2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றை அறிந்திருப்பது இன உறவின் அடித்தளம்

Editorial   / 2022 நவம்பர் 29 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

கிழக்கில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம் ஒன்றில் முஸ்லிம் போடியார் ஒருவருக்குச் சொந்தமான வயல் நிலத்தை தமிழர் ஒருவர் முறைகேடாக ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கின்றார். அப்போது அருகிலுள்ள வயலின் உரிமையாளரான தமிழர் அவரை விரட்டியிருக்கின்றார்.

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் பிரதேசமொன்றில் தமிழ் குடும்பமொன்றிற்குச் சொந்தமான பூர்வீகக் காணிக்கு முஸ்லிம் நபர் ஒருவர் உரிமை கொண்டாட தொடங்கியுள்ளார். இதனையறிந்த ஏனைய முஸ்லிம்கள் அவருக்கு சாரமாரியாக ஏசி,  அங்கிருந்து துரத்தியடித்தது மட்டுமன்றி காணி உரிமையாளருக்கும் அறிவித்துள்ளனர்.

அகவே, தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான அரசியல் உறவை ஒருபுறம் வைத்துவிட்டு நோக்கினால், சாதாரண மக்களுக்கு இடையிலான இன உறவு என்பது இன்னும் பலமாகவே உள்ளது.

ஆனால் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பலமாக இருப்பதாக சொல்ல முடியாது. உண்மையில் அது வீழ்ச்சி கண்டுள்ளது. அக்காலத்தில் இருந்த உறவுக்கும் இப்போதுள்ள உறவுக்கும் வித்தியாசமுள்ளது. அல்லது வேறு பரிமாணம் ஒன்றை எடுத்துள்ளது எனலாம்.

இப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரு சம்பவங்களும் ஆகப் பிந்திய உதாரணங்கள் மட்டும்தான். இதுபோல நூறு சம்பவங்கள் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தினமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. சமகாலத்தில் கசப்பான நிகழ்வுகளும் இடம்பெறாமல் இல்லை.

ஆயினும். ஒரு விடயத்தை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

அதாகப்பட்டது, மேலே குறிப்பிட்ட சம்பவங்களில் சகோதர இனத்தவருக்கு ஒரு அநியாயம் நடந்து விடக் கூடாது என்பதற்காக தமது இனத்தைச் சேர்ந்தவரையே பகைத்துக் கொண்ட தமிழரும், முஸ்லிமும் கடந்தகால வரலாற்றை அறிந்தவர்கள் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள். இந்தப் பகுதியில் தமிழர்களுக்கு சொத்துக்கள் இருந்தன என்பதை அறிந்து வைத்திருக்கின்ற ஒரு பொதுமகன்தான் நியாயத்தைப் பேசுவதற்கான உந்துதலைப் பெறுவான். இது இயல்பானது.

அந்த வகையில் பார்த்தால், (குறிப்பாக வடக்கு, கிழக்கில்) 1970களுக்கு முன்பு பிறந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இவ்விரு இனங்களின் உறவும் எப்படி இறுக்கமாக, பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இருந்தது என்ற வரலாறு தெரியும். இன உறவு பற்றிய பல பசுமையான சம்பவங்கள் அவர்கள் மனதில் நினைவுகளாக உள்ளன.

70 களில் பிறந்தவர்களும் இந்த பிணைப்பை கொஞ்சம் நேரில் பார்த்துள்ளார்கள். அன்றேல், அது பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளார்கள். ஒரு திரும்பல் புள்ளியில் வாழ்ந்த தலைமுறை என்ற வகையில் தமிழ்-முஸ்லிம் உறவு பற்றிய புரிதல் 80களின் குழந்தைகளுக்கும் இருப்பதாகச் சொல்லலாம்.

ஆனால். 1990ஆண்டிலும், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகும் பிறந்தவர்களான இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த வரலாறும், முன்கதையும் தெரியாது என்றுதான் கூற வேண்டும்.

முஸ்லிம்களும் தமிழர்களும் ஏன் சிங்கள மக்களும் கூட எவ்வாறு பின்னிப் பிணைந்து இருந்தார்கள், அவர்களுக்கு இடையிலான கலாசார ஒற்றுமை, பழக்க வழக்கங்கள் என்ன, எந்தப்புள்ளியில் முஸ்லிம்-தமிழ் உறவு கசப்பான அனுபவங்களைச் சந்தித்தது? இவ்விரு இனங்களதும் பிணைப்பு யாரின் நடவடிக்கையால் இறங்குமுகமாகத் தொடங்கியது என்பதெல்லாம் இளைய தலைமுறைக்கு தெரியாது.

இன உறவை ஆழமாக அறிந்த, அனுபவசாலிகளான மூத்தவர்கள் தமது பிள்ளைகளுக்கும் இளைய தலைமுறைக்கும் அதன் அடிவேர்கள் பற்றி எடுத்துரைத்தது மிகக் குறைவாகும். இயந்திர உலகில் பழங் கதைகளை எல்லாம் அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் இந்தத் தலைமுறையிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போதிருக்கின்ற இளைய தலைமுறையில் இருந்துதான் அதற்கடுத்த தலைமுறை உருவாகப் போகின்றது. அவர்களுக்கு கடந்தகால சரித்திரங்கள் இதைவிடக் குறைவாகவே கடத்தப்படப் போகின்றன என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

இனங்களுக்கு இடையிலான நல்லுறவை கட்டியெழப்ப நாம் முற்படுகின்றோம் என்றால், வரலாறு தெரியாமல் இருத்தல் என்பது ஒரு மோசமான, ஆபத்தான போக்கு என்றுதான் கருத வேண்டியுள்ளது.

தமது அறிவுக்கு எட்டிய வரையில் தமது காலத்தில் நடந்த, கேள்விப்பட்ட சம்பவங்களை வைத்து, இளைஞர்கள் செயற்பட முற்படுகின்ற போது, வேண்டத்தகாத பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இன உறவின் ஆழ அகலங்கள், வரலாறு பற்றியெல்லாம் எதனையும் அறிந்திராத இளைஞர்கள், இப்போது நடக்கின்ற ஒரு சிறிய சம்பவத்தை வைத்துக் கொண்டு பகைமை பாராட்ட முனைவதை சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி பொது வாழ்விலும் காண்கின்றோம்.

எனவே, வரலாற்றுச் சம்பவங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உள்ளது உள்ளபடி கடத்தப்பட வேண்டியது இன்றியமையாதது. இன உறவை கட்டியெழப்பும் முயற்சி;க்கு இதுதான் அடித்தளமாகும்.

அரசியல், இனம், மதம், சாதி, பிராந்தியம் என்ற வேறுபாடுகளைக் கடந்து இவ்விடயத்தை செய்தாக வேண்டும். இப்போது இவற்றையெல்லாம் வைத்தும் இலாபம் தேடிக் கொண்டிருக்கின்ற சக்திகள் இம்முயற்சிக்கு தடைபோடலாம். அதையும் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது.

தமிழர்களும் முஸ்லிம்களும் வடக்கு – கிழக்கிலும் சரி அதற்கு வெளியிலும் சரி மொழி ரீதியான, பூர்வீக ரீதியான பிணைப்பை கொண்டிருப்பது மட்டுமன்றி கலாசார நடைமுறைகள் பலவற்றை தமக்கிடையே பகிர்ந்து கொள்கின்றனர்.

முஸ்லிம்கள் தமிழர் அரசியலோடு ஒன்றித்துப் பயணித்தனர். தமிழரின் போராட்ட வேட்கைக்காக  பல முஸ்லிம் இளைஞர்கள் தமது உயிர்களை தியாகம் செய்தனர். அப்பாவித் தமிழ் குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். 1990 வரையும் இது தொடர்ந்தது.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, வடகிழக்கு மாகாண சபை உருவாகிய பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களும் பெருவளர்ச்சி பெற்றன. அத்துடன் ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு போக்கு உருவானது. இவையெல்லாம் ஒரு கட்டத்தில் மற்றைய சிறுபான்மையினமான முஸ்லிம்களை நோக்கி திரும்பியது.

இந்த மாறுதல் பல கசப்பான அனுபவங்களை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியது. ஏகப்பட்ட அட்டூழியங்கள் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழத்தப்பட்டது. தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிக்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும். ஆளுக்காள் நம்பிக்கையீனமாக பார்;க்கத் தொடங்கினர்.

சமகாலத்தில், சில முஸ்லிம் ஊர்களில் இருந்த சண்டியர்களும் ஆங்காங்கு தமிழ் மக்களுக்கு அநியாயங்களைச் செய்தனர். ஆனபோதும் ஆயுதக்குழுக்களும் சண்டியர்களும் பார்த்த வேலைதானே இது. தவிர, பொதுவாக அப்பாவி தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ இதில் உடன்பாடு இருக்கவில்லை.

அதன்பிறகு அரசியல்வாதிகள் தொடக்கம் விடுதலைப் புலிகள் தொட்டு சஹ்ரான் கும்பல் வரை இந்த தீய்க்கு எண்ணெய் ஊற்றியுள்ளன. பெருந்தேசியமும் சில வெளிநாட்டுச் சக்திகளும் இதில் குளிர்காய்ந்தன.

இதனையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டியுள்ளது. நடந்த நல்ல – கெட்ட சம்பவங்கள் எல்லாவற்றையும் சொல்லித்தான் வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. பக்கச் சார்பாகவோ, ஒளித்து மறைத்தோ பேசுவதானது, தேவையற்ற புரிதல்களை ஏற்படுத்தலாம். 

இன உறவை சம்பந்தப்பட்ட சமூகங்களுக்குள் இருந்ததான் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதைவிடுத்து, வெளித்தரப்பால் இதனைச் செய்ய இயலாது.

வெளிநாடுகளோ, நிறுவனங்களோ கருத்தரங்குகளை நடத்துவதால் தமிழ் - முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப முடியாது. அரசாஙகமும் அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கம் பற்றிய கொள்கைகளை வகுப்பதால் ஒன்றும் நடக்காது.

நல்லிணக்க அமைச்சு ஒன்றை நிறுவி, அதில் அமைச்;சருக்கும் ஏகப்பட்ட ஊழியர்களுக்கும் வேலை வழங்கி, பெருந்தொகை நிதியைச் செலவிடுவது பாராட்டத்தக்கது என்றாலும், அதனால் உண்மையான இன உறவு உள்ளார்ந்தமாக தோற்றம் பெற வாய்ப்பில்லை.

இன்றைய இளைஞர்கள் இப்போதுள்ள அரசியல்வாதிகளைப் பார்த்து, 'ஓ.... இவர்கள்தான் பெரிய அரசியல் தலைவர்கள், மேதைகள். இவர்கள் செய்வதுதான் உண்மையான அரசியல்' என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மறைந்த எம்.எச்.எம்.அஷ;ரப், பாக்கிர் மாக்கார், ஏ.சி.எஸ்.ஹமீட், ராசீக் பரீட் என பல அரசியல் முன்னோடிகளை முஸ்லிம் இளைஞர்களுக்கு தெரியாது.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம் மற்றும் தொண்டமான் போன்ற தமிழ் தலைவர்கள் எவ்வாறாக செயற்பட்டார்கள் என்ற விடயம் கணிசமான இளைய தலைமுறை தமிழர்களுக்கு தெரியாது.

அதே மாதிரி, இன உறவின் கடந்தகாலமும் 90களுக்குப் பிறகு பிறந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே, 'இப்போது இருப்பதுதான் இன உறவின் சரியான அடிப்படை' என்று அவர்கள் தவறாக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிகின்றது.

தீவிர இனப் பற்றாளர்கள், அரசியல் கூத்தாடிகளுடன் சேர்ந்து கொண்டு, வரலாறு தெரியாத இளைஞர்களும் நிகழ்கால இன முரண்பாடுகளுக்கு தூபமிடுவதை காணக் கூடியதாக உள்ளது. இதனைச் சீர்செய்வதற்கு, கடந்தகால வரலாற்றை அவர்களுக்கு சொல்ல வேண்டியது மூத்தவர்களின் கடமையாகும்.

கடந்த தலைமுறைக்கு தெரிந்த ஒன்றை, இந்தத் தலைமுறைக்குச் சொல்லவில்லை என்றால், அவர்கள் தமக்குத் தெரியாத ஒரு வரலாற்றை தமது பிள்ளைகளுக்குச் சொல்வதற்;கான எந்த வாய்ப்புக்களும் இல்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .