Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 மார்ச் 08 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
“அபி தமய், ஹொந்தடம கரளா தியன்னே” என்ற வீராப்பு வசனமும் “தென் செபத?” என்று ஆட்சியாளர்கள் முன்னர் கூறிய வாசகங்களும் தேர்தல்கால எழுச்சிப் பாடல்களும், மக்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக பாவிக்கப்படும் அளவுக்கு நாடு வந்திருக்கின்றது. அல்லது, நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாத அரசாங்கம், அப்படியொரு முட்டுச்சந்துக்குள் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது என்றும் கூறலாம்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, கடுமையாகப் பாதிப்புற்ற ஏனைய நாடுகளை விட, அந்த வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாக பெருமை பேசிக் கொண்டிருந்த இலங்கையானது, மிக மோசமான பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பற்றாக்குறை தொடக்கம் டொலர் பற்றாக்குறை வரை, ஏகப்பட்ட விடயங்களில் தட்டுப்பாடும் பற்றாக்குறைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் உதவி கேட்டு, கையேந்தி நிற்கின்றது.
சமகாலத்தில், மக்கள் ஒவ்வொரு பொருளையும் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டியதே விதி என்றாகி இருக்கின்றது. இந்நிலைமை நாட்டில் பொதுவாக மக்களிடையே ஒருவித வெறுப்பையும் ஆட்சியாளர்கள் மீதான ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.
ஆட்சியில் இருப்பவர்களை விட, அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களை விட, தீர்மானம் எடுக்கக்கூடிய அதிகாரத்தில் உள்ளவர்களை விட, பொருளாதார நுட்பங்கள், இராஜதந்திர அணுகுமுறைகள், அரசியல் சாணக்கியம் பற்றிய துறைசார்ந்த பல நூற்றுக்கணக்கானோர் நாட்டில் உள்ளனர்.
அதுமட்டுமன்றி, 92 சதவீதத்துக்கு குறைவில்லாத எழுத்தறிவு வீதத்தைக் கொண்ட நாடு என்ற வகையில், சாதாரண மக்களாலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகள், தீர்மானங்களில் எது சரி, எது பிழை என்பதைக் கணிப்பிட்டுக் கொள்வது அவ்வளவு கடினமான காரியமும் அல்ல.
இந்தப் பிரளயங்கள் எல்லாம், ஒரிரு வாரத்தில் திடீரென ஏற்பட்டதல்ல. இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படப் போகின்றது என்பது, பல மாதங்களுக்கு முன்னமே துறைசார்ந்தவர்கள் எதிர்வு கூறியிருந்தார்கள். அதற்கான எல்லா அறிகுறிகளும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தன.
ஆனால், ஒருவித எகத்தாளப் போக்கில், ‘நமக்கு தெரியாத விடயமா’ என்ற இறுமாப்பில், அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தமது இயலாமைகளை, சாத்தியமின்மைகளை மறைப்பதற்கான பிரசாரங்களை மேற்கொண்டதே தவிர, நெருக்கடிகளைக் குறைப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுத்ததாக, திருப்தி கொள்ள முடியாது என்பதே யதார்த்தமாகும்.
உண்மையில், இதுதான் இன்று மக்களுக்கு, கவலை கலந்த கடுமையான விசனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு குடும்பத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே, எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கின்ற சூழலில், ஒரு நாட்டின் நெருக்கடிகளை இரவோடிரவாகத் தீர்த்து விடுவது நடைமுறைச் சாத்தியமற்றது.
ஆனபோதும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உண்மைக்குண்மையாக, காத்திரமான கொள்கைகளை வகுத்து, தீர்மானங்களை எடுத்து, அவற்றைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்பதுதான், மக்களின் விசனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்றவர்களும் சர்வ வல்லமை படைத்தவர்கள் என முன்புகூறப்பட்ட ஆட்சியாளர்களும் அதன் அமைச்சர்களும், இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கின்றார்கள் என்று மக்களுக்கு தோன்றியிருந்தால், அவர்களுக்கு இந்தளவு வெறுப்பு ஏற்பட்டிருக்காது.
‘அரசாங்கம் முயற்சி செய்கின்றதுதான்; ஆனாலும் என்ன, செய்ய எதுவும் தீர்ந்தபாடில்லை’ என்று, விதியை நொந்து கொண்டு போய் விடுவார்கள். ஆனால், அப்படியான ஒரு நிலைமை இப்போது இல்லை. ஆட்சியாளர்களின் நிலை இதுவென்றால், எதிர்க்கட்சியில் உள்ளவர்களின் பலவீனம் இதைவிடப் பெரியதாகும். எதிரணியின் முன்னால் இப்போது இரு தெரிவுகள் உள்ளன.
ஒன்று, அரசாங்கத்துடன் சேர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான பாதையில் பயணிக்க வேண்டும். இரண்டாவது, அவ்வாறு செய்ய முடியாவிட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இது நல்ல தருணம் என்பதையாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால், இவ்விடயத்தில் தற்போதைய எதிர்க்கட்சி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதை, நேரிடையாகவே காணக்கூடியதாக உள்ளது. ஆளும் - எதிர்க்கட்சிகள் சமகாலத்தில் இப்படியிருப்பது, மிகவும் மோசமான கையறு நிலைமை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் பதவி நீக்கப்பட்டதால் மட்டும், அதனை ஒரு துரும்பாகப் பயன்படுத்தி நாட்டில் ஏதேனும் பாரிய மாற்றம் நிகழலாம் என்று ஒரு தரப்பினர் கருதுவதாகத் தெரிகின்றது. ஆனால், அது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
உண்மையில் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச சர்ச்சையும் ஒரு நாடக பாணியிலான நகர்வாகக் கூட இருக்கலாம். நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொள்கின்ற போது, இவ்வாறான பராக்குக்காட்டுதல் நடக்கும் என்பதை அறிந்து வைத்துள்ள மக்கள், இது விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.
நாட்டில் எந்தெந்தப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், விலை ஏற்றம் செய்யப்படாது என்றும் அமைச்சர்கள் அறிவித்தார்களோ, அந்தந்தப் பொருட்கள் எல்லாவற்றுக்கும் அந்த அறிவிப்பு வெளியாகி இரு வாரங்களுக்குள் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது என்பதே அண்மைக்காலத்தில் இலங்கை மக்களின் அனுபவமாகவுள்ளது.
ஆரம்பத்தில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் சிலிண்டரில் நிரப்பப்பட்ட எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இத்தனை மாதங்கள் கடந்த பின்னரும், விலை அதிகரிப்பு நடந்தேறிய பிறகும் இந்தப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இன்னும் நீங்கவில்லை.
இதற்கு மேலதிகமாக இப்போது எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் பல நூறு மீற்றர் தூரத்துக்கு வரிசையில் நிற்கின்றன. சில இடங்களில், வராத டீசலுக்காக சாரதிகள் காத்துக் கிடக்கின்ற நிலைமையும் உள்ளது. இது நாட்டின் போக்குவரத்துச் செயற்பாடுகளை கடுமையாகப் பாதித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற டீசலில் அரைவாசிக்கு அதிகமான டீசல், மின்னுற்பத்தி நிலையங்களின் பிறப்பாக்கிகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்தவகையில் இந்த டீசல் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் மின்வெட்டு அமல்படுத்தப்படுகின்றது.
ஒரு நாளைக்கு இரு கட்டங்களாக ஏழரை மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. சில பகுதிகளில் இதனால் நீர்வெட்டும் அமலாவதாக சொல்லப்படுகின்றது. இந்த மின்வெட்டும் டீசல் தட்டுப்பாடும் இனமத பேதமின்றி மக்கள், அரசின் மீது சீறிப்பாயும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதை காணொளிப்படங்களாகக் காண முடிகின்றது.
இதுதவிர, இந்தப் பொருளாதார நெருக்கடியைக் காரணங்காட்டி, சட்ட ரீதியாகவும் கறுப்புச் சந்தையிலும் கிட்டத்தட்ட எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சேவைக் கட்டணங்களும் கணிசமானளவு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தின் எல்லா மட்டங்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மக்களின் வாழக்கைச் செலவு தலைக்கு மேலால் போகின்றது. அதிக வருமானம் பெறுவோரும் வெளிநாடுகளுக்குச் சென்று, தொழில்புரிய கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையில், வறிய மக்களின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், இவற்றுக்கு பரிகாரம் தேடுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசாங்கம், அந்தப் பணியை திறம்படச் செய்யாமல், இன்னும் வெற்றுக் கதை பேசிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.
எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்காக நாடெங்கிலும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்க, அதனால் சிறுசிறு மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்க, ஆட்சியாளர்கள் கொழும்பில் இருந்து கொண்டு, “தட்டுப்பாடு இல்லை” என்று அறிவிக்கின்றார்கள் என்றால், இதனை எந்த வகைக்குள் சேர்ப்பது எனத் தெரியவில்லை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, கொரோனா ஒரு முக்கிய காரணிதான். ஆனால், அதுமட்டுமே காரணமல்ல. டொலர் நெருக்கடிக்கு, கொரோனா வைரஸ் மட்டுமன்றி, பணம் அச்சிடல், பொது விலைமட்டத்தை பேணுதல் போன்ற பல விடயங்களில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்க்க தரிசனமற்ற தீர்மானங்களும் காரணமாகியுள்ளன.
பல விடயங்களில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் எடுத்த தீர்மானங்கள், சாதுர்யமானதாக அமையாமையே இந்த நெருக்கடிச் சூழலை மென்மேலும் சிக்கலாக்கியுள்ளது என்பதை, இன்று சாதாரண பொதுமகனும் நன்கு அறிவான்.
எனவே, இனிமேலாவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பிரயத்தனங்களை எடுக்காமல் பிரச்சினைகள், நெருக்கடிகளை தீர்த்துவைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024