Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது.
அல்விஸ், 1950களில் பிரதமராக இருந்த ஜோன் கொத்தலாவலவின் செயலாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றியவர். இந்த மாநாடுகளின் போது அவர் மிகவும் சுவாரசியமான கதைகளைச் சொல்வார். அவ்வாறான ஒரு மாநாட்டின் இறுதியில் அவர் off the record (வெளியிட வேண்டாம்) என்று கூறி ஒரு கதையைக் கூறினார். இது தான் அந்தக் கதை.
இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை 1949 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்டு இருந்த நிலையில் ஜோன் கொத்தலாவல அம்மக்களின் பிரச்சினையைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடெல்லிக்குச் சென்றிருந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் அவர் பேச்சுவார்ததை நடத்தும் போது ஒரு கட்டத்தில் நேரு இவ்வாறு கூறினார்.
'மிஸ்டர் கொத்தலாவல, உங்கள் நாடு சிறியதாக இருந்தாலும் இந்தப் பத்து இலட்சம் மக்களை உள்வாங்கிக் கொள்வது உங்கள் நாட்டுக்கு பெரிய விடயமல்ல. ஆனால், நீங்கள் அதனைச் செய்யப் போனால் உங்கள் எதிர்க் கட்சிக்காரர்கள் உங்களை அரசியலில் இருந்தே விரட்டிவிடுவார்கள். இவர்களை உள்வாங்கிக் கொள்வது இந்தியாவுக்கு அதை விட எவ்வளவோ சிறிய விடயம். ஆனால், எங்கள் எதிர்க் கட்சிகளும் அதற்கு இடம் கொடா. எனவே, இதனை நாம் இரு நாடுகளினது அதிகாரிகளிடம் ஒப்படைத்தால் அவர்கள் உலக அழிவு வரை அதைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எங்களுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது.'
அன்று நேரு கூறியதைப் போல் அதிகாரிகளிடம் ஒப்படைக்காவிட்டாலும் இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்ததைகளும் உலக அழிவு வரை நடைபெறும் போல் தான் தெரிகிறது.
பிரஜா உரிமை தொடர்டபான பேச்சுவார்ததைகள், 50:50 கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை, பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்தை, இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான சிறிமா-சாஸ்திரி பேச்சுவார்த்தை, அதே பிரச்சினை தொடர்பான சிறிமா-இந்திரா பேச்சுவார்ததை, டட்லி-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை, ஜே.ஆரின் வட்ட மேசை மாநாடு, அரசியல் கட்சி மாநாடு (PPC), இந்திய அதிகாரிகளான கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் ரொமேஷ் பண்டாரி ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள், திம்புப் பேச்சுவார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள், ரணசிங்க பிரேமதாசவின் சர்வ கட்சி மாநாடு, புலிகளுடனும் தமிழ் கட்சிகளுடனும் பல அரசாங்கங்கள் நடத்திய பேச்சுவார்ததைகள் போன்ற பல பேச்சுவார்ததைகள் 1940களில் இருந்து இன்று வரை இடம்பெற்றுள்ளன.
அதற்குப் புறம்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர்கள் இடையே எத்தனையோ சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ முறை இரு சாராரும் உடன்பாடுகளுக்கும் வந்துள்ளனர். ஆனால், இன்னமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதா இல்லையா என்று வாதிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
பொதுவாக இனப் பிரச்சினை இன்னமும் ஏறத்தாழ தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று சிங்கள் மக்கள் இன்னமும் கேட்கிறார்கள். சிங்களத் தலைவர்கள் சமஷ்டி முறையை பிரேரித்த போது தமிழர்கள் எதிர்த்தார்கள். இப்போது தமிழர்கள் அதனைக் கேட்கும் போது சிங்கள மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். 40 ஆண்டுகளாக அதிகார பரவலாக்கலைப் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றும் மாகாண சபைகளை அறிமுகப்படுத்தி சுமார் 35 ஆண்டுகள் கழிந்தும் அதிகாரப் பரவலாக்கலால் நாடு பிரிந்துவிடும் என்று சிங்கள் அரசியல்வாதிகள் இன்னமும் வாதிடுகிறார்கள்.
இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினையைப் பற்றி பேச்சுhவர்த்தை நடத்த அரசியல் கட்சிகளுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது அந்த அழைப்பை விடுத்த அவர் அதிகார பரவலாக்கலை விரும்புகிறீர்களா என ஒவ்வொரு கட்சித் தலைவர்களிடமும் கேட்டார்.
பேச்சுவார்த்தையே தீர்வுக்காகன ஒரே வழி என்பதால் நேர்மையானதோ இல்லையோ ஜனாதிபதியின் இந்த அழைப்பு பாராட்டுக்குறியதாகும். ஆனால், சுமார் 75 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்ததைகளைப் பற்றிய அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்நாட்டு மக்களில் குறைந்தபட்சம் ஒரு சத வீதத்தினராவது ஜனாதிபதி நடத்தப் போகும் பேச்சுவார்தைகள் வெற்றியளிக்கும் என்று நம்புகிறார்களா என்பது சந்தேகமே.
அது அவர் மீதான நம்பிக்கையின்மை மட்டுமல்ல. ஓரளவுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அதேவேளை அது பொதுவாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் திறந்த மனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்பதைப் பற்றிய நம்பிக்கையின்மையேயாகும்.
தமிழ் தலைவர்கள் அதிகார பரவலாக்கல் வேண்டும் என்கிறார்கள. சில சிங்களத் தலைவரகள் அதிகார பரவலாக்கலால் நாடு பிளவுபடும் என்று கூறுகிறார்கள். ஆனால் 34 ஆண்டுகளாக மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட்டுத் தான் இருக்கிறது. அவ்வாறு இருந்தும் எந்தவொரு சாராரும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.
தமிழ் தலைவர்கள் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே வேண்டும் என்கிறார்கள். அதற்குக் குறைந்த ஒரு தீர்வை எந்தவொரு தமிழ் கட்சியாவது ஏற்றுக் கொண்டால் ஏனைய தமிழ் கட்சிகள் அக்கட்சியின் தலைவர்களை துரோகிகள் என்பார்கள். அதேபோல் சிங்களத் தலைவர் ஒருவர் சமஷ்டி முறையை ஏற்றுக் கொண்டால் இனவாத சிங்களக் கட்சிகள் அவரை துரோகி என்பார்கள். துரோகிப் பட்டம் அடுத்த தேர்தலில் தம்மை பாதிக்கும் என்பதால எவரும் அதனை ஏற்கத் தயாராக இல்லை. இவ்வாறு எந்தவொரு தரப்பினரும் இறங்கி வரத் தயாராக இல்லாவிட்டால் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது எவ்வாறு?
2015 ஆம் ஆண்டு பதவிக்க வந்த 'நல்லாட்சி' அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசியலமைப்புச் சபையொன்றை நிறுவியது. அச்சபையால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதில் தமிழர்கள் வெறுக்கும் ஒற்றை ஆட்சி என்ற பதம் தமிழில் இருக்கவில்லை. சிங்கள மொழியில் இருந்தது. சிங்கள தேசியவாதிகள் வெறுக்கும் சமஷ்டி என்ற பதம் எந்த மொழியிலும் இருக்கவும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதில் 'ஒருமித்த நாடு' என்ற எண்ணக்கருவே தமிழ் மொழியில் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால் அது சமஷ்டிக் கோரிக்கையை நிராகரிப்பதாகும் என்றும் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை அங்கீகரிப்பதாகவும் அப்போதைய வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கூறினார்.
அதேவேளை அந்த அறிக்கையானது தந்திரமாக சமஷ்டி முறையை திணிக்கும் முயற்சி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிங்கள் இனவாதிகள் கூறினர். இந்த இழுபறியோடு வேறு பல அரசியல் பிரச்சினைகள் உருவாகி அந்த அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சி கைவிடப்பட்டது. சண்டையிட்டோர் அந்தத் திட்டத்தின் பெயரை வைத்து தான் சண்டையிட்டார்களேயொழிய அதன் உள்ளடக்கத்தை எவரும் எதிர்க்கவில்லை.
இது ஒற்றையாட்சி என்ற பதத்தை கைவிட சிங்களத் தலைவர்களுக்கும் சமஷ்டி என்பதைக் கைவிட தமிழ் தலைவர்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. எனினும் ஜனாதிபதி சந்திரிகா 1995 ஆம் ஆண்டு முன்வைத்து 'பக்கேஜ்' என்ற அக்காலத்தில் சகலராலும் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் இலங்கை ஒரு பிரந்தியங்களின் ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒற்றையாட்சி என்ற பதம் அதில் இருக்கவில்லை. அதுவே பொருத்தமான தீர்வு என்று சில தமிழ் தலைவர்களும் கடந்த வாரம் கூறியிருந்தனர்.
அத்திட்டத்தை ஏற்றிருக்கலாம் என்று புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலிகளின் புதிய நீதிமன்றத் தொகுதியை திறந்து வைக்கும் வைபவத்தின் போது கூறினார். ஆனால் ஜீ.எல். பீரிஸூடன் சேர்ந்து அந்தத் தீர்வுத் திட்டத்தை தயாரித்த நீலன் திருச்செல்வத்தை புலிகளே 1999 ஆம் ஆண்டு தற்கொலை குண்டுதாரி ஒருவர் மூலம் கொன்றனர்.
ஒற்றையாட்சிக்குப் பதிலாக சமஷ்டி முறையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று புலிகளும் ரணிலின் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஒஸ்லோ நகரில் வைத்து உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனால் புலிகள் அந்த இணக்கப்பாட்டை உதறித் தள்ளிவிட்டு 2005 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் போரை ஆரம்பித்தனர்.
இந்த ஒற்றையாட்சி - சமஷ்டி சர்ச்சை விடயத்தில் போலவே வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திலும் சம்பந்தப்பட்ட எவரும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. அவ்வாறாயின் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தி எதனை சாதிக்கப் போகிறார்கள்? நியாயத்தின் அடிப்படையில் விட்டுக்கொடுக்க சகல தரப்பினரும் தயாராக இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தையும் சிரமத்தையும் வீணடித்து போதாதக்குறைக்கு இன உணர்வுகளையும் தூண்டுவிடுவதை விட சும்மா இருப்பதே மேல் என்றும் வாதிடலாம். எனினும் பேச்சுவார்த்தையைத் தவிர் தீர்வுக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago