத்தானது.
இப்போராட்டம் தொடங்கிய வேளையில், ஒருபகுதி மக்கள் இப்போராட்டத்தின் கோசமாக, இலங்கையின் வடபுலத்து மீனவர்களின் நலன்கள் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரினர். இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய மீன்பிடி, வடபுலத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டினர். ஆனால், அக்கோரிக்கை மறுக்கப்பட்டது. அக்கோரிக்கை மிகவும் நியாயமானது. இது, யாருடைய நலன்களை முன்னிறுத்தி, நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்ற வினாவை எழுப்புகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களாக, ஏகாதிபத்திய மீளெழுச்சியைக் கொண்டதொரு சர்வதேசப் பின்னணியில், தவறாகக் கையாளப்பட்ட இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை, போராக வக்கிர வளர்ச்சி பெற்றது. மோதலின் இரு தரப்பிலும் இருந்தோரில் பெரும்பாலானோர் அறியாமலே அந்நியக் குறுக்கீடுகள் தொடர்ந்தன.
கொலனிய யுகத்திலும் பின்னரும், மோதல்களின் போது, அயல்தரப்புகள் ஓர் இனக் குழுவுக்கோ, இன்னொன்றுக்கோ சார்பாக நின்றதாகத் தோன்றினாலும், அவர்களது குறுக்கீடு இலங்கையினதோ, எந்தத் தேசிய இனத்தினதோ நலனுக்கானதல்ல. இந்திய மேலாதிக்கச் சக்திகளது நடத்தையும் அத்தகையதே.
தேசிய இன ஒடுக்கலின் தீவிரமாதலை அடுத்து, இந்தியாவும் மேற்குலகும் பல்வேறு தருணங்களில் தமிழ்த் தேசியவாத நோக்கங்களை ஆதரிப்பது போன்று, தோற்றம் காட்டியுள்ளன. ஆயினும் தமது மேலாதிக்க நலன்களுக்கு உதவியான முறையில், துரிதமாகக் தரப்பையும் அனுதாபங்களையும் மாற்றியுள்ளன.
விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாக முறியடிப்பதில், இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் நிற்பதென இந்தியாவும் மேற்குலகும் முடிவெடுத்ததை உணர்ந்த பின்னரும், தமிழரையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் காப்பாற்ற, மேற்குலகோ இந்தியாவோ குறுக்கிடும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு, வலுவான நம்பிக்கை, போரின் இறுதி மாதங்களில், பல தமிழ்த் தேசியவாதிகளிடம் இருந்தது. வருந்தத்தக்கவாறு, கடந்த சில ஆண்டுகளின் கசப்பான அனுபவங்களின் பின்னரும், அதே போக்கு நிலைக்கிறது.
இலங்கை பயங்கரமானதொரு பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்குகிறது. இன்று, அந்நியக் கடனிலேயே இலங்கை காலம் கடத்துகிறது. கடனுக்கான விதிப்புகளும் நிபந்தனைகளும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கேடானவை. இது தொடர்பிலேயே, அந்நியத் தலையீட்டுக்காரர், தமக்கு வாய்ப்பாகவும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் தீங்காகவும், தேசிய இனப் பிரச்சினையை மீண்டும் பயன்படுத்தாதவாறு, தேசிய இனப் பிரச்சினை, புதிய பார்வையில் நோக்கப்பட வேண்டும்.
P2P போராட்டத்துக்கான ஏகோபித்த ஆதரவு மூலம், மக்கள் ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார்கள். அதேவேளை, தத்தம் நிகழ்ச்சி நிரல்களை மீண்டுமொரு மக்களின் பெயரால், செய்து முடிப்பதற்கு நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது, இன்று இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற அனைத்து சிறுபான்மையினங்களையும் பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுதிரட்டி, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களேயன்றி, அரசியல் தலைமைகளோ சிவில் சமூகமோ அல்ல.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago