Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 30, வியாழக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 07 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தே. ம. ச.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலிய உல்லாச பிரயாணிகளுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் கடந்த வாரம் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகளோடு புலிகளின் கொடிகள், படங்கள் மற்றும் அடையாளங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பகிரவிட்டதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும் இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தே.ம.ச.க்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் இந்த விஷயத்தை போட்டு அக்கட்சியை விமர்சிக்கின்றனர்.அக்கட்சியை ஆதரித்த போதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போரும் அச்சட்டத்தை எதிர்த்தாலும் எதிரிகாவிட்டாலும் இச்சம்பவங்களை பாவித்து அரச ஆதரவாளர்களை அசௌகரித்துக்கு உள்ளாக்க விரும்புவோரும் இவ்வாறு அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்.
தே. ம. ச. யும் அதன் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் நீண்டகாலமாகவே அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து வந்துள்ளன. ம.வி. மு. யினர் அவர்களது முதலாவது கிளர்ச்சியின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்து 1977ஆம் ஆண்டிலேயே மீண்டும் பகிரங்க அரசியலில் ஈடுபட ஆரம்பித்தனர். எனவே 1979 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றிய போது கடும் அடக்குறையினால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஓர் அமைப்பு என்ற வகையில் ம.வி. மு. அதை எதிர்க்க நியாயமான காரணங்கள் இருந்தன.
உண்மையிலேயே பயங்கரவாதம் என்ற சொல் 1970 ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் அரசியல் இலக்கியத்தில் இருக்கவில்லை. 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹர்த்தால் போராட்டத்தின் போது சில இடதுசாரி தலைவர்கள் ஒரு நாள் எதிர்ப்பை காட்டுவது மட்டுமே தமது நோக்கமாக இருந்தது என்றும் அதற்கப்பால் போராட்டத்தை தொடர்வோர் பயங்கரவாதிகள் என்று கூறியதாக சில தகவல்கள் இருந்த போதிலும் அச்சொல் அச்செய்தியோடு மறைந்துவிட்டது.
ஆயினும், 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஆளும் கட்சியினர் இச்சொல்லை பரவலாக பயன்படுத்தினர். எனவே ம.வி. மு. யினர் அச்சொல்லை வெறுத்தனர். ம.வி.மு.யினர் 80களின் இறுதியில் நடைபெற்ற தமது இரண்டாவது கிளர்ச்சியை அடுத்து சில வருடங்களுக்குப் பின்னர் பகிரங்கமாகவே வன்முறை அரசியலை கைவிடுவதாக அறிவித்தனர்.
எனினும், அவர்கள் அதன் பின்னரும் பாராளுமன்ற அரசியலோடு நின்றுவிடவில்லை. வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்களை முற்றுகையிடுதல் போன்ற தொழிற்சங்க போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இவற்றின் போது பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபடும் நிலையும் ஏற்படுவதுண்டு. எனவே, அவையும் பயங்கரவாதம் என்று அழைக்கப்படும் அபாயமும் ஏற்பட்டது.
அரகலய என்றழைக்கப்படும் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியையும் அப்போதைய ஆளும் கட்சியினர் பயங்கரவாதம் என்றே கூறினர். அவ்வெழுச்சியின் பயனாக பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க அதை பாசிசம் என்றும் அழைத்தார்.
ம.வி.மு.யினர் நாட்டு பிரிவினையை எதிர்த்த போதிலும் பிரிவினைவாதிகளை அடக்குவதற்காகவே கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தனர். பிற்காலத்தில் அரசாங்கங்கள் அச்சட்டதுக்கு பதிலாக சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு இணையான சட்டமொன்று கொண்டு வருவதாக கூறிய போதிலும் ம.வி.மு ஆரம்பத்தில் அச்சட்டத்தை முற்றாக இரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.
முந்தைய அரசாங்கங்களின் காலத்திலும் போரில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்களோடு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயினும் ம.வி. மு தலைமை தாங்கும் அரசாங்கமொன்றின் கீழ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவ்வாதறான கைதுகள் இடம்பெறும் போது அது அசாதாரணமாக முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் அச்சட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தமையே அதற்குக் காரணமாகும்.
பயங்கரவாத தடைச் சட்டமானது மிகவும் மோசமான அடக்குமுறை சட்டமாகும். ஒரு சந்தேக நபரிடம் சித்திரவதை மூலம் பெறும் வாக்குமூலமும் அவருக்கு எதிராக சாட்சியாக உபயோகிக்க அச்சட்டம் இடமளிக்கிறது. அதில் பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்கணமும் தெளிவான வரைவிலக்கணமும் அதில் இல்லை. இதனால் எந்த ஒரு செயலையும் பயங்கரவாதம் எனக் கூறி ஆட்களை கைது செய்ய பொலிஸார் முற்படும் அபாயம் அச்சட்டத்தில் இருக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவோரை வருடக் கணக்கில் தடுத்து வைக்கவும் அதிகாரிகளால் முடிகிறது.
எனவே, எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் பல வருடங்களாக தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு சிறையில் அத்தமிழ் கைதிகளை சந்தித்துவிட்டு வந்த அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது வயதுக்கும் (35) மேலாக வழக்கின்றி சிறையில் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர் என்று பாராளுமன்றத்தில் கூறினார்.
ஆனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கமும் அக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டமானது ஐ.நா. மனித உரிமை பேரவையாலும் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்ட சட்டமாகும். சர்வதேச நெருக்குதல் காரணமாக ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதாவது 2018 ஆம் ஆண்டு அச்சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Counter Terrorism Bill) என்ற பெயரில் சட்டமூலமொன்று வரையப்பட்டது. அதில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் இல்லாத சில செயல்களும் பயங்கரவாத குற்றங்களாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே, அது முந்தைய சட்டத்தைப் பார்க்கிலும் மோசமானது என்று தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறின. ரணில் ஜனாதிபதியாக இருந்த கடந்த வருடம் பல அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றோடு 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயங்கரவாத விரோத சட்டம் (Anti-Terrorism Bill) என்ற பெயரில் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயினும் எதிர்ப்புக்கள் காரணமாக அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை. ஐரோப்பிய பாராளுமன்றம் இலங்கை விடயத்தில்2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி நிறைவேற்றிய பிரேரணை ஒன்றில் இச்சட்டத்தை மாற்றி அமைக்காவிட்டால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இரத்துச் செய்ய நேரிடும் என்று சூசகமாக கூறப்பட்டிருந்தது.
அதேவேளை ஐ.நா.மனித உரிமை பேரவையும் பல ஆண்டுகளாக இச்சட்டத்தை திருத்தி சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு இணையான சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரேரணைக்கு பயந்த கோட்டாபய அரசாங்கம் அதேமாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தவென அமைச்சரவை உபகுழுவை நியமித்தது.
அத்தோடு சிறையிலிருந்த புலிகள் அமைப்பின் 16 முன்னாள் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் ஜூன் மாதம் 25 ஆம் திகதி இவ்விவரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அறிவிக்கப்பட்டது.
எனவே, கைதிகளை விடுதலை செய்தமையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுத்தமையும் நல்லெண்ண நடவடிக்கைகள் அல்ல ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரேரணையின் தாக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பது தெரிகிறது. சட்ட திருத்த நடவடிக்கைகள் பின்னர் கைவிடப்பட்டமை அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்த விடயத்தில் தே.ம.சக்தி அரசாங்கம் இரண்டும் கெட்ட நிலையை எதிர்நோக்கி இருப்பதாக தெரிகிறது.
புலிகள் அமைப்பின் கொடிகள் இலச்சினைகள் ஆகியவற்றை பாவிக்காமல் தமிழ் மக்கள் தமது உறவினர்களை நினைவு கூறுவதில் தவறில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
போரில் தமது உறவினர்கள் கொல்லப்பட்ட நாளில் தமிழ் மக்கள் அவர்களை நினைவுகூருவதற்கு மாறாக, வருடத்தில் புலிகளால் குறிக்கப்பட்ட இரண்டு நாட்களில் அதாவது மே மாதம் 19 ஆம் திகதியும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதியும் தான் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
மே மாதம் 19 ஆம் திகதியானது பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறியப்பட்ட நாளாகும். நவம்பர் 27 ஆம் திகதியானது புலிகளின் முதலாவது மாவீரரான சங்கர் உயிரிழந்த நாளாகும்.
இந்நினைவேந்தல்களின் போது பலிகளின் இலச்சினைகளை மக்கள் காண்பிப்பது வழமையாகும். இது சட்டவிரோதமானது என்பதால் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்யலாம்.
இந்த விடயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வரும் விடயமாகும். எனவே, அரசாங்கம் விரும்பாவிட்டாலும் தமக்கு பணிப்புரை வழங்கப்படும் வரை அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவோர்.
இதை நிறுத்துவதாக இருந்தால் அரசாங்கம் பொலிஸாரின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டும். அது தே.ம.ச எதிர்த்த கொள்கையாகும். கூடிய விரைவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது அல்லது அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமொன்றை கொண்டு வருவதே இதற்குத் தீர்வாகும்.
12.04.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago