2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையான தமிழரசுக் கட்சி

Johnsan Bastiampillai   / 2022 நவம்பர் 03 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புருஜோத்தமன் தங்கமயில்

இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். 

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தமிழரசுக் கட்சி, தன்னைத் தானே அசிங்கப்படுத்தி, மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்கு, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் எந்தவொரு கட்சியும் நடந்து கொண்டதில்லை.

கட்சியின் தலைவரான மாவை தொடங்கி, கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள், போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் என்று தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற பல்வேறு தரப்பினரும், தங்களுக்குள் பலமாக மோதிக் கொண்டார்கள். அது, நேரடி மோதலாக மாத்திரமல்லாமல், காட்டிக் கொடுப்பதாகவும் முதுகில் குத்துவதாகவும் கூட இருந்தது. 

அதுதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெருந்தோல்விக்கு காரணமானது. அதனால்தான், இன்றைக்கு கூட்டமைப்புக்குள் ஒற்றைத் தலைமையாக ஆளுமை செலுத்திவந்த தமிழரசுக் கட்சியை, பங்காளிகளான டெலோவும் புளொட்டும் தாண்டிச் செல்லக் காரணமாகி இருக்கின்றது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்துக் கொண்டு, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி, அதன் செல்நெறி குறித்து தெளிவான வரையறைகளை கொண்டிருந்தது. 

பௌத்த சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தொடர்ச்சியாக அஹிம்சை வழிப்போராட்டத்தை கனதியாக முன்னெடுத்தது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால், தமிழரசுக் கட்சிக்கான கறுப்புப் பக்கங்கள் என்று பெரிதாக ஏதும் இல்லை. அதுதான், காணாமற்போன தமிழரசுக் கட்சியை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டெடுத்து, கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என்கிற நிலையில் நிறுத்தியமைக்கும் காரணமாகும். 

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் கரைந்துபோன ஒரு கட்டத்தில், வடக்கு - கிழக்கில் இருந்து இல்லாமற்போய்விட்டது. கூட்டணிக்குள் இருந்த தலைவர்களில் அநேகர், தமிழரசுக் கட்சிக்காரர்கள் என்ற போதிலும், அவர்கள் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தோடு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல்களில் போட்டியிட்டுவிட்டு, ‘மாதிவல’ வீட்டுத் தொகுதிக்குள் பெரும்பாலும் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். 

ஆனால், அவர்களை எல்லாம் அழைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவாக்கி, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்ந்தது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அதனால்தான், தமிழரசுக் கட்சியின் மீள்எழுச்சி சாத்தியப்பட்டது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரும் தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தும் சந்தர்ப்பத்தையும், தமிழரசுக் கட்சிக்கு அது ஏற்படுத்திக் கொடுத்தது.

தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலையைக் காணும் போது, தமிழ் மக்கள் இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும். 

தமிழரசுக் கட்சியின் தலைவராக இரா.சம்பந்தன் இருந்த காலம் வரையிலும்கூட, கட்சி குறிப்பிட்டளவு கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால், கட்சியின் தலைமைத்துவம் மாவையிடம் வந்த நாள் முதல், கட்சிக்குள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, உள்வீட்டுக் குழப்பங்கள் எழுந்தன. அதுவும், மத்திய குழுவில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட குழப்பங்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லலாம்.

தமிழ்த் தேசிய அரசியலில், ஆத்மார்த்தமாக இயங்க நினைக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, தமிழரசுக் கட்சியை உத்வேகத்தோடு நகர்த்திச் சென்று, மக்களுக்கான அரசியலை செய்ய வேண்டும் என்கிற பேரவா உண்டு. ஆனால், அதற்கான வாய்ப்புகளை மாவை சேனாதிராஜா, சி.வி.கே சிவஞானம் தொடங்கி வயது மூப்பாலும் அதன் அவஸ்தைகளாலும் அல்லாடும் தலைவர்கள் தடுக்கிறார்கள். 

அண்மையில்கூட, தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளைக் கூட்டம் நடைபெற்றது. அதில், புதிய நிர்வாகிகளாக சிவஞானம் உள்ளிட்ட எழுபது வயதைத் தாண்டியவர்களே, பிரதான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள், தங்களது தொகுதிக் கிளைக்குள் கூட சென்று, மக்கள் அரசியல் செய்வதற்கான உடல் ஆரோக்கியத்தோடு இல்லாதவர்கள். 

அதிகபட்சம், மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் கூடி, கதை பேசி, கலைந்து செல்வார்கள்; அவ்வளவுதான்! இதனால், இந்த வயோதிபர்களின் ஓய்வுகாலம் வேண்டுமானால் கழிந்து போகலாம். மாறாக, தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது.

மக்களுக்கான அரசியலை தேர்ந்தெடுக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும், அது இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டும் அவர்களை முன்னிறுத்தியுமே செயற்பட விரும்பும். 

தந்தை செல்வாவின் காலத்திலும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதுதான் நிகழ்ந்தது. அதனால்தான், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் அரசியலுக்குள் வரவும் கோலோச்சவும் முடிந்தது. 

ஆனால், இளைஞர்கள் அரசியலுக்கு அவசியமானவர்கள்; அவர்களே மக்களிடம் நேரடியாக ஊடாடல்களை செலுத்தக் கூடியவர்கள் என்று உணர்ந்து, அதன் வழியாக வந்த மாவை சேனாதிராஜாவும் கூட, தமிழரசுக் கட்சியை முதியவர்களின் கூடாரமாக மாற்றுவதில் முனைப்பாக செயற்படுகின்றார். அவரின் பதவி என்கிற பேராசை, கட்சியை முழுவதுமாக முடக்கும் நிலைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது.

கொழும்பில் நடைபெறும் முக்கிய சந்திப்புகளுக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி முக்கியம். அதன் மூலமாகவே எரிபொருள் மானியம் கிடைக்கும். அதற்காக தேசிய பட்டியல் ஆசனம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று பதவிக்காக மன்றாடியவர் மாவை. 

கட்சியின் தலைவராக அவர் பதவிக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கட்சியின் தேசிய மாநாடுகள் ஒழுங்காக நடத்தப்படவில்லை. அவர் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், ஒருமுறை மாத்திரமே மாநாடு நடத்தப்பட்டிருக்கின்றது. 

கடந்த பொதுத் தேர்தலில், கட்சி மாபெரும் தோல்வி கண்டிருக்கின்ற நிலையில், தலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதனால், தன்னுடைய பதவிக்கு பாதிப்பு வந்துவிடும் என்ற நோக்கத்தால், தேசிய மாநாட்டைக் கூட்டுவதை மாவை தவிர்த்து வருகிறார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஜனநாயக தன்மை பேணாத அமைப்புகள்கூட, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேசிய மாநாட்டை நடத்துகின்றன. அப்படியிருக்க, ஜனநாயகத்தின் வழியில் வந்த தமிழரசுக் கட்சி, இவ்வளவு மோசமான உட்கட்சி ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றமை அபத்தமானது.

தமிழரசுக் கட்சியின் முக்கிய பதவிகளில் வயோதிபர்கள் அமர்ந்து கொண்டு, கட்சியின் செயற்றிறனை மழுங்கடித்துவிட்டதால், கட்சியின் ஓர்மம் இழக்கப்பட்டுவிட்டது. மக்கள் அரசியலுக்காக வரத் துடிக்கும் இளைஞர்கள்கூட, தமிழரசுக் கட்சிப் பக்கம் தலை வைக்கப் பயப்படுகிறார்கள். 

ஏனெனில், மக்கள் அரசியலுக்காக ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டிய தாங்கள், தமிழரசில் இணைந்துவிட்ட பின்னர், பதவிகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் வயோதிபர்களுக்கு எதிராக போராடி  நேரத்தை செலவளிக்க வேண்டி வருமோ என்று நினைக்கிறார்கள். 

ஏற்கெனவே நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது இளைஞர்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றியிருக்கின்றது. தங்களது எதிர்காலம், குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடங்கி அனைத்தையும் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில் எட்டு மணித்தியாலம் உழைத்தால் இப்போது 16 மணித்தியாலம் உழைக்க வேண்டிய அவசியநிலை ஏற்பட்டுள்ளது; அவ்வளவு நெருக்கடி நிலைமை. 

அப்படியிருக்க, ஒருநாளில் மீதமுள்ள எட்டு மணி நேரத்தில் உண்டு, உறங்கி, குடும்பத்துடன் நிம்மதியாகக் கழிக்கவே அனைவரும் விரும்புவர். இல்லாமல், தமிழரசுக் கட்சிக்குள் சேர்ந்து மூத்தவர்களோடு மோதுவதற்காக செலவிடத் தயாராக மாட்டார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில் இன்னமும் தமிழரசுக் கட்சியே தலைமைக் கட்சியாக இருக்கின்றது. ஆனால், இளைஞர்களை உள்வாங்கி கட்சியை சீராக்கி செயற்றிறன் உள்ளதாக மாற்றாவிட்டால்,  தமிழரசுக் கட்சியின் தோல்வி கடந்த காலத்தைக் காட்டிலும் இன்னும் மோசமாக இருக்கும். 

அதனை, தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் தொடங்கி தமிழ்த் தேசியத்துக்காக அர்ப்பணித்தவர்களின் ஆன்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது. ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத காலத்தில், தமிழரசுக் கட்சியின் இருப்பு தவிர்க்க முடியாதது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .