Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜூன் 06 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம்.
திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன.
ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம்.
யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு ஒரு சமூகப் பெறுமானம் உண்டு. 1959 இல் நூலகம் உருவாக்கப்பட்டு, மிகக்குறுகிய காலத்தில் பெருந்தொகையான நூல்களைச் சேர்க்க முடிந்துள்ளது என்றால், அது அக்காலத்தில் வாழ்ந்தோரின் வாசிப்பின் மீதான ஆர்வமும், வாசித்ததைப் பகிரும் ஆர்வமும் வாசிப்பையும் நூல்களையும் ஒரு சமூகப் பெறுமானத்தோடு நோக்கியமையும் ஆகும்.
இன்று நிலைமை அவ்வாறு இல்லை. நூலகங்களின் பணி வாசிப்பை மட்டுமன்றித் தேடலையும் ஆய்வறிவையும் ஊக்குவிப்பதும் தக்கவைப்பதுமாகப் பரந்து உள்ளன. இதனாலேயேதான், நூலகத்தின் மீதான தாக்குதலை, யாழ். அறிவுப்புல சமூகத்தின் மீதான ஒரு தாக்குதலாகப் பலர் நோக்கினர். இன்று, அந்த அறிவுப்புல சமூகம் எங்கு நிற்கிறது?
யாழ்ப்பாண நூலக எரிப்பை முன்னிறுத்தி, இரண்டு அடிப்படை விடயங்கள் தொட்டுக் காட்டப்பட வேண்டியுள்ளன. முதலாவது, ஆவணப்படுத்தல் தொடர்பானது. இரண்டாவது, வரலாறு தொடர்பானது.
1981இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட போது, 97,000 நூல்களை இழந்தோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எரிந்த நூல்கள் என்னவென்று எமக்குத் தெரியாது. அப்போது, அங்கிருந்த முழுமையான நூற்பட்டியலைப் பெற்றுக்கொள்ள, இன்றுவரை நாம் எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. பகுதியான நூற்பட்டியல் கூட எம்மிடம் இல்லை.
நூலக எரிப்பைத் தொடர்ந்து நூலகத்தில் பணியாற்றியோர், நூலகத்தைப் பயன்படுத்தியோர் ஆகியோரின் உதவியுடன், ஓர் அண்ணளவான பட்டியலை எம்மால் தயாரித்திருக்க இயலும். அது, இன்றுவரை நடைபெறவில்லை. இங்கு, எரிந்தழிந்த நூல்களில் பலவற்றின் பிரதிகள், பிற நூலகங்களில் (இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும்) இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கவனிப்புக்குரியது யாதெனில், யாழ்ப்பாண நூலகத்தில் மட்டுமே இருந்த நூல்கள் பற்றியதாகும். அவை, கடைசிப் பிரதிகளாகவோ அல்லது தனித்த பிரதிகளாகவோ உள்ளவை. அவ்வாறான நூல்கள், எவை என்பது பற்றிய கணக்கெடுப்பு எம்மிடம் இல்லை.
உண்மையில் அந்த நூல்கள் தான், நூலக எரிப்பால் ஏற்பட்ட இழப்பு. ஏனெனில் ஏனையவை பிரதியீடு செய்யக்கூடியவை. ஆனால், இவை பிரதியற்றவை; பதீலீடு செய்ய இயலாதவை. அவையே எரிந்தழிந்தவை.
97,000 நூல்கள் எரிந்தன என்று சொல்கிறோமே, இந்தத் 97,000 என்ற இந்தத் தொகை, எவ்வாறு எட்டப்பட்டது. கிடைக்கின்ற தகவல்களின் படி, நூலகம் எரிய முன்னர், கடைசியாகப் பதியப்பட்ட நூலின் இலக்கத்தின் அடிப்படையில், இவ்வாறானதொரு தொகை எட்டப்பட்டது.
ஆனால், இங்கே ஒரு கேள்வி எழுகிறது, ‘இருந்தவை வெறும் 97,000 நூல்கள் மட்டுமா’? அங்கிருந்த பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றின் நிலை என்ன? இவை நூல்கள் அல்ல; அந்தத் தொகைக்குள் அடங்காதவை. இவற்றில் பெரும்பாலானவை, ஒற்றைப் பிரதிகள்; இவை குறித்த எந்தவொரு கணக்கெடுப்போ, குறிப்போ எம்மிடம் இல்லை.
வெறுமனே குறைசொல்லிப் பழக்கப்பட்டுப்போன சமூகம் நம்முடையது. இதனால், ஒப்பாரி பாடியடி, இருந்த நூல்களையும் ஆவணங்களையும் செல்லரிக்க விட்டபடி, 40 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம்.
இந்தக் காலத்தில், நாம் பாதுகாக்காமல் இழந்தவை ஏராளம். இரண்டு உதாரணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு எம்மால் பாதுகாக்கப்படாமையால் நாம் இழந்தவற்றைப் பார்ப்போம்.
சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், வடபகுதியின் தரைத்தோற்றம், நிலவமைப்பு, நீர்மேலாண்மை பற்றி முதன்மையான ஆய்வுகளைச் செய்த ஒருவரது ஆய்வுகள், ஆவணங்கள், நூல்கள் அவரது மறைவின் பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்துக்கு அளிக்கப்பட்டன. அவை மாணவர்களின் பயன்பாட்டுக்குரியவை என்று குறிப்பிடப்பட்டே குடும்பத்தினரால் வழங்கப்பட்டன. சில ஆண்டுகளின் பின்னர், உசாவலுக்காக அவற்றை, பல்கலைக்கழக நூலகத்தில் தேடியபோது, வழங்கப்பட்ட எதுவும் அங்கில்லை. நூல்களைக் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற பேராசிரியர், அதைத் தனது ஆய்வுத் தேவைக்குப் பயன்படுத்தினார். பின்னர், அவ்வாவணங்கள் காணாமல் போயின. ஒருபுறம், அறிவுத்திருட்டு; இன்னொருபுறம் ஆவணஅழிப்பு. இதேபோன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதையும் சேர்த்தே, ‘அறிவுத்துறையின் அயோக்கியத்தனம்’ என்றார் எட்வர்ட் சயித்.
இரண்டாவது உதாரணம், இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு மிக முக்கியமான கட்டுரைகளை எழுதியவர் ஜேம்ஸ் ரட்ணம். பரம்பரையியலில் (Genealogy) தேர்ச்சி பெற்றிருந்த அவர், இலங்கையில் முக்கியமான இரண்டு அரசியல் குடும்பங்கள், இந்தியாவில் இருந்து வந்த கதையை எழுதி, வரலாற்று வரைவியலிலும் சிங்களத் தேசிய உருவாக்கத்திலும் ஒரு நெருக்கடியை உருவாக்கினார்.
இவரது ஒரு கட்டுரை, பண்டாரநாயக்க குடும்பத்தின் வரலாறு பற்றியது. மற்றையது, ஜே.ஆர். ஜெயவர்தனவின் குடும்ப வரலாறு குறித்தது ஆகும். இவையும் அவரது ஏனைய ஆய்வுகளும் அவர் தேடிச் சேகரித்துப் பயன்படுத்திய ஆவணங்களும், அவரால் உருவாக்கப்பட்ட ‘எவ்லின் ரட்ணம் கற்கைகள்’ நிறுவனத்தில் இருந்தன. 1988 இல், அவரது மறைவும் யாழ். குடாநாட்டைச் சூழ்ந்த போரும், ரட்ணம் கற்கைகள் நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை அழித்துவிட்டன. எஞ்சியுள்ளவை, இப்போதும் மெதுமெதுவாக அழிகின்றன. எங்கள் வரலாற்றையும் ஆவணங்களையும் நாங்களே தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கின்ற தலைமுறை எங்களது!
யாழ்ப்பாண நூலகம் எப்போது எரிக்கப்பட்டது என்பது, அடுத்த விடயமாக உள்ளது. ‘மே 31ஆம் திகதி இரவே, நூலகம் எரிக்கப்பட்டது’ என்ற தகவல், இன்று ஆழப் பதிந்துள்ளது. ஆனால், ஜூன் மாதம் முதலாம் திகதி இரவே, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. பொதுத்தளத்தில் அது, மே 31ஆம் திகதி என்று, இன்றும் பதியப்படுகிறது.
இந்தக் குளறுபடியின் பின்னால், மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட நுண்ணரசியல் ஒளிந்திருக்கின்றது. அதைக் கவனியாது, நாம் 40 ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறோம். எங்கள் பலரது குறிப்புகளும் கட்டுரைகளும், மே 31 என்று குறித்தபடியே நினைவுகளைச் சுமந்திருக்கின்றன.
மே 31 என்பது, ‘பொலிஸார் மீது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்வினையாக ஏற்பட்ட கலவரத்தின் ஒரு பகுதியாக நூலகமும் எரியுண்டது’ என்ற கதையாடலுக்கு வலுச்சேர்க்கின்ற செயல். இது, ஆழமாக நோக்கவும் பேசப்படவும் வேண்டியதொன்று.
நூலக எரிப்பு தற்செயல் நிகழ்வல்ல. திட்டமிடலுடனும் அரசியல் பலத்துடனும் செய்யப்பட்ட செயல். 31ஆம் திகதி சூட்டுச் சம்பவத்துடன் தொடங்கிய வன்முறையைத் தொடர்ந்து, மறுநாள் ஜூன் முதலாம் திகதி, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர் காமினி திஸாநாயக்கா ஆகியோர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்கள் தங்கியிருந்த போதே, இந்தக் கொடுங்செயல் அரங்கேறியது.
ஜூன் முதலாம் திகதியே நடைபெற்றது என்பதைப் பலர் சொல்லி இருக்கிறார்கள். அப்போது, மாநகர ஆணையாளராக இருந்த சி.வி.கே சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அ. அமிர்தலிங்கம், ‘மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது’ நூலில் செங்கை ஆழியான், வரலாற்றாய்வாளர் சாந்தசீலன் கதிர்காமர் ஆகியோர் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மே 31ஆம் திகதியே யாழ், நூலகம் எரிக்கப்பட்டது என்று சொல்வோர் வைக்கின்ற வாதம், அதனோடு சேர்த்து ‘ஈழநாடு’ பத்திரிகையும் எரிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், யாழ்ப்பாண நூலகத்தோடுதான் ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகமும் எரிக்கப்பட்டது.
சிலர் வாதிடுவது போல, அது 31ஆம் திகதி இரவாக இருந்திருந்தால், ஜூன் முதலாம் திகதி பத்திரிகை அச்சாகி வெளியாகியிருக்காது. ஆனால், ஜூன் முதலாம் திகதி ‘ஈழநாடு’ வெளியாகியிருக்கிறது. அதில், யாழ்நகரில் நடந்த கொடுமைகள் பதிவாகியுள்ளன. ஜூன் ஆறாம் திகதி மீண்டும் ‘ஈழநாடு’ வெளிவந்தது. அதில், ‘கடந்த சில நாள்களாகப் பத்திரிகையைக் கொண்டுவர இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற குறிப்பும் இருக்கிறது.
நூலக எரிப்பை அடுத்துத் தொடர்ந்த நான்கு தசாப்தத்தில், வரலாறும் வாசிப்பும் வாசிப்பை நேசிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக இரையானது. நூலகத்தில் தொலைத்ததை விட, அதிகமாகக் கடந்த 40 ஆண்டுகளில் கவனக்குறைவாலும் அக்கறையின்மையாலும் நாம் தொலைத்த ஆவணங்கள் அதிகம்.
எதற்கும் மௌனத்தையும் ஏளனத்தையும் பதிலாகக் கொண்டிருக்கின்ற சமூகம், அச்சப்பட நிறையவே இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
31 minute ago
41 minute ago