Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Johnsan Bastiampillai / 2021 நவம்பர் 18 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாரிய போராட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கின்றது.
போராட்டத்தை முடக்குவதற்கு, ராஜபக்ஷர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கால கட்டுப்பாடுகளைக் காட்டி, நீதிமன்றத்தின் ஊடாகத் தடை உத்தரவுகளைப் பெற முனைந்தார்கள். அதுபோல, கொழும்பின் பிரதான நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து வெளி மாவட்டங்களில் இருந்து உள்வரும் வாகனங்களை சோதனையிட்டு போராட்டக்காரர்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி, இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பது, ராஜபக்ஷர்களை நிச்சயமாக அதிர்வூட்டியிருக்கும்.
ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவும், உலகம் பூராவும் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல்கள் எழவும் சரியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒன்றரை ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளால் நாடு முடக்கத்திலேயே இருந்தது.
இதனால், ராஜபக்ஷர்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை. தொழிற்சங்கங்கள் சிலவும், பட்டதாரி மாணவர்களும் சில போராட்டங்களை மட்டுப்படுத்திய அளவில், ஆட்சிக்கு எதிராக நடத்தி வந்தார்கள். மாறாக, பெருமளவிலான மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டங்கள், தென் இலங்கையில் நடைபெற்றிருக்கவில்லை.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தளவில், கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான போராட்டம், ஆயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நடைபெற்றது.
அப்போதும், அந்தப் போராட்டத்தை முடக்குவதற்காக, நீதிமன்றத்தின் ஊடான தடைகளை, பொலிஸார் பெற்றிருந்தனர். ஆனாலும், அதனை வெற்றிகரமாக முறியடித்த போராட்டக்காரர்கள், அறிவித்தபடி பொத்துவிலில் போராட்டத்தை ஆரம்பித்து, பொலிகண்டியில் நான்கு நாளகளில் நிறைவு செய்திருந்தார்கள். அந்தப் போராட்டத்தில், ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் மக்கள் பங்கு பற்றியிருப்பார்கள். அதுதான், ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வந்து சந்தித்த முதலாவது பெரிய போராட்டம்.
ஆனால், அந்தப் போராட்டம் ராஜபக்ஷர்களுக்கு அதிக நெருக்கடியை வழக்கும் ஒன்றாக, தென் இலங்கையினால் பார்க்கப்படவில்லை. மாறாக, ராஜபக்ஷர்களின் இனவாத அரசியலுக்கான ஒரு கருவியாகவே காட்சிப்படுத்தப்பட்டது.
ஆனால், இப்போது ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியிருக்கின்ற போராட்டம், தென் இலங்கையில் பல தரப்புகளையும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது. ஏனெனில், ராஜபக்ஷர்கள் மீது, தென் இலங்கையில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ள போதிலும், அவர்களை ஆட்சியிலிருந்து தற்போதைக்கு அகற்றுவதற்கான வாய்ப்புகள் பெரியளவில் இல்லை என்கிற எண்ணம் பரவலாக இருந்து வந்தது.
குறிப்பாக, ராஜபக்ஷர்களைத் தோற்கடிக்கும் வலுவோடு, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இல்லை என்பது, தென் இலங்கை மக்களின் நிலைப்பாடு.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ராஜபக்ஷர்களின் ஆட்சி, மக்கள் விரோத நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டங்களை, பிரதான எதிர்க்கட்சி என்கிற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி செய்திருக்கவில்லை.
நாட்டின் பெரும் தொழிற்றுறையாளர்களான விவசாயிகள், உரத்துக்கான கட்டுப்பாடுகளால் திண்டாடிய போதிலும், நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்டவற்றுக்கான தட்டுப்பாட்டால் அல்லாடிய போதிலும் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி, எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அதிக பட்சமாக ஊடக சந்திப்புகளை நடத்தியதைத் தாண்டி, மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு, அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை.
இவ்வாறான நிலையில்தான், யாரும் பெரிதாக எதிர்பார்க்காத வகையில், ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை, ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்தது. தென் இலங்கையைப் பொறுத்தளவில், மக்களை அதிகளவில் திரட்டி, போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தும் வல்லமை ராஜபக்ஷர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்குமே உண்டு. ஒரு சில நாள்களில் செய்யப்படும் ஏற்பாடுகளுடனேயே, இலட்சக்கணக்கானவர்களை கொழும்பில் கூட்டுவார்கள்.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சியோ, அதன் புதிய வடிவான ஐக்கிய மக்கள் சக்தியோ, பாரிய மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கான வல்லமையை, கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரிதான நிரூபித்திருக்கவில்லை.
இவ்வாறான கட்டத்தில்தான், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போராட்டமும் அதில் பங்களித்த மக்களின் எண்ணிக்கையும் கவனம் பெறுகின்றன.
இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் குறிப்பிட்டளவில் இருந்த போதிலும், அதையும் தாண்டி, கணிசமான தொகையினராக பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்களே பெரும்பாலும் கடந்த தேர்தல்களில், ராஜபக்ஷர்களை மீட்பர்களாகக் கருதி வாக்களித்திருந்தனர். இதுதான், ராஜபக்ஷர்களை அச்சப்படவும் ராஜபக்ஷர்களுக்கு எதிரான தரப்புகளை நம்பிக்கை கொள்ளவும் வைத்திருக்கின்றன.
பாரிய மக்கள் ஆதரவோடு வந்த ஆட்சிக்கு எதிராக, இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ராஜபக்ஷர்களை மீட்பர்களாகக் கருதிய மக்களைத் திரட்ட முடியும் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ராஜபக்ஷர்கள் கூட, 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது, தாங்கள் தோற்கடிக்கப்பட்டதும் நல்லாட்சிக்காரர்களோடு இணக்கமான நிலையைப் பேணவே முனைந்தார்கள். அது முடியாத நிலையில்தான், நாட்டின் பாதுகாவலர்களான தங்களை, நல்லாட்சி எப்படியெல்லாம் பந்தாடுகின்றது என்று காட்டி, அனுதாப அலையை மெல்ல வளர்த்து, அதை வாக்கு அரசியலாக மாற்றி, வெற்றி கண்டார்கள். இதற்கு, தென் இலங்கையின் பிரதான ஊடகங்கள் பாரிய பங்களிப்பைச் செய்தன.
ஆனால், சஜித் பிரேமதாஸவுக்கோ ஐக்கிய மக்கள் சக்திக்கோ, ராஜபக்ஷர்களின் அளவுக்கு ஊடக ஆதரவோ, பௌத்த சிங்கள தரப்புகளின் ஆதரவோ கிடையாது. அப்படியான நிலையில்தான், இந்தப் போராட்டத்தில் கூடிய மக்களின் தொகை கவனிக்கப்பட வேண்டியதாகின்றது.
ராஜபக்ஷர்களுக்கு எதிராக, ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைவதற்கான தேவை இருந்த போதிலும், அது எது என்பதுதான் கேள்வியாக இருந்தது. அந்தக் கேள்விக்கு சஜித்தோ, ஐக்கிய மக்கள் சக்தியோ பாரிய முனைப்புகள் எதையும் செய்யாது, தங்களை அடையாளப்படுத்த முடிந்திருக்கின்றது.
ராஜபக்ஷர்கள் மீதான பெரும் அதிருப்தியை, தங்களின் ஆதரவுத்தளமாக இனியாவது வளர்ப்பது குறித்து, ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தலாம். அதன் மூலம், செயற்றிறன் மிக்க எதிர்க்கட்சியொன்று, எப்படிச் செயற்படலாம் என்பது குறித்து யோசிக்கலாம்.
அப்படிச் செயற்படும் போதுதான், ராஜபக்ஷர்களுக்கு எதிரான தரப்புகளும் ஆட்சியின் பங்காளிகளாக இருக்கும் அதிருப்தியாளர்களும் ஓரணியில் திரள முடியும்.
ஆட்சிக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை; வரும் தேர்தல்களிலும் இலகுவான வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கும் எந்த ஆட்சியாளரும், மக்களைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள். ராஜபக்ஷர்களும் தற்போது தவறிய இடம் அதுதான். மக்களைப் பற்றிச் சிந்திக்காது, சீனாவுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்கு முயன்று சறுக்கியிருக்கிறார்கள்.
ராஜபக்ஷர்களுக்கான வாக்குகள், கிராமங்களில் இருந்தே கிடைத்து வந்திருக்கின்றன. கிராம மக்கள் விவசாயத்தையும் அதனோடு தொடர்புடைய தொழில்களையும் வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்கள்.
அப்படியான நிலையில், அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையில், எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் உரத்துக்கான தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது ராஜபக்ஷர்களின் ஆட்சி.
அத்தோடு நிற்காமல், சேதன உரத்தை ஊக்குவிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு, சீனாவில் இருந்து வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட உரத்தை நாட்டுக்குள் கொண்டுவர எத்தனிப்புகள் செய்யப்படுகின்றன. இவையெல்லாம் மக்களை அதிகளவில் அச்சுறுத்தும் விடயங்கள்.
இவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் சரியாக உள்வாங்கி, மக்களின் மனங்களைப் பிரதிபலிப்பதுதான் எதிர்க்கட்சியின் உண்மையான வேலை. அதைச் சரியாகத் தொடர்ந்து செய்தால், ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம்.
அவ்வாறான வாய்ப்புகள் குறித்து, இனியாவது சஜித்தும் ஐக்கிய மக்கள் சக்தியும் சிந்திக்கத் தொடங்கலாம். அந்தச் சிந்தனை, செயற்பாட்டு அரசியலுக்கு ஊக்கத்தை வளங்கும்.
அப்படியான சூழலொன்றுதான், அடாவடிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை, ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். இல்லையென்றால், ராஜபக்ஷர்கள் மக்களைப் பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல், தொடர்ந்தும் காட்டுத் தர்பாரே நடத்துவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago