2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 04: ‘சிறிகொத்த’ முற்றுகை

Johnsan Bastiampillai   / 2022 ஜனவரி 31 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் பாராளுமன்ற அரசியலில், கட்சிகளுக்குள் நடந்த குத்துவெட்டுகள், அதிகாரத்தின் மீதான அவாவின் பல்பரிமாணங்களை எடுத்துக்காட்டுகின்றன.

குறிப்பாக, கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டிகளும் அதைக் குடும்பக் கட்சிகளாக வைத்திருப்பதற்கான பகீரதப் பிரயத்தனங்களும் நடைபெற்றே வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஐ.தே.கவுக்குள் நடந்தவை பற்றி, பெரிய நூலே எழுதவியலும். 1970களில் நடந்தவொரு நிகழ்வையும், அதோடு தொடர்புடைய பின்கதையையும் பார்ப்போம்.

1970ஆம் ஆண்டு தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட பாரிய தோல்வி, கட்சியின் தலைவரான டட்லி சேனாநாயக்கவின் மீதான மிகப்பெரிய விமர்சனமானது. டட்லியிடமிருந்து தலைமைப் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு, மிகப்பெரிய வாய்ப்பாக இது பார்க்கப்பட்டது.

இலங்கையின் முதலாவது பிரதமரான டீ.எஸ் சேனாநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கான போட்டி, அவரது மரணத்தோடு தொடங்கியது. அன்று முதல், கட்சியின் தலைமைப் பதவியை வகித்தவர் அவரது மகனான டட்லி ஷெல்ட்டன்  சேனாநாயக்கா (இடையில், கொஞ்சக்காலம் ஜோன் கொத்தலாவல வசமிருந்தது).

நீண்ட காலமாகக் கட்சியின் தலைமைப் பதவியில் குறி வைத்திருந்த ஜே.ஆர் ஜெயவர்தன ஒருபுறமும் மக்கள் செல்வாக்குடைய ரணசிங்க பிரேமதாஸ மறுபுறமுமாக, தலைமைத்துவப் போட்டி புதிய கட்டத்தை எட்டியது.

தேர்தல் தோல்வியின் பின்னடைவைப் பயன்படுத்தி, கட்சித் தலைமையைக் கைப்பற்றுவது என்று ஜே.ஆர் முடிவெடுத்தார். டட்லியை விட, ஜே.ஆர் வயதின் அடிப்படையில் மூத்தவராக இருந்தபோதும், கட்சியில் சேனாநாயக்கா குடும்பத்தின் பிடியைத் தகர்த்த இயலவில்லை. இருவரும் உறவுக்காரர்கள் என்பதும் குடும்பக் கட்சியாகவே ஐ.தே.க இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

கட்சியின் கட்டுப்பாடு முழுமையாக டட்லியின் கைகளிலேயே இருந்தது. நீண்டகாலமாகத் தனது தலைமைக்கு சவாலானவராக ஜே.ஆர் இருந்து வந்ததை டட்லி அறிந்திருந்தார். இதனால் கட்சியின் செயற்குழுவில், தனக்கு நெருக்கமானவர்களை வைத்திருந்தார்.  

 “கட்சியில் ஜனநாயகம் இல்லை” என்று, ஜே.ஆர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். நேரடியான போட்டியில் டட்லியை வீழ்த்தவியலாது என்று தெரிந்தே, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவைக் கைப்பற்றுவது என்று ஜே.ஆர் முடிவெடுத்தார். கட்சியின் பெரும்பான்மை தனக்கு இல்லை என்பதை நன்கு அறிந்திருந்த அவர், தனது ஆதரவாளர்களின் உதவியுடன் சிறிகொத்தவை முற்றுகையிடுவது குறித்த திட்டங்களை வகுத்தார்.  

அப்போது சிறிகொத்த, கொள்ளுப்பிட்டியில் கடற்கரையோரமான ஒழுங்கையொன்றில் அமைந்திருந்தது. இப்போது அந்த ஒழுங்கை, ‘சிறிகொத்த ஒழுங்கை’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த வீடு, கொத்தலாவலயின் பரம்பரை வீடு என்ற குறிப்புகள், பல இடங்களில் இருக்கின்றன.

ஆனால், இக்கட்டடம் மாணிக்கக்கல் வர்த்தகரான நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூரின் வீடாக இருந்தது. இது Icicle Hall என்று அழைக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு, அப்துல் கபூரின் மறைவையடுத்து அவரது மகன், இக்கட்டத்தை 1955இல் மிகக்குறைந்த விலைக்கு ஐ.தே.கவுக்கு விற்றார். அப்போது கட்சியின் தலைவராக கொத்தலாவல இருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகின்ற தினத்தன்று, கொள்ளுப்பிட்டியில் அமைந்த சிறிகொத்தவை அதிர்ச்சிகரமான முறையில் முற்றுகையிட்டுக் கைப்பற்றும் திட்டத்தை ஜே.ஆர் வகுத்தார்.  

அத்திட்டத்தின்படி, காலி வீதியை நோக்கியிருக்கின்ற வீட்டின் பிரதான கதவை நோக்கி, ஒருதொகுதி ஆதரவாளர்கள் வருவார்கள். அவர்கள் யானைகளையும் அழைத்து வருவார்கள். இன்னொரு பிரிவினர், கடல்வழியாக வருவார்கள். கடல் வழியாக வருபவர்கள், தெகிவளையில் இருந்து படகுகளில் புறப்பட்டு, பின்புறமாக சிறிகொத்தவுக்குள் நுழைவதுதான் திட்டம்.

இதுகுறித்து, ஜே.ஆருடன் நெருக்கமாக இருந்த மூத்த ஊடகவியலாளரான நெவில் டி சில்வா நினைவுகூர்கையில், “முற்றுகைத் திட்டத்தை ஜே.ஆர், என்னிடம் விவரித்தார்.  ‘முற்றுகையிடப்போவதை அறியும் டட்லி, பிரதான வாசலைத் தனது ஆட்களைக்கொண்டு பலப்படுத்துவார். ஆனால், பின்வழியால் நாம் நடத்தப்போகும் எதிர்பாராத உள்நுழைவே, வெற்றிகரமானதாக இருக்கும் என ஜே.ஆர் நம்பியிருந்தார்” எனச் சொல்கிறார்.

யானைகளைக் கூட்டிச்செல்வது என்று அவர் தெரிவித்தவுடன், தான் ‘குபீர்’ என்று சிரித்துவிட்டதாக எழுதும் நெவில் டி சில்வா, ஆனால், குறித்த திட்டம் குறித்து, விளையாட்டுத்தனம் இல்லாத, தீவிரத்தன்மை ஜே.ஆரிடம் இருந்ததையும் நினைவுகூர்கிறார்.

“ஏன் யானைகளைப் பயன்படுத்துகிறீர்கள்” என்று தான் கேட்டபோது, “யானைகளை அடக்கித் திருப்பி அனுப்பவியலாது; மற்றையது, அது எமது கட்சியின் சின்னம்; அவர்களால் அதற்கு எப்படி ஊறுவிளைவிக்கவியலும்” என்று, சிரித்தபடி ஜே.ஆர் சொன்னதாகவும் பதிவு செய்கிறார்.

ஜே.ஆரின் இந்த முற்றுகைத் திட்டம் குறித்து, தனது எண்ணங்களை நெவில் டி சில்வா இவ்வாறு எழுதுகிறார்:  ‘ஜே.ஆருக்கு மிகவும் பிடித்தமான வரலாற்று நாயகன் நெப்போலியன். அவரின் போர்த்தந்திரங்களில் ஜே.ஆருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. நெப்போலியன் பற்றிய நூல்களை, முழுமையாகப் படித்தவர் அவர். எனவே, நெப்போலியனின் போர்த்தந்திரத்தையே சிறிகொத்தவைக் கைப்பற்றப் பயன்படுத்த முயன்றார். அரசியலில் ஜே.ஆருக்கு மிகவும் விருப்பத்துக்குரிய அரசியல் சிந்தனையாளர் மக்கியாவல்லி. அவரின் கோட்பாட்டின்படி ‘இலக்கை அடைவதே முக்கியம்; அடையும் பாதையல்ல’. எனவே, சிறிகொத்தவின் முற்றுகைத் திட்டம், அவரின் இரண்டு ஆதர்ச நாயகர்களான  நெப்போலியன்-மக்கியாவல்லி கூட்டின் விளைவு ஆகும்’.

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமோ ஜே.ஆரின் திட்டம் வெற்றியளிக்கவில்லை. என்ன நடந்தது என்பது தனிக்கதை. இதனால் விரக்தியின் உச்சிக்கே போனார். கட்சியை விட்டு, அரசாங்கத்துடன் இணைவது என்ற முடிவுக்கு வந்தார். இதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள், அரசாங்கத்தில் இடதுசாரிகளின் செல்வாக்குக் குறித்து அதிருப்தியடைந்த சுதந்திரக் கட்சியினர், ஜே.ஆரை கட்சிக்குள் உள்ளீர்க்க விரும்பினர். இது அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. ஜே.ஆர், மூத்த அரசியல்வாதியாகவும் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை விட, வயதில் மூத்தவராகவும் இருந்தமை மேலதிக காரணங்களாக அமைந்தன.

அன்றைய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியாக, லங்கா சமசமாஜக் கட்சி இருந்தது. அதன் தலைவரான நாணயக்கார பத்திரஹே மார்ட்டின் பெரேரா, அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்தார். அவரின் எதிர்ப்பு, ஜே.ஆரின் இணைப்புக்கு ஆப்பு வைத்தது.

இக்காலப்பகுதியில், ஐ.தே.கயின் செல்வாக்குள்ள ஒருவராக பிரேமதாஸ வளர்ந்து வந்தார். ஜே.ஆருக்கு போதுமான மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையும் பிரேமதாஸவின் மக்கள் செல்வாக்கையும் அறிந்திருந்த டட்லி, 1960களிலேயே பிரேமதாஸவுக்கு ஆதரவு கொடுத்தார்.

பிரேமதாஸாவின் ஆதரவைத் தனக்கான பலமாகக் கருதினார் டட்லி. 1970 தேர்தலின் பின்னர், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என்று பிரேமதாஸா கோரினார். இதை டட்லி விரும்பவில்லை. மறுசீரமைப்பது, தனது ஆதரவாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

இந்நிலையில், பிரேமதாஸவுக்கும் டட்லிக்கும் இடையிலும் முறுகல் நிலை உருவானது. இந்தப் பின்புலத்திலேயே, அடிமட்டக் கட்சித் தொண்டர்களின் செல்வாக்குள்ள பிரேமதாஸவின் ஆதரவற்ற டட்லியை அகற்றவே, சிறிகொத்த முற்றுகைக்கு ஜே.ஆர் முயற்சித்திருந்தார்.

இந்நிலையில், பிரேமதாஸ-டட்லி முரண்பாடுகள் கடிதப் பரிமாற்றமாகி, காரசாரமான நிலையை எட்டியது. பிரேமதாஸ கோரிய கட்சி மறுசீரமைப்பு முன்மொழிவை, டட்லி ஏற்க மறுத்ததை அடுத்து, கட்சியின் செயற்குழுவில் இருந்து விலகிய பிரேமதாஸா, ‘மக்கள் முன்னணி’ (புரவசி பெரமுன) என்ற இயக்கத்தைக் கட்டமைக்கத் தொடங்கினார்.

பிரேமதாஸவின் எழுச்சி, மேட்டுக்குடி ஐ.தே.கட்சியினருக்கு அச்சமூட்டியது. இதற்கெதிராக ஒன்றிணைய முடிவானது. டட்லியும் ஜே.ஆரும் 1972 மேயில் நேருக்குநேர் பேசினார்கள். மேட்டுக்குடிகள் இணைந்து, கட்சியைப் பலப்படுத்துவது என்று முடிவானது.

‘உறவுகளுக்குள் சண்டை வந்தாலும், அந்நியர் புகலென்ன நீதி’ என்பதே ஐ.தே.க வேதமாக இருந்தது. இதனாலேயே ‘மாமா-மருமகன் கட்சி’ எனக் கிண்டலுக்குள்ளானது. சில ‘மாமா-மருமகன்’ அரசியல் கதைகளை, அடுத்தவாரம் பார்க்கலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .