Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 மே 07 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1977 தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே. 1970இல் ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இழைத்த தவறுகள் இவ்வாறானதொரு பாரிய வெற்றியை ஜே.ஆருக்குப் பெற்றுக் கொடுத்தன. ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியானது.
இந்த மாபெரும் வெற்றி ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது என்பதை மறுப்பதற்கில்லை. இங்கு இரண்டு விடயங்களை நோக்கவேண்டும்.
முதலாவது, தெற்கில் வாழ்ந்த தமிழரிடையே தமிழர் விடுதலைக் கூட்டணியினது மறைமுக ஆதரவை ஜ.தே.க பெற்றுக் கொண்டது. அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியும் பலமாக அமைந்தது.
இவை வரலாறு காணாத ஒரு தேர்தல் வெற்றியை ஜ.தே.கவுக்கு வழங்கின. தேர்தலுக்காக சில முக்கிய விடயங்களை ஜ.தே.க மேற்கொண்டது. ஜே.ஆர். ஜயவர்த்தன இக்காலப்பகுதியில் ஸ்ரீ.ல.சு. கட்சியிலிருந்து பிரிந்த றொனி டி மெல் மூலம் சிறையிலிருந்த ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீரவுடனும் சில இரகசிய உடன்பாடுகளைச் செய்தார்.
தேர்தலில் வென்றால் 1971 கிளர்ச்சியின் தொடர்பில் சிறைக்கு அனுப்பப்பட்ட ஜே.வி.பியினரை விடுவிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டது.
இவ்வாறான பல இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டமை பின்னர் தெரிய வந்தது.
இரண்டாவது, ஆட்சியில் இருந்த இடதுசாரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியில் ஏற்பட்ட பிளவு மிகவும் கசப்பானதாக இருந்தது. தேர்தலில் கூட்டணி அமையவில்லை.
1970இல் ஆட்சியமைத்த கூட்டணிக்கட்சிகள் தனித்தனியாகப் போரிட்டன் தேர்தலில் அக்கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கின. இது ஜ.தே.கவுக்கு ஏகோபித்த பெரும்பான்மையைத் தடுப்பதில் முக்கிய பங்களித்தது. அதேவேளை இரண்டாண்டுகள் பிற்போடாமல் 1975இலேயே தேர்தலை நடத்தியிருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும்.
1977 ஆம் ஆண்டளவில், மூன்றாமுலக நாடுகளில் நம்பிக்கைக்குரிய நாடாகக் கருதப்பட்ட இலங்கை ஏமாற்றமளித்தது. அதன் பொருளாதாரம் பல ஆசிய நாடுகளை விடப் பின்தங்கியிருந்தது. அதன் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. நிலைமைகள் மோசமடைந்ததால் அரசு மேலும் எதேச்சதிகாரமாக மாறியது.
1977 தேர்தல் இடதுசாரிகள் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டதையும், தமிழ் வாக்காளர்கள் போர்க்குணமிக்க பிரிவினைவாதிகளை விடப் பாராளுமன்ற தமிழ் தலைமையைப் பெருமளவில் தேர்ந்தெடுத்ததையும் பழமைவாதக் கட்சியான ஜ.தே.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதையும் உறுதி செய்தது. 1979 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் பெற்ற அமோக வெற்றி அதன் ஆணையை உறுதிப்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதி ஜெயவர்த்தன, நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல், மேலும் சர்வாதிகாரமாக மாறி, நாட்டை உள்நாட்டுப் போருக்கு வழிநடத்தினார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கி, நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகத் தன்னை நிறுவிக் கொண்டபோதும் அவரால் வெகுஜனத் தலைவராக உருவெடுக்க இயலவில்லை.
ஜெயவர்த்தனா அதிகாரத்துக்கு வந்தபோது அவருக்கு வயது 70. பல இளைய அரசியல்வாதிகள் அவரது வாரிசாகப் போட்டியிட்டனர், சிங்கள பௌத்த தேசியவாதத்தில் செல்வந்த கோவிகம உயரடுக்கின் மேலாதிக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனோநிலை சிங்களப்
பெரும்பான்மை சமூகத்தில் உள்ளது.
அந்த வாக்குவங்கியையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் அறுவடை செய்து வந்தது. இந்த வாக்குவங்கியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட அதிகமான அளவில் ஜெயவர்தன பயன்படுத்த முயன்றார்.
கொவிகம அல்லாதவர்களின் ஆதரவைக் கோருவதன் மூலம் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க அவர் முயன்றார். தொழில்துறை அமைச்சரான சிரில் மேத்யூ, வ{ஹம்புர சாதியில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்தார்.
மேத்யூ மற்றும் பிற வஹம்புர சாதித் தலைவர்கள் கொவிகமவிற்கு வழங்கியதை விட உயர்ந்த அந்தஸ்தைக் கோரினர், ஏனெனில், வஹம்புர சாதியைச் சேர்ந்த எவரும் கிறிஸ்தவத்திற்கு மாறவில்லை என்பது அவர்களது வாதமாகும். தனது இருப்புக்கான வஹம்புர சாதியச் செல்வாக்கை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்த சிரில் மேத்யூவிற்கு அரசாங்கத்தில் முக்கிய இடம் வழங்கினார்.
1981 மற்றும் 1983இல் தமிழருக்கெதிரான வன்முறையில் மேத்யூவின் இடம் முதன்மையானது. சிரில் மேத்யூ, ஜே.ஆர். வேண்டியதைச் செய்தார், அதேவேளை, வஹம்புர சமூகத்தின் முழுமையான ஆதரவை ஜே.ஆருக்குப் பெற்றுக் கொடுத்தார். வஹம்புர சாதியினரின் ஆதரவைத் தக்க வைத்த நிலையில் 1986 இல் சிரில் மேத்யூ பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியில் அடுத்த தலைவராகவும் மக்கள் ஆதரவுள்ளவராகவும் ரணசிங்க பிரேமதாசா விளங்கினார். எனவே அவரைப் புறந்தள்ள இயலவில்லை. அதேவேளை, அவருக்குப் பதவி வழங்குவதன் மூலம் சாதிய அடுக்கில் கீழ் உள்ள மக்களின் ஆதரவைத் தன்பக்கம் திருப்பலாம் என அவர் கணித்தார். அவர் பிரேமதாசாவை பாராளுமன்றில் சபையின் தலைவராகவும் உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சராகவும் ஆக்கினார்.
1978இல் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஜயவர்தன ஜனாதிபதியானபோது, பிரேமதாச பிரதமரானார்.
இதன்மூலம் கட்சியின் பிரதித் தலைவராக பிரேமதாச உருவெடுத்தார். அதுலத்முதலி அல்லது திஸாநாயக்கவை விட பிரேமதாசவை அரசாங்கத்தின் பிரதித் தலைவராக நியமிப்பதை கோவிகம அரசியல்வாதிகள் எதிர்த்தனர்.
இவ்வாறு உள் முரண்பாடுகள் முற்றியதாகவே அரசாங்கம் இருந்தது. அரசாங்கம் முன்னெடுத்த திறந்த பொருளாதாரக் கொள்கை உள்ளூர் வியாபாரிகளைப் பாதித்தது. சிறு கைத்தொழில்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் பாரிய சவால்களை எதிர்நோக்கினர். இதைத் திசைதிருப்ப இன முரண்பாடு எனும் ஆயுதத்தை ஜே.ஆர் கையிலெடுத்தார். அதன் முதலாவது கண்ணியைத் தனது புதிய அரசியலமைப்பின் வழியாக அறிமுகப்படுத்தினார்.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு பௌத்தத்திற்கு “முதன்மை இடத்தை” வழங்கியது. சிங்களத்தை மட்டும் “உத்தியோகபூர்வ” மொழியாக அங்கீகரித்தது. 1972 அரசியலமைப்பு “பௌத்த மதத்தை” அரசு வளர்க்க வேண்டும் என்று கோரியது, ஆனால் 1978 அரசியலமைப்பு “புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது” என்றது. 1978 அரசியலமைப்பு 1972 இல் “இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு” என்று சொல்லப்பட்டிருப்பதை மீள வலியுறுத்தியது. இதன்மூலம் அரசாங்கம் எதுவித அதிகாரப் பகிர்வுக்கும் தயாரில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
பாராளுமன்றில் கிடைத்த அமோக பெரும்பான்மை சிங்களப் பெருந்தேசிய அகங்காரமாக தன்னை வெளிக்காட்டத் தொடங்கியது. 1977 தேர்தல்களையடுத்து தமிழர்கள் மீது நிகழ்ந்த வன்முறை இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. தமிழ் இளைஞர்களின் எழுச்சியைத் ஒடுக்குவதன் மூலமும் பொருளாதார தாராளமயமாக்கல் மூலமும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம் என ஜே.ஆர் நினைத்தார்.
இனப்பிரச்சனையை ஏற்றுக்கொள்ளவோரூபவ் தமிழர்களுக்கான நியாயமான நிரந்தரத் தீர்வை வழங்குவதோ அவரது நோக்காக இருக்கவில்லை. தன்னிடமுள்ள கட்டற்ற அதிகாரத்தின் வழி நேரடியாகவும் (பொலிஸ்) மறைமுகமாகவும் (குண்டர்கள்) வன்முறையைக் கட்டவிழ்ப்பதன் மூலம் இப்பிரச்சனையை கையாளலாம் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது.
இதை சாத்தியப்படுத்துவதற்காக பெருந்தேசியவாத அகங்காரத்தை இன்னொரு தளத்திற்கு அவர் நகர்த்தினார்.
கூர்மையடைகின்ற இனமுரண்பாடும், அதிகரிக்கின்ற வன்முறையும் சிங்கள மக்கள் மத்தியில் தனது ஆதரவைப் பெருக்கும் என அவர் கணித்தார். இது நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளை மடைமாற்றப் பெரிதும் உதவி செய்தது. இது குறித்து பிறிதொரு கட்டுரையில் தனியாக நோக்கலாம்.
பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவான நிலையில், அதன் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு இரண்டு தெரிவுகள் இருந்தன.
ஒன்று, 1977ம் ஆண்டுத் தேர்தலில் சுதந்திரத் தமிழீழத்தை பெறுவதற்காகத் தாங்கள் ஆணை கோருவதாகச் சொல்லிப் போட்டியிட்டதன் அடிப்படையில், இலங்கைப் பாராளுமன்றச் செயற்பாடுகளில் கூட்டணி பங்காளியல்ல என்று அறிவித்துப், பாராளுமன்றத்தைத் தமிழ் மக்களின் உரிமைகளையும் சுயநிர்ணயத்தையும் வலியுறுத்துதற்கான ஒரு களமாக்குவது. மற்றது, வரன்முறையான பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு அரசியல் யாப்பிற்குக் கட்டுப்பட்டுத் தமிழ் மக்களின் உரிமைகட்காகக் குரல் கொடுப்பது.
தேர்தலில் தமிழ் மக்கள் தமிழீழத்தை வேண்டியே வாக்களித்தனர் என்பதும் நிச்சயமற்றதாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வெற்றியானது தேசிய இன ஒடுக்கலுக்கு எதிராகத் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாகும்.
இந்நிலையில், கூட்டணியின் வெற்றிக்காகச் செயற்பட்ட இளைஞர் குழுக்கள் அமிர்தலிங்கம் முதலாவது வழிமுறையைத் தெரிவுசெய்வார் என்று எதிர்பார்த்தன. ஆயினும், அதிகாரக்கதிரை மீதான ஆசை அமிர்தலிங்கத்தையும் விட்டுவைக்கவில்லை.
04.05.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
8 hours ago