2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

‘வெடுக்குநாறி’ அழிப்பும் புல்லுருவிக் கூட்டமும்

Johnsan Bastiampillai   / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

வவுனியா, ஒலுமடு  வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. 

தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர். பெரிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு, காட்டின் இயற்கைக் சூழலுக்கு  சேதம் விளைவிக்காது, அப்பகுதி மக்களால் காலங்காலமாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

கடந்த சில வருடங்களாக, ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே, ஆலய விக்கிரகங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில், அரச ஆதரவுடன் பௌத்த அடிப்படைவாதத்தின் அடாவடிகளை செயற்படுத்தும் நிறுவனமான தொல்லியல் திணைக்களம், தொடர்ந்தும் தனது அடாவடிகளை முன்னெடுத்து வருகின்றது. தொல்லியல் திணைக்களத்தை நாட்டின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாலோ, நீதிக் கட்டமைப்பான நீதிமன்றங்களாலோ கூட கட்டுப்படுத்த முடிவதில்லை. 

தொல்லியல் திணைக்களம் நினைத்தால், தமிழர் தாயகப் பகுதிகளில் எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கொண்டு, தொல்லியல் நிலப்பகுதி என்று அறிவித்துக் கொண்டு, பெளத்த விகாரைகளை அமைக்க முடியும் என்பதுதான் இப்போதைய நிலை. 

முல்லைத்தீவு, குருந்தூர் மலையிலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. அதற்கு, தொல்லியல் திணைக்களத்தின் உத்தரவுகளுக்கு அமைய, அரச கட்டமைப்புகள் உதவிகளைப் புரிந்து வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.  

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தது முதல், தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த அடையாளங்களை வலிந்து ஏற்படுத்தும் வேலைகளை, தொல்லியல் திணைக்களமும் பௌத்த அடிப்படைவாத சக்திகளும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நாடு எவ்வளவு படுபாதாளத்துக்குள் வீழ்ந்து கிடந்தாலும் பரவாயில்லை. ஆனால், பெளத்த அடிப்படைவாதத்தின் செயற்பாடுகளை நிறுத்தக் கூடாது என்பது, தென் இலங்கையின் ஆக்கிரமிப்பு சக்திகளின் எண்ணம். 

இலங்கையை எண்ணிக்கை அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாத பௌத்த சிங்கள நாடாக நிறுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எவ்வளவு விலையை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகிறார்கள். அது வரலாற்று ரீதியாக கடத்தப்பட்டு வரும் பௌத்த அடிப்படைவாத மனநிலையில் இருந்து வரும் ஒன்றாக கருத முடியும். 

நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து நிரப்புவதன் மூலம், இந்த நாட்டின் வரலாற்றை போலியாக எழுதி, பௌத்த சிங்கள நாடாக எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்கும் மகாவம்ச மனநிலையின் விளைவுகள்தான் நாட்டை பாரிய பின்னடைவுக்குள்  தள்ளியது. ஆனால், அதிலிருந்து கிஞ்சித்தும் பாடம் படிக்க வேண்டும் என்ற எண்ணம், பெளத்த அடிப்படைவாத சக்திகளுக்குக் கிடையாது.

உலக வரலாற்றில், ‘வென்றவர்களால் எழுதப்படுவதுதான் வரலாறு’ என்ற நிலை உண்டு. ஆனால், ஒருபோதும் அது உண்மைகளைக் கொண்டிருப்பதில்லை. அதில் புனைவுக்கதைகளும் போலிகளும் சேர்க்கப்பட்டு, வென்றவர்களின் மனங்களைக் குளிர வைப்பதற்கான உள்ளீடுகள் வைக்கப்படும். 

காலங்கடந்து நோக்கப்படும் போது, அந்த வரலாறு சிரிப்பை வரவழைக்கும் ஒன்றாக மாத்திரமே மிஞ்சும். போலிப் புனைவுகளாக எழுதப்பட்ட ‘வெற்று வெற்றி’ வரலாறுகளை, காலில் போட்டு காலம் மிதித்திருக்கின்றது. 

அதுபோல, வென்றவர்கள் என்ற நிலை காலத்துக்கு காலம் மாறி வந்திருக்கின்றது. காலமும் சூழலும் வென்றவர்களை மாற்றி வந்திருக்கின்றது. அந்த உண்மையை உணராமல், காணும் இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை வைப்பதாலும், சைவ சமயச் சின்னங்களை அழித்தொழிப்பதன் மூலமும் பௌத்த நாடு என்று நிறுவ முடியும் என்பதும் நகைப்புக்கிடமான செயலாகும். 

அதிக தருணங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் அடிப்படையில் தாழ்வுச் சிக்கலோடு இருப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இப்போது, தொல்லியல் திணைக்களமும், அதன் ஏவல் சக்திகளாக இயங்கும் பீடங்களும் வெளிப்படுத்துவது அதையேதான்.

கச்சதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த சின்னமாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, நிலாவரைக் கிணற்றடியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை, வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் அகற்றப்பட்டமை.... இப்படி கடந்த சில நாள்களுக்குள் மாத்திரம், தொல்லியல் திணைக்களமும் அதன் இணக்க சக்திகளும் வடக்கு, கிழக்கில் புரிந்த ஆக்கிரமிப்பு ஆட்டங்கள் அளப்பரியன. 

தமிழ் மக்களின் எதிர்ப்பை அடுத்து, வெடியரசன் கோட்டை ஆக்கிரமிப்பு அறிவித்தல் அகற்றப்பட்டிருக்கின்றது. அதுபோல, நிலாவரைக் கிணற்றடியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருக்கின்றது. ஆனால், கச்சதீவில் எந்தவித கட்டுமானங்களையும் முன்னெடுக்கக் கூடாது என்பதையும் மீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையும் அதனை ஒட்டிய கட்டுமானமும் அகற்றப்படவில்லை. இப்போது வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் அகற்றப்பட்ட விடயம் பேசு பொருளானதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆதிலிங்கேஸ்வரரின் விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்யுமாறு பணித்திருக்கின்றார். 

ஆனால், இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வெவ்வேறு காரண காரியங்களைச் சொல்லிக் கொண்டு தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கவே செய்யும்.

நல்லாட்சிக் காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தோடு மிக இணக்கமாக இருந்தது. நினைத்த மாத்திரத்தில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பிரச்சினைகளை பேசும் நிலை இருந்தது. அப்போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். “....தொல்லியல் திணைக்களத்தை ஆட்சித் தலைவர்களால் கட்டுப்படுத்த முடியாது. அங்கு இருப்பவர்கள் எல்லாரும், பௌத்த அடிப்படைவாதத்தை முன்னெடுப்பதற்காக தெளிவாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்கள், ஆட்சித் தலைவர்களின் உத்தரவுகளை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், பௌத்த உச்சபீடங்கள் உத்தரவுக்கு செயற்படுவதுதான் ஒற்றைச் சிந்தனை. ஆட்சியில் இருப்பவர்கள் ஐந்து, ஆறு ஆண்டுகளில் மாறக் கூடியவர்கள். அவர்களை கருத்தில் எடுக்க வேண்டியதில்லை என்பது எண்ணம். தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில், அரசாங்கத்தோடு கூட்டமைப்பு பேசும் போதெல்லாம், அங்கு வரும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அடிப்படைவாதம் ஊறிப்போயிருக்கிற அமைப்புக்கு எதிராக, தமிழ் மக்கள் விழிப்போடு இருப்பதுதான் ஒரே வழி. அதனை மீறி, யாரை நம்பியும் சும்மா இருந்துவிட முடியாது” என்றார்.

நாட்டுக்குள் இன மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் பௌத்த அடிப்படைவாத சக்திகள் காலம் காலமாக ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது வடக்கு, கிழக்கில் இந்தியாவின் இந்துத்துவா சக்திகள், புதிய நிகழ்ச்சி நிரலோடு நுழைந்து தமிழ் மக்களிடம் காணும் ஒற்றுமையை சூறையாடி வருகின்றன. அதற்கு இங்குள்ள சிலரும் துணைபோவதுதான் பெரும் அவலம்.

இந்துத்துவாவைப் பொறுத்தளவில் பௌத்தத்தை தன்னுடைய அங்கமாகவே கருதுகின்றது. அது, ஒருபோதும்  தென் இலங்கையின் பௌத்த அடிப்படைவாதத்துக்கு எதிராக இயங்காது. மாறாக, தமிழ் மக்களிடையே மதப் பிளவுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கின்றது. 

அவ்வாறான நிலை உருவானால்தான், தமிழ்த் தேசிய அரசியலை சின்னாபின்னமாக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்த் தேசிய அரசியல் என்பது மத, சாதிய அரசியலைத் தாண்டி நிலைபெற்ற ஒன்று. மத அடையாங்களை முன்னிறுத்தி, தமிழ்த் தேசியம் நிலைபெறவில்லை.

 சைவ மக்களும் கிறிஸ்தவ மக்களும் ஒற்றாக நின்றே தமிழ்த் தேசியம் என்ற அரசியலை கட்டியெழுப்பினார்கள். அங்கு மதங்களைக் கடந்து தமிழர்கள், தமிழர் பாரம்பரிய நிலப்பகுதி என்ற விடயம் முதன்மை பெற்றது. ஆனால், இந்துத்துவாவோ அதனை குறிவைத்து தாக்குகின்றது. அதன்மூலம், தமிழ்த் தேசியத்தை அழித்து, தன்னுடைய அரசியல் இலக்கை பிராந்தியத்தில் தக்க வைப்பதற்கான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

இந்துத்துவா எப்போதுமே பௌத்த அடிப்படைவாதம் மாதிரியான கட்டமைப்பைக் கொண்டது. ஆதிக்க ஆக்கிரமிப்புத்தான் அதன் ஒழுங்கு. அப்படிப்பட்ட நிலையில், அதனை நோக்கி தயவு தாட்சண்யங்கள் இன்றி கேள்வி எழுப்பும் எதையும் அழித்தொழிக்கவே செய்யும். 

இதுதான், இந்துத்துவாக்கு தமிழ்த் தேசியம் மாபெரும் பிரச்சினை. அதனால்தான், தமிழ்த் தேசியத்தை அடியோடு அழிக்க இந்துத்துவா சக்திகளும் முனைகின்றன. அதனை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு, தமிழ் மக்களுக்கு உண்டு. 

ஏற்கெனவே, தமிழர் தரப்பில் பலரை இந்துத்துவா சக்திகள் விலைக்கு வாங்கிவிட்டன. அவை, பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தக் குரலையும் எழுப்புவதில்லை. மாறாக, சிறுபான்மை மதங்களுக்கு எதிராகவே பொங்கி பூரிக்கின்றன. 

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் அழிப்பு தொடங்கி எந்தவொரு தமிழ் தொன்ம வழிபாட்டிடங்கள் அழிப்பு தொடர்பில் இந்தச் சக்திகள் கேள்வி எழுப்பாது உறங்கிவிடும். இவைக்கு அவர்களின் எஜமானர்கள் என்னத்தை சொல்கிறார்களோ அதைச் செய்வதுதான் வேலை. 

அப்படியான நிலையில், தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய அடையாங்களையும் உரிமைகளையும் பேண வேண்டுமாயின் தென் இலங்கை பௌத்த அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக மாத்திரமல்ல, உள்ளிருக்கும் புல்லுருவிக் கூட்டத்துக்கு எதிராகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுதான், எதிர்காலத்துக்கான எங்களின் இருப்பை தக்க வைக்க உதவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .