Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 மே 07 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏம்.எஸ்.எம். ஐயூப்
சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் நாட்டில் மிகப் பெரும் பதற்ற நிலைமை நிலவியது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். கொழும்பு காலிமுகத் திடலில் தொடர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. நாடே ஒருவகையில் ஸ்தம்பிதமடைந்து இருந்தது.
மறுபுறம் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் தடுமாறிக் கொண்டு இருந்தது. ஜனாதிபதிக்கு தமது அலுவலகத்துக்குச் செல்ல முடியாதவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வலுவலகத்தின் நுழைவாயிலை மறித்துக் கொண்டு கோஷம் எழுப்பிக் கொண்டு இருந்தனர்.
‘அரகலய’ (போராட்டம்) என்று பொதுவாக ஆங்கில ஊடகங்களும் அழைத்த அந்த மக்கள் எழுச்சியின் பின்னால் தமிழீழ விடுதலை புலிகளே இயங்கினர் என்று இப்போது அரசாங்க தலைவர்களில் சிலர் கூறுகின்றனர். மற்றும் சிலர் இதன் பின்னால் அமெரிக்கா இயங்கியதாக கூறுகின்றனர்.
ரணில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட உடன் அடுத்த நாளே காலிமுகத் திடலில் போராட்டக் களத்தில் இருந்த போராட்டக்காரர்கள் இராணுவத்தினரைக் கொண்டு அடித்து விரட்டப்பட்டனர். அதன் பின்னர் பெருளாதார ரீதியாக நாட்டை அழிவுப் பாதையில் இழுத்துச் சென்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னயினர் மீண்டும் தலைதூக்கலாயினர். இப்போது அவர்கள் அந்தப் போராட்டத்துக்கு காரணமான பொருளாதார நெருக்கடியை மறந்து போராட்டக்காரர்களை துரோகிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கூறித் திரிகின்றனர்.
கடந்த வருடம் மே மாதம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களில் ஒருவராக கருதப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த போராட்டக்காரர்களை காடையர்கள் என்கிறார். போராட்டத்தின் காரணமாக பிரதமராக பதவியேற்று போராட்டக் களத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் போராட்டக்காரர்களை பாஸிஸவாதிகள் என்றழைத்தார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எப்போதும் போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாகவே கருதுகிறார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ குடும்பத்தின் பங்கு மிகப் பெரியதாகும். முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் கூட்டமொன்றில் உரையாற்றும் போது புலிகள் அமைப்பின் தோல்வியை அடுத்து ராஜபக்ஷக்களுக்கு எதிராக தீட்டப்பட்ட திட்டமொன்றின் விளைவாகவே கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்றார்.
அதைப் பார்க்கிலும் மிகவும் சுவாரஸ்யமான கருத்தென்றை முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார். தாம் விரும்பாத அனைத்தும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேயவாதிகளின் சதியாகவே குறிப்பிடும் அவர் கடந்த வருடம் நடத்தப்பட்ட மக்கள் போராட்டமும் அமெரிக்க சதி என்று கூறுகிறார். இந்தக் கருத்தை முன்வைத்து அவர் சிங்கள மொழியில் ஒரு புத்தகத்தையும் எழுதி கடந்த வாரம் வெளியிட்டார். அந்த சுவாரஸ்யமான கதை தமிழ் பேசும் மக்களிடம் போதியளவில் சென்றடையவில்லை.
‘ஒன்பது - மறைந்த கதை’ என்ற பெயரிலான அந்த புத்தகத்தில் வரும் கதை கீழ்வருமாறு அமைந்துள்ளது: ஓய்வுபெற்றதன் பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு வாழ திட்டமிட்டு இருந்த கோட்டாபய, அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் சொல்படியே நடந்து கொண்டார். ஜூலி சங்கின் கட்டுப்பாட்டிலேயே இருந்தார். அவர் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களையும் கட்டுப்படுத்தி வந்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்காக நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு அதிகாரிகளை கட்டுப்படுத்தவும் அமெரிக்கத் தூதுவர் நடவடிக்கை எடுத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நிறுத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோட்டாபயவின் அரசாங்கத்தை கவிழ்த்து சபாநாயகரின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதே அந்த சதியின் நோக்கமாகியது. அதன் போது கோட்டாபயவையும் சில மூத்த இராணுவ அதிகாரிகளையும் ஜனாதிபதி மாளிகையிலேயே கொலை செய்யவும் திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த இடைக்கால அரசாங்கத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் முக்கிய பங்கேற்கவிருந்தனர்.
அதன் படி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு கோட்டாபய மலைத்தீவுக்கு தப்பியோடிய பின், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு தாமும் இராஜினாமாச் செய்யுமாறு கோட்டாபயவுக்கு கூறப்பட்டது. அதற்காக ஜனாதிபதி செயலாளர் இரண்டு கடிதங்களை தயாரித்து மாலைத்தீவுக்கு அனுப்பினார். ஆனால் கோட்டா தமது இராஜினாமா கடிதத்தில் மட்டுமே கையொப்பமிட்டார்.
இந்த நிலையில் அமெரிக்க தூதுவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்று அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்று இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவுமாறு கூறியுள்ளார். ஆனால், பிரதமர் ரணில் அப்போதும் பதவியில் இருந்த நிலையில் அது சட்ட விரோதமானது என்று கூறி சபாநாயகர் அதனை மறுத்துள்ளார். ரணிலை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வற்புறுத்தும் நோக்கத்திலேயே அவரது வீட்டுக்கு சிலர் ஜூலை 9 ஆம் திகதி தீவைத்துள்ளனர்.
இது தான் வீரவன்ச கூறும் ‘மறைந்த கதை’யாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத் திடல் போராட்டம் ஆரம்பமாகியது. மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத் திடல் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்ட வன்முறைகளின் மத்தியில் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமாச் செய்தார். ஜூன் மாதம் 9 ஆம் திகதி பஸில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். ஜூலை 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிக் கொண்ட நிலையில் கோட்டா அன்றே நாட்டை விட்டு மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றார். இவ்வனைத்தும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்றமையினாலேயே விமல் தமது புத்தக்த்துக்கு ‘ஒன்பது’ என்று பெயர் வைத்துள்ளார்.
இது பாரதூரமான கதையாகும். ஏனெனில் இந்தச் சதியின் பின்னால் அமெரிக்க அரசாங்கம் இருந்ததாக கூறும் அதேவேளை அத்திட்டத்தின் படி கோட்டா கொலை செய்யப்படவிருந்ததாகவும் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்விப்பதற்காக அவரது வீடு தீவைக்கப்பட்டதாகவும் விமல் கூறுகிறார்.
இதில் பல முரண்பாடுக்ள இருக்கின்றன. கோட்டா ஓய்வு பெற்று அமெரிக்காவுக்குச் செல்லும் நோக்கில் இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டு ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டுவோம் என்று அப்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறிய போது எனக்கு வெளிநாடொன்றுக்காவது போக முடியாத நிலையை உருவாக்க வேண்டாம் என கோட்டா கூறியுள்ளார். அவ்வாறு அவர் தாம் விரும்பியே அமெரிக்க தூதுவரின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்றால் சதிகாரர்கள் அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? அமெரிக்கா தமக்கு கீழ்படிந்த கோட்டாவையே தொடர்ந்து பதவியில் வைத்திருக்க ஏன் விரும்பவில்லை?
கோட்டா அமெரிக்காவை திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்பதை விமல் எல்லாம் நடந்து முடிந்ததன் பின்னரா அறிந்து கொண்டார்? கோட்டாவின் அரசாங்கம் இரகசியமாக மின் நிலையம் ஒன்றை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்றதை எதிர்த்ததை அடுத்தே விமல், கம்மன்பில ஆகியோரை கோட்டா கடந்த வருடம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அமைச்சரவையில் இருந்து வெளியேற்றினார். அவ்வாறு இருந்தும் கோட்டா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. கோட்டாவை பதவியில் வைத்திருக்கவே அவர் முயன்றார்.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவ அமெரிக்கத் தூதுவர் சதி செய்ததாக கூறும் விமல்தான் கடந்த வருடம் முதலாவதாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டக்காரர்களின் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற சுலோகம் களமிறங்கிய பின்னர் விமலின் தலைமையிலான 11 கட்சி கூட்டணி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி கோட்டாவை சந்தித்து பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்காக சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றது. அதனை ஏற்ற கோட்டா இராஜினாமாச் செய்யுமாறு தமது அமைச்சர்களை பணித்து புதிய அமைச்சரவையில் சேருமாறு ஏனைய கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
விமலின் அந்த ஆலோசனையில் இரண்டு நோக்கங்கள் இருந்திருக்கலாம் முதலாவது பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்த தாமும் மீண்டும் அமைச்சர் பதவியொன்றை பெற்றுக் கொள்வதாகும். இரண்டாவது அதற்காக கோட்டாவை பாதுகாப்பதாகும். இந்தத் திட்டம் ஆர்ப்பாட்டக்காரர்களின் நிரந்த போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. அன்று முதல் அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை வெறுக்கிறார்.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பெரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டபோது மனிதாபிமானமாக நடந்து கொண்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களே தமக்கு அழிவை தேடிக்கொண்டதாக அவர் கூறினார். இது அமெரிக்க ஏஜன்டாக அவரே கூறும் கோட்டா மீதான அவரது காதலை காட்டுகிறது.
அமெரிக்கா தமது திட்டத்தை ஏன் கைவிட்டது என்று அவர் கூறுவில்லை. இராணுவத் தளபதியை பாவித்து ஆட்சியை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு இருந்தால் அத்திட்டத்தை கைவிடுமா? இது விமல் கண்ட பயங்கர கனவொன்றாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago