Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 மே 11 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
அரசியல்,அந்த சமூகத்திற்கே பயனற்றதாகி, சீர்கெட்டுப் போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதனை மக்களும், அரசியல் வாதிகளும் நன்கு அறிவர். ஆனால், அரசியல்வாதிகள் அவற்றையெல்லாம் ‘வசதியாக மறந்து’ விடுகின்றார்கள். மக்கள் தேர்தல் வரும்போது அவர்களுக்கு ‘பாவமன்னிப்பு’ வழங்கி விடுகின்றார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் பணம் மற்றும் பதவி ஆசை,சமூக சிந்தனையற்ற தலைவர்கள் மற்றும் எம்.பிக்களின் உள்வருகை, ஆட்சியாளர்கள் மற்றும் பெருந் தேசியக் கட்சிகளின் பிரித்தாளும் தந்திரம், அரசியல்வாதிகளுடன் இருக்கின்ற ஒட்டுண்ணிகளின் புத்திகெட்டதனம், அதிகாரமுள்ள அரசியல் வாதிகளை விரும்புகின்ற முஸ்லிம் சமூகத்தின் மனோநிலை... என பல விடயங்கள் இந்தக் காரணப் பட்டியலில் அடங்குகின்றன.
இவை தவிர இன்னுமொரு முக்கிய விடயமும் உள்ளது. அதாவது முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கும், அவர்களை வெளியில் இருந்து வழிநடத்துவதற்குமான ஓர் ஏற்பாடு இல்லாமல் போனமையும் கூட முஸ்லிம் அரசியலின் இழிநிலைக்கு பிரதான காரணமாகும்.
தமிழ்ச் சமூகத்தில் அல்லது பெரும்பான்மைச் சமூகத்தில் பலவிதமான அழுத்தக் குழுக்கள் உள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் சமூகம், துறைசார்ந்தவர்கள் மட்டுமன்றி சமயத் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் அழுத்தக் குழுவாகச் செயற்படுகின்றமை கூர்ந்துநோக்கும்போது புரியும். முஸ்லிம்களுக்குள் இப்படியான ஒரு அழுத்தக் குழு இன்றுவரை இல்லை.
இதேவேளை, மதப் பெரியார்கள், சமயவழிகாட்டிகளின் பிரதான நோக்கம் அந்தத்த சமயம் சார்ந்த ஆன்மீக வழிகாட்டலாக இருந்தாலும் கூட, இலங்கையில் அதற்கப்பாலான ஒரு வகிபாகத்தை ஏனைய சமயத் துறவிகள் எடுத்திருக்கின்றார்கள் என்பது கண்கூடு. இது தவிர்க்கமுடியாததும் காலத்தின் தேவையுமாகும்.
பௌத்த பீடங்களும், இந்து சமயத் தலைவர்களும், ஏன் அண்மைக் காலத்தில் கத்தோலிக்க சமயத் தலைவர்களும் தமது மக்களை வழிப்படுத்துவதில் முக்கியமான பொறுப்பை ஏற்றுச் செயற்படுகின்றன. சமூகத்தையும் அரசியலையும் வழிப்படுத்தும் விடயத்தில் ஓர் அழுத்தக் குழுபோல செயற்படுகின்றார்கள் எனலாம்.
பௌத்த மக்களுக்குத் தமிழர்களுக்கு, கத்தோலிக்கர்களுக்கு ஏதாவது அநியாயம் நடக்கின்றபோது அந்தந்த சமூகத்தின் மத பெரியார்கள் கண்ணை மூடிக் கொண்டுபார்த்துக் கொண்டிருப்பதில்லை. மதபோதகர்கள் சிலருக்குள்ளேயும் அரசியல் புகுந்துள்ளது என்பது வேறுகதை.
ஆனால், பேசவேண்டிய இடத்தில் தமது சமயத்தை பின்பற்றும் மக்களுக்காகப் பேசுவதற்குப் பௌத்த, இந்து, கத்தோலிக்க மதத் தலைவர்கள் தயங்குவதில்லை. துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியான ஒரு நிலைமை இல்லை என்பது ரகசியமான விடயமல்ல.
அரசியல்வாதிகளைத் தட்டிக்கேட்காத முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் சமூகம் போல.... சமூகத்திற்காக முன்னிற்காத மத அமைப்புக்கள், அரசியல் தவறுகளைத் தட்டிக் கேட்காத மத தலைவர்களும் உள்ளனர்.
மத போதகர்களின் அறிவுரைகளை மதிக்காத தலைவர்கள், ஜம்மியத்துல் உலமா சபை போன்ற பிரதான மத அமைப்புக்களுக்கு முழுமையாகக் கட்டுப்படாத முஸ்லிம் மக்கள் கூட்டம், யதார்த்த சூழல் என பல விடயங்கள் இதன் பின்னணிக் காரணங்களாகக் கொள்ளப்படலாம்.
இருப்பினும், அரசாங்கங்கள் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கின்றபோது, முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறுகின்ற போது, அரசியலில் மிகப் பெரிய பித்தலாட்டங்கள் நடக்கின்ற போது முஸ்லிம் மதப் பெரியார்களும், சமய அமைப்புக்களும் பெரிதாக வாயைத் திறந்து பேசுவதில்லை என்பது சர்வசாதாரணமான விவகாரம் அல்ல.
ஜம்மியத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கும், அதேபோல் உலமா சபை உள்ளிட்ட இதர முஸ்லிம் அமைப்புக்கள் எல்லாம் தலைப் பிறை பார்ப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டனவா? அல்லது இப்படியான ஒருவட்டத்தைப் போட்டுக் கொண்டு உள்ளுக்குள்ளே நிற்கின்றனவா? என்ற கேள்வி மக்களால் பல தடவை எழுப்பப்பட்டிருக்கின்றது.
அநேகமான ஊர்களில் பாடசாலைகள், சமூக நிறுவனங்களில் மட்டுமன்றி பள்ளிவாசல்களும் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. தேர்தல் பிரசாரத்திற்காக முஸ்லிம் சமய பெரியார்களும் பள்ளிவாசல்களும் மறைமுகமாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
அரசியல்வாதிகளுக்கு வாக்குச் சேகரித்துக் கொடுப்பதில் ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசலின் நிர்வாகம் அல்லது ஒரு சமய அறிஞர் நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றிய சம்பவங்களும் ஏராளம் உள்ளன. இதேபோல் சிங்கள ஆட்சியாளர்களைக் குளிர்விப்பதிலேயேஅதிக காலத்தைச் செலவழித்த தேசிய மட்ட போதகர்களும் இல்லாமலில்லை.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், தட்டிக் கேட்பதற்கும், அவர்களைச் சரியாக வழிப்படுத்தும் விடயத்தில் வெளியில் இருந்து ஓர் அழுத்தக் குழுவாகச் செயற்படுவதற்கும் மேற்குறிப்பிட்ட இந்த இஸ்லாமிய மதத் தலைவர்கள் முன்னிற்கவில்லை என்பது கவலைக்குரியது.
ஒவ்வொரு பிரதேசத்திலும். தேசிய மட்டத்திலும் இதுதான் யதார்த்தம் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். எனவே, முஸ்லிம் மதப் பெரியார்கள் அரசியல்வாதிகளிற்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்காமல், வாயைத் திறந்து பேச வேண்டும் என்ற கருத்துகள் சமூக சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்தப் பின்னணியில், இலங்கையின் முக்கியமான மார்க்க அறிஞர்களுள் ஒருவராகக் கருதப்படும் யூசுப் முப்தியின் அண்மைய கருத்து கவனிக்கப்பட வேண்டியதாகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார்த்து அவர் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள், முஸ்லிம் அரசியலின் குரல் வளையை இறுக்கிப் பிடித்து உலுக்கியுள்ளன.
‘நான் நோன்பு பிடித்துக்கொண்டு முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முஸ்லிம் மக்களின் அரசியல் பிறநிதிகளுக்குக் கிடைத்துள்ள ஆசனம், பதவி நிரந்தரமானதல்ல. அதைவிட்டு நீங்கள் விலகிப் போகாவிட்டாலும் கூட, மக்களின் மனங்களில் இருந்து நீங்கள் எப்போதோ போய்விட்டீர்கள். அதுதான் யதார்த்தம்.’
‘நீங்கள் சமூகத்துக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? என்ன கதைத்திருக்கிறீர்கள்? அரசியல்வாதிகளான உங்களைக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் எந்தப் பிரச்சினை முடிந்திருக்கின்றது என்று பட்டியலிட்டுக் கூறுங்கள் பார்ப்போம்’ என்று அவர் கேள்வி யெழுப்பினார்
‘காணிப் பிரச்சினை தொடங்கி சட்டப் பிரச்சினைகள் முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களுடைய அரசியலின் ஊடாக தீர்வு கண்டிருக்கின்றீர்களா? அப்படித் தீர்வு கண்டிருந்தால் சொல்லுங்கள்’என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
‘சமூகத்தின் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள், இனியும் வாழப் போகின்றீர்கள் என்பதே கசப்பான உண்மை. வருகின்ற தேர்தல் காலங்களிலும் அதையே நீங்கள் செய்யப் போகின்றீர்கள்.
ஆகவே எங்களுக்காக, சமூகத்திற்காகக் குரல் கொடுக்கின்ற, நாட்டுக்காக அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளே தேவையாகவுள்ளது. எனவே, கட்சி அரசியலை விட்டு சமூகத்திற்காக அரசியல் செய்ய முன்வாருங்கள்,
அதைவிடுத்து, கட்சிசார் அரசியலையே தொடர்ந்தும் நீங்கள் செய்வீர்கள் என்றால், இறைவன் (அல்லாஹ்) நிச்சயமாக உங்களை வாழவிடமாட்டான்’ என்று யூசுப் முப்தி கூறியுள்ளார். ஒரு மார்க்க அறிஞராகவோ சமூக செயற்பாட்டாளராகவோ யூசுப் முப்தி முன்வைத்துள்ள கருத்து முன்மாதிரியானதும் முக்கியமானதும் ஆகும்.
பொதுவாக அரசியல்வாதிகளுக்குச் சார்பாகப் பேசுகின்ற அல்லது கண்டும் காணாமல் மௌனமாக இருந்துவிட்டு மார்க்க போதனைகளை மட்டும் கூறிச் செல்கின்ற இஸ்லாமிய வழிகாட்டிகளின் வழக்கமான ஒழுங்கில் இருந்து இது மாறுபட்டதாகத் தெரிகின்றது.
இந்த மாற்றத்தையே முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக வேண்டிநிற்கின்றது. அதனை இன்று யூசுப் முப்தி தொடக்கி வைத்துள்ளமை பாராட்டுக்குரியது.
இந்த வழியில், முஸ்லிம் சமூகத்திற்கு வெளியில் இருந்து நடக்கின்ற அநியாயங்களை மட்டுமன்றி. சமூகத்திற்கு உள்ளிருந்து முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பொறுப்பற்ற அரசியலையும் அநியாயத்தையும் தட்டிக்கேட்க ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் பிறையைத் தீர்மானிப்பதற்காகக் கூடுகின்ற இஸ்லாமிய அமைப்புகள் தொடங்கி ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமய அறிஞர்களும், மதப் பெரியார்களும் முன்வரவேண்டும்.
04.09.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
5 hours ago
8 hours ago