Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூலை 16 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழமையாகத் தேர்தல் காலங்களில், சகல அரசியல் கட்சிகளும் தம்மைத்தாமே பாராட்டிக் கொள்வதோடு, தாமே அத் தேர்தல்களில் வெற்றி பெறுவதாகவும் கூறுவார்கள். சிறு கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும், தாம் போட்டியிடும் தொகுதிகளில், பிரதேசங்களில் தாம்தான் வெற்றி பெறுவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.
அதேவேளை, தேசிய கட்சிகளும் தேசிய கட்சி என நினைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளும் நாட்டின் பல பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, அடுத்த அரசாங்கத்தைத் தாமே நிறுவுவோம் எனக் கூறும்.
ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும், புதிய அரசாங்கத்தைத் தாமே நிறுவப் போதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் கூறி வருகின்றன. எனினும், உண்மையிலேயே தற்போதைய நிலையில், ஒரு கட்சிக்கு மட்டுமே, இம் முறை சந்தேகமின்றி அவ்வாறு கூற முடியும்.
இது ஒரு வகையில், அரசியல் கட்சிகள் வாக்காளர்கள் மீது, ஒருவித மானசிகத் தாக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகும். ஏனெனில், ஒரு கட்சி வெற்றி பெறும் சாத்தியம் அல்லது, அவ்வாறானதொரு போலியான தோற்றமாவது இருந்தால், அதனாலேயே பலர் அக்கட்சிக்கு வாக்களிக்க முன்வருவார்கள். இதற்குத் தான் ‘அரசியல் அலை’ என்பார்கள்.
ஒரு கட்சியின் கொள்கைகள், நடவடிக்கைகள் எவ்வளவு தான் பாராட்டக்கூடியவையாக இருந்த போதிலும், அக்கட்சி வெற்றி பெறும் என்றதொரு தோற்றம் இல்லாவிட்டால், அக்கட்சியை மக்கள் ஆதரிக்கப் போவதில்லை.
வெற்றி பெறும் தோற்றம் இல்லாமையாலேயே, மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் வாக்களிப்பதில்லை. ஆயினும், “மக்கள் புத்திசாலிகள்” என்றே, அரசியல்வாதிகள் பொதுக்கூட்டங்களில் கூறுவார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர், தாம் வெற்றி பெறுவதாக மட்டும் இம்முறை கூறுவதில்லை. மாறாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெறுவோம் என்றே, இம்முறை கூறி வருகிறார்கள். இது அவர்களது ஆரூடம் மட்டும் அல்ல; அவசியமும் தான்.
ஏனெனில், தற்போதைய அரசமைப்பை, குறிப்பாக 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மாற்றுவதே, அவர்களது குறிக்கோள்களில் முதன்மையானதாக இருக்கிறது.
பொதுஜன பெரமுன, இம்முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று, அக்கட்சியினர் பிரசாரம் செய்து வந்த போதிலும், அவர்களிலும் பலர், அது நடைமுறைச் சாத்தியமில்லை என்றே நினைக்கின்றனர். வேறு சிலர், அதைப் பற்றிய பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.
அந்த நம்பிக்கை உள்ளவர்களும் இரண்டு காரணங்களுக்காக அவ்வாறு நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒரு சாரார், 2018ஆம் ஆண்டு முதல், கட்சி பெற்று வரும் தேர்தல் வெற்றிகளைக் கருத்தில் கொண்டு, இம்முறை தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என நினைக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவை அமைத்து, 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர். பின்னர், கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெற்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அக்கட்சி 49 இலட்சம் வாக்குகளை நாடளாவிய ரீதியில் பெற்றது. அந்த எண்ணிக்கை, ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சமாக அதிகரித்தது. எனவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம், தமக்குக் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டில், அவர்கள் உள்ளனர்.
மற்றொரு சாரார், எந்த அடிப்படையில் தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெறும் என்று பார்த்தால், 13ஆம் நூற்றாண்டில், துருக்கியில் வாழ்ந்த கேலிக் கதை புனைபவரான முல்லா நஸ் ரூத்தீன் நினைவுக்கு வருகிறார். நஸ் ரூத்தீனின் ஒரு கதையில், தனது மெலிந்த பசுவை விற்கவென, அதைச் சந்தைக்கு அழைத்துச் செல்கிறார். பசு பெருமளவில் பால் தரும் பசு என, அங்கு வருபவர்களிடம் கூறி, அவர் பசுவை விற்க முயல்கிறார். மெலிந்த பசுவைப் பார்த்த எவரும், அதை நம்பவில்லை. எனவே, பசுவை விலை கொடுத்து எவரும் வாங்கவில்லை. மாலையாகும் போது, தாம் கூறிக் கொண்டு இருக்கும் பொய்யை நஸ் ரூத்தீன்னே நம்பலானார். இவ்வளவு பாலைத் தருவதாக இருந்தால், நான் ஏன் இந்தப் பசுவை விற்க வேண்டும் என நினைத்த அவர், பசுவை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
அதேபோல், தமது தலைவர்கள், தமது கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கும் என, முடிவின்றித் தொடர்ந்து கூறி வருவது பொதுஜன பெரமுனவினரின் பலரது மனதில், பெரும் நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது.
ஆனால், எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதானது, அவ்வளவு இலகுவான காரியமல்ல. குறிப்பாக, தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ், அது மிகவும் கஷ்டமான காரியமாகும்.
பொதுஜன பெரமுனவின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டு, ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளாக, இம் முறை தேர்தலில் போட்டியிடுவதால் ஐ.தே.க வாக்காளர்கள் விரக்தியடைந்து, பெருமளவில் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தாலும் விகிதாசார முறையின் கீழ், மூன்றில் இரண்டு, அதாவது 225 ஆசனங்கள் உள்ள நாடாளுமன்றத்தில் 150க்கு மேல் ஆசனங்களைப் பெறுவதானது மிகவும் கடினமானதாகும்.
போர் முடிவடைந்தவுடன் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, நாட்டின் மொத்த வாக்குகளில் 60.33 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், அக்கட்சி மாவட்ட ரீதியாக, 127 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலம் 17 ஆசனங்களையும் பெற்று, மொத்தம் 144 ஆசனங்களையே பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 52.25 சதவீத வாக்குகளையே பெற்றார். அந்த வாக்கு சதவீதம் 60ஐத் தாண்டினால், சிலவேளை பொதுஜன பெரமுன இம்முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெறலாம்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கே, தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவைப்படுகிறது என பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர். ஏதோ தாம் ஆரம்பத்திலிருந்தே, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை எதிர்த்ததைப் போல் தான், அவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். ஆயினும் அத்திருத்தத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஆகக் கூடுதலான வாக்குகளை அளித்தவர்களும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி, இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு ஆதரவாக 215 வாக்குகள் வழங்கப்பட்டன. 50க்கும் குறைவான ஐ.தே.க எம்பிக்களே, அக்காலத்தில் இருந்தனர். மஹிந்த ஆதரவாளர்களே அதனை, நிறைவேற்ற மிகக் கூடுதலான பங்களிப்பை வழங்கினர். வரலாற்றில் மிகக் கூடுதலான வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புத் திருத்தமும் இதுவேயாகும்.
மஹிந்தவின் ஆதரவாளரான சரத் வீரசேகர மட்டுமே, அதற்கு எதிராக வாக்களித்தார். மேலும், அவரது ஏழு ஆதரவாளர்கள் வாக்கெடுப்பு நடைபெறும் போது, சபைக்கு வரவில்லை. பசில் ராஜபக்ஷ, பிரேமலால் ஜயசேகர, ஜனக்க பண்டார, ஜகத் பாலசூரிய, கெஹெலிய ரம்புக்வெல்ல, எல்லாவல மேதாநந்த தேரர், சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரே அந்த எழு பேர் ஆவர். ஜே.வி.பி சார்பில் தெரிவாகிப் பின்னர், முன்னிலை சோஷலிசக் கட்சிக்குத் தாவியிருந்த அஜித் குமார, வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை. அவ்வாறாயின், 19 ஆவது திருத்தத்துக்குத் தாம் பொறுப்பல்ல என, ராஜபக்ஷவுக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ கூற முடியாது.
19 ஆவது திருத்தத்தின் ‘நல்ல அம்சங்களை பாதுகாக்க வேண்டும்’
பொதுஜன பெரமுனவின் சில தலைவர்கள் கூறுவதைப் பார்த்தால் அவர்கள், அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை, முழுமையாகவே இரத்துச் செய்யப் போகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் அத்திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்ய முடியாது.
ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள், கடமைகள் போன்ற முன்னைய அரசமைப்பில் இருந்த சில சட்டப் பிரமாணங்கள், அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் கீழ் தான், மீண்டும் கொண்டு வரப்பட்டன. தற்போது, அந்த அரசமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக இரத்துச் செய்தால், நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்க மாட்டார். எனவே, பொதுஜன பெரமுனவினர் அந்த அரசமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக ஒழிக்கப் போவதில்லை.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை, மாற்ற வேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறது. உண்மையிலேயே, அது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக, முன்வைக்கப்பட்ட ஒரு திருத்தமாகும். அது, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான பயணத்தை, இடைநடுவே நிறுத்திக் கொண்டதற்குச் சமமாகும்.
அதனால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைந்து, பிரதமரின் அதிகாரங்கள் அதிகரித்து, நாட்டில் ஏறத்தாழ சரி சமமான இரண்டு அதிகார மய்யங்கள் உருவாகின. அதன்படி, பிரதமரால் ஜனாதிபதியையோ ஜனாதிபதியால் பிரதமரையோ கட்டுப்படுத்த முடியாததொரு நிலைமை உருவாகியது. இது, குழப்பமான நிலைமைகளைத் தோற்றுவிக்கிறது. கடந்த அரசாங்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பிணக்குக்கு முக்கியக் காரணம் அதுவே.
எனவே, அதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதில், எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் பொதுஜன பெரமுனவின் நோக்கம், முறையான ஆட்சியா என்பதில் சந்தேகமே. அவர்களது கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது, எம்.பிக்களை விலைக்கு வாங்கியாவது அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அடைந்தால், அவர்கள் இம்முறையும் 2010ஆம் ஆண்டில் அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் மூலம் செய்ததைப் போல், சுயாதீன் ஆணைக்குழுக்களை ஒழிக்கக்கூடும். சிலவேளை, தகவல் அறியும் உரிமைக்கான பிரமாணங்களையும் ஒழிக்கக்கூடும். ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கக்கூடும்.
இம்முறை தேர்தலில், பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால், மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராக இருப்பார். அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மூலம், ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்க, பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்தால், மஹிந்த வகிக்கும் பிரதமர் பதவியின் அதிகாரங்களில் எந்தளவு குறைப்பார்கள்?
2010ஆம் ஆண்டைப் போல், ஒரு நபர் இருமுறை தான் ஜனாதிபதிப் பதவியில் இருக்க முடியும் என்ற வரம்பை நீக்கினால், மஹிந்தவுக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். அவ்வாறாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மஹிந்தவா, கோட்டாவா?
சரி சமமான, இரண்டு அதிகார மய்யங்களைத் தோற்றுவித்து, நாட்டில் குழப்பகரமானதொரு நிலைமையை உருவாக்கினாலும், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம், சிறந்த ஜனநாயக அம்சங்களும் நாட்டுக்குக் கிடைத்தன. தகவல் அறியும் உரிமை அதில் முக்கியமானதாகும். ஜனாதிபதி சர்வாதிகாரியாகச் செயற்படாதிருக்க, அவரைக் கட்டுப்படுத்தும் சுயாதீன ஆணைக்குழுக்கள் இன்னுமொரு நன்மையாகும்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகள், எவ்வளவு மோசமானவையாக இருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத நிலைமை முன்னர் இருந்தது. அந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்ட மா அதிபருக்கு எதிரான வழக்கொன்றின் மூலம், ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, சட்டத்தின் மூலம் பரிகாரம் காணும் பொறிமுறையொன்றை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் தந்தது. 2018ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்த போது அந்தப் பிரமாணங்களின் படியே, உயர் நீதிமன்றம் அது, சட்ட விரோதமானது எனத் தீர்மானித்தது. இந்த நல்ல அம்சங்கள் ஒழிக்கப்படுமாயின், மீண்டும் சர்வாதிகார நிலைமை, நாட்டில் உருவாகும் அபாயம் இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
52 minute ago
1 hours ago