2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம்

J.A. George   / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார்.

20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார்.

“நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட்.

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது.

கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.

“இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார்.

1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது.

அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது.

வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன.

இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார்.

“இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது.

இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .