2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

மௌனமாகவே நடக்கும் அடக்குமுறை

Mayu   / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

‘காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’ என்ற கேள்வியுடன், ‘எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேச விசாரணையே வேண்டும்’, ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டாம்’, ‘மரணச் சான்றிதழ் வேண்டாம்’ போன்ற வேண்டுகோள்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

வழமைபோல், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிணைந்து, குழுக்களாகவும் கவனயீர்ப்புப் போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இவற்றுக்குத் தடைகளும், தாக்குதல்களும் நீதிமன்றத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. இவை ஒன்றும் புதுமையல்ல. சாதாரணமானவைகளே.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களானது அரசாங்கத்தினாலும், அரச பாதுகாப்புத் தரப்பினராலும் கணக்கிலெடுக்கப்படாத நிலையே காணப்படுகிறது.

இது தொடர்வதானது அவ் உறவுகளின் மனோநிலையில் கவலையையும், இயலாமையையும் தோற்றுவிப்பதோடு மேலும் கடுமையாக நம்முடைய போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் காண்பிக்கவும் தூண்டுவதாகக் கொள்ளலாம்.

நீதியை வழங்குவோம் என்று அந்த அலுவலகத்தின் ஊடாக உறவுகளை நெருக்கடிக்குள்ளாக அரசாங்கம் முனைந்து வருகிறது.  இலங்கையில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உள்ளூர் பொறுப்புக்கூறல் இல்லாமையை வலியுறுத்தும் ஐ.நா. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கூறிவருகிறது.

ஏழு வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் காணாமல் போன ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாததாக இருந்து வருகிறது என்பதுடன், இழப்பீடுகளையும், மரணச் சான்றிதழ்களையும் பலவந்தமாகத் திணிக்கவும் முயல்கிறது என்பது குற்றச்சாட்டு.

ஆனால், சர்வதேச சமூகம் இந்த அலுவலகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற வகையான கோரிக்கையையும் ஐ.நா. சில மாதங்களுக்கு முன்னர் விடுத்திருந்தது.

பொறுப்புக்கூறலில் இலங்கையின் முன்னேற்றம் ஐ.நா. ஊடாக தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம், சர்வதேச சமூகம் அதன் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள், உலகளாவிய அதிகார வரம்பு மற்றும் சர்வதேச நீதியின் பிற வழிகள், அத்துடன், இலக்கு, விதிக்கப்பட்ட தடைகள், நிவாரணம் உட்பட, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தச் சர்வதேச சமூகத்திற்குக் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை அவ்வேளையில், வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், அது சார்ந்து எதுவும் நடைபெற்றதாகக் காணமுடியவில்லை.
1970களில் ஆரம்பித்து 2009 வரை உள்நாட்டுப் போர் முடிவடையும் வரையில், இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பல வலிந்து காணாமலாக்கப்பட்டமைகளால் தற்போதும் இன்னல்களை அனுபவிப்பவர்களே அதிகமாகும். 

இருந்தாலும், இந்தக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் அனைத்து மட்டங்களிலும் காணப்பட்டாலும் அவர்கள் நீதியிலிருந்து தப்பித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.

தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஆழமாக வேரூன்றி இருப்பதானது எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும் அபாயத்தையும் உருவாக்கலாம் என்ற அச்சமும் காணப்படுகிறது. 

காணாமலாக்கப்பட்ட மையை பல்வேறு தரப்புகளும், வெளிநாடுகளும் அரசியலாக்குவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டினாலும், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு செயற்பாட்டையும் அரசாங்கம் முன்னெடுக்காமையே இதுவரை பிரச்சினையாக உள்ளது. 

இதேவேளை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், கண்காணிப்பு, மிரட்டல், பொய்யான குற்றச்சாட்டுகள், வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம் பாதுகாப்புப் படையினர் அவர்களது குடும்பங்களை துன்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

உண்மையை அறிதல், நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றில் நிலையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகம் அது இலங்கையில் நடைபெறவில்லை என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

இருந்தாலும், இலங்கை அரசாங்கத்தின் நீதியை நம்பாத பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுக்க முன்வராமை யானது சர்வதேச சமூகத்திலும் சந்தேகத்தினையே ஏற்படுத்துகிறது.

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் வெளியிடப்பட்டாலும், எதிர்பார்ப்புகள் இருந்த வண்ணமே இருக்கின்றன.

ஆனால், இவ்விடயம் தொடர்பில் அரச தரப்பால் முன்வைக்கப்படுகிற கருத்துக்கள் அவர்களுடைய கோரிக்கைகளை மழுங்கடிக்கும், கொச்சைப்படுத்துவதாகவே  இருக்கின்றன. இவ்வாறான நிலையில், தான் யார் அவற்றுக்கான நீதியை வழங்குவது என்ற கேள்வி தோன்றுகிறது. இனப் பிரச்சினையின் காலான முரண்பாட்டினால் உருவான யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்து விட்டது.

இன்னமும் தங்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் சந்திப்புகளையும், அறிக்கை சமர்ப்பிப்புகளையும் முன்னெடுத்துவரும் தமிழ் மக்கள் தமக்கான நீதி ஒவ்வொரு வருடத்தின் மார்ச் மாதத்திலும், செப்டெம்பர் மாதத்திலும் கிடைத்து விடும் என்று நம்பிக்கை கொள்வதும், காலத்துக்குக் காலம் வெளிவரும் சர்வதேச, மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளைக் கண்டு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுமே நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் 3 தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்களாகிய பின்னும் ஏன் இனப் பிரச்சினை ஒன்று ஆரம்பமானது என்பது தொடர்பான கேள்விக்கே பேரினவாதத் தரப்பினரிடம் சரியான பதில் இல்லை என்ற நிலை காணப்படுகிறது.

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரி வடக்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் 3,000 நாட்களை எட்டவிருக்கிறது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் பலர் இறந்தும் விட்டனர்.

அடுத்த சந்ததிக்கு இப்போராட்டத்தினை கையளிப்பதற்கான முன்னெடுப்புகளில் அவர்கள் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர்.அப்படியானால், இப்போது இந்தப் போராட்டம் தொடர்வது எதற்காக என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைக் காண நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டியது கட்டாயம்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக 2015இல் முதல் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் தொடர்பில் எந்தவிதமான தீர்மானகரமான விடயத்தையும் நிகழ்த்தவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகமொன்றினை நிறுவுதல், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக்குழு நிறுவுதல், நீதிக்கான பொறிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுதல் ஆகிய நான்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய 
25 தீர்மானங்கள் 2015இல் தீர்மானத்தில் உள்ளடங்கி இருந்தன.

ஆனால், இவை ஓரளவுக்கேனும் நடைபெற்றிருக்கிறது என்ற கேள்வியே இப்போதும் பொதுவெளியில் எழுப்பப்படுகிறது.

தமிழருக்கெதிரான தொல்பொருள் செயலணி, தொடர்ச்சியான இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்திட்ட செயற்பாடுகள், பௌத்த மயமாக்கல் முயற்சிகள் என தொடரும் நெருக்கடிகளுக்கு நல்லிணக்க நல்லெண்ண வெளிப்பாடுகள் எனப் பெயர் கூற முடியுமா?

வெகுஜன ரீதியான போராட்டம், போரில் இறந்தவர்களை நினைவு கூருதல், மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்துதலுக்குக் கூட அனுமதியில்லாத, அவர்களுக்கெதிராக தடையுத்தரவுகளும், வழக்குத் தாக்கல்களும்தான் நடைபெற்றிருந்தது. அப்படியானால் நீதி வழங்குவதனை விடவும், தீர்வுகளுக்காக முயற்சிப்பதை விடவும் உரிமைப் போராட்டங்களையும், அதில் ஈடுபடுபவர்களையும் அடக்கி, ஒடுக்கிவிடுவது ஒன்றுதான் முடிவா.

1956களிலே ஆரம்பித்து விட்ட திட்டமிட்ட இன அழிப்பையும் சிங்கள மயமாக்கத்தினையும்  செய்து கொண்டிருக்கும் பெரும் தரப்புடன், ஒரு இனம் அகிம்சை ரீதியாக 25 வருடங்களைத் தாண்டிப் போராடி, ஆயுத ரீதியாக  35 வருடங்களுக்கும் மேலாக யுத்தம்  செய்து இன்னமும் உறைக்காத விடயமாகிப்போன தமிழர்களுடைய  இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கிறது. காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்குமா, அல்லது அது கையாலாகா முயற்சிதான்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத மனித உரிமை தினம், காணாமலாக்கப்பட்டோருக்கான தினம் என்றெல்லாம் உரிமைகள் ஞாபகப்படுத்தபட்டாலும்  எதுவும் நடைபெறாத ஒரு நாடாக இலங்கை இருப்பதற்கு யாரைப் பொறுப்புச் சொல்வது, இதற்குப் பெயர்தான் என்ன? 

02.09.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .