2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

முஸ்லிம் கட்சிகள் வீழ்ச்சியை மீள்வாசிப்பு செய்யுமா?

Mayu   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒரு தரப்பிற்கு அபரிமிதமான வெற்றியைக் கொடுத்திருப்பது மட்டுமன்றி, இன்னும் பல செய்திகளையும் சொல்லி நிற்கின்றது. எதிர்க்கட்சிகளின் பலவீனம், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மீதான மக்களின் வெறுப்பு என விடயங்களை உணர்த்தி நிற்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும்.

குறிப்பாக இந்தத் தேர்தலில் தமிழ் கட்சிகளைப் போலவே முஸ்லிம் கட்சிகளும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

இதற்கு வெறுமனே அனுர அலை அல்லது என்.பி.பி. அலையே காரணம் எனக் கூறி விட முடியாது. அந்த அலையில் முஸ்லிம் மக்கள் அள்ளுண்டு போவதற்குப் பின்னால் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் காரணமாக இருந்திருக்கின்றன.

கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளின் அரசியலில் மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக மாற்றுத் தெரிவு ஒன்றுக்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது அவர்களுக்கு என்.பி.பி. கண்முன்னே தெரிந்துள்ளது. அவ்வளவுதான். வடக்கு, கிழக்கில் நிலைமை இப்படியென்றால் அதற்கு வெளியிலும் வழக்கம்போல பெருந்தேசியக் கட்சிகளில் போட்டியிட்ட பல முஸ்லிம் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படுவதற்கு அவர்களது கடந்தகால அரசியலும் ஒரு காரணம்  என கூறலாம்.

மாறாக, வடக்கு, கிழக்கிலோ ஏனைய பாகங்களிலோ வெற்றியிட்டிய புதுமுகங்கள் குறிப்பாக என்.பி.பி. எம்.பி.க்களுக்கு மக்கள் வாக்களித்தது வெற்றிபெறச் செய்தது ‘அவர்கள் செய்து காட்டுவார்கள்’ என்ற கடந்தகால ஆதாரங்களை, வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அனுரகுமார திசாநாயக்க என்ற நம்பிக்கை தரும் ஜனாதிபதியின் கட்சியில் போட்டியிடுவதாலும், ஏற்கெனவே

முஸ்லிம் கட்சிகளிலும் ஐ.தே.க., பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சக்தியில் எம்.பியாக இருந்த முஸ்லிம்களுக்கு வழங்கிய வாய்ப்பை இவர்களுக்கும் ஒரு தடவை வழங்கிப் பார்த்தால் என்ன என்ற எண்ணத்தினாலுமே, வழக்கமான ஆட்களையும் கட்சிகளையும் புறக்கணித்து புதுமுகங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.

எனவே, இங்கு முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் சமூகமும் ஒரு விடயத்தை தெளிவாக கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

அதாவது, என்.பி.பி. அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் சரியாக நடந்து கொள்ளுமா என்ற கேள்வி, ஏற்கெனவே அமைச்சரவை நியமனத்தின் போதே எழத் தொடங்கிவிட்டது. என்.பி.பி. உள்ளிட்ட பெருந்தேசியக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளுக்காக குரல் கொடுப்பார்களா என்பதும் நிச்சயமில்லை.

கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகளின் சார்பாக பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிட்டு எம்.பியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமன்றி, பெருந்தேசியக் கட்சி ஒன்றுக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களே அந்தக் கட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற வேலையையும், அரசியல் முகவர் வேலைகளையுமே செய்தனர்.

இப்படியிருக்கையில், தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பெரும்பான்மைக் கட்சிகளின் ஊடாக புதிதாக பாராளுமன்றத்திற்கு வந்துள்ள எம்.பிக்கள், தங்களது கட்சியின் கட்டுக்கோப்பு, கொள்கை, கோட்பாடுகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தமது சமூகத்திற்காக குரல்கொடுப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது நியாயமான யோசனைதான்.

இந்த இடத்தில்தான் முஸ்லிம்களுக்கான பிரத்தியேக அரசியல் அணிகளின் தேவைப்பாடு எழுகின்றது. கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ அல்லது ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களோ அன்றேல், அதன் எம்.பிக்களோ முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக சுயநலன் மறந்து குரல் கொடுத்தார்கள் என்று திருப்திப்படவே முடியாது. சமூகம் அடைந்த நன்மைகளை விட அவர்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களும் இலாபங்களும்தான் ஒப்பீட்டளவில்  அதிகம் என்பது சமூகத்திற்கு நன்றாகவே தெரியும். அதுதான் இந்த வெறுப்புக்கு முதன்மைக் காரணம்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தங்களது அபிலாஷைகள், நிலைப்பாடுகளை கொஞ்சமேனும் முன்வைப்பதற்கான ஒரு வழிமுறையாக முஸ்லிம் கட்சிகள் இருந்திருக்கின்றன.

ஒரு பாதுகாப்பு அரணாக, அவசரத்திற்கு உதவும் ஒரு உயிர்காப்பு படகுபோல இதனைக் குறிப்பிடலாம்.

முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன் பின்னான காலங்களில் பிரதான பெருந்தேசியக் கட்சிகளுடனேயே பயணித்தனர். வடக்கு, கிழக்கில் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ்க் கட்சிகளுடனும் அரசியல் செய்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் அதுவெல்லாம் சரிப்பட்டு வராது என்ற எண்ணத்திலேயே தனிக் கட்சியை ஆரம்பிக்கும் நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டது.

அந்த வகையில், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை மக்கள்மயப்படுத்திய மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் முயற்சிகள் இவ்விடத்தில் நினைவு கொள்ளப்பட வேண்டியவை. அந்த கொள்கைகளை ஊக்குவித்ததற்காகப் புலிகளாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும் கொல்லப்பட்ட மாகாண சபை உறுப்பினர் அலிஉதுமான் போன்றோரின் தியாகங்கள் இதற்குப் பின்னால் உள்ளன. அதேபோல், முஸ்லிம் தேசியம், முஸ்லிம் சுயநிர்ணயம், முஸ்லிம்களுக்கான அலகு, இனப் பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு எனப் பல விடயங்களுக்காகக் குரல் கொடுத்து வந்த நிலையில் கடந்தவாரம் மரணித்த, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் மு.காவின் ஸ்தாபக தவிசாளருமான 
எம்.எச்.சேகு இஸ்ஸதீனின் கருத்தியல்களை இப்போது உன்னிப்பாக  நோக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஏனென்றால், முஸ்லிம் கட்சிகளைப் புறக்கணித்து அல்லது அந்த வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகளைக் குறைத்து, என்.பி.பி. போன்ற பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்குச் சரியான பிரதிபலன்கி டைக்கவில்லை என்றால், மீண்டும் முஸ்லிம் அரசியலை நோக்கியே ஓடி வர வேண்டும். ‘அஷ்ரப், சேகு இஸ்ஸதீன் காலத்தில்’ இருந்து மீள ஆரம்பிக்க நேரிடலாம் என்பதை மறந்து விடக் கூடாது.

அரசியல் என்பது எல்லாக்  காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 

3 ஆசனங்களை வைத்திருந்த கட்சி நாட்டைக் கைப்பற்றுவதும், 69 இலட்சம் பெற்றவர்கள் வீட்டேபடு முடங்குவதும் நமது கண்முன்னே நிகழ்ந்திருக்கின்றது.
இந்த தேர்தலில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு குறைந்தவளவான வாக்குகளை அளித்துள்ளனர்.

ஆனால், முஸ்லிம் அணிகளையோ அவற்றின் வேட்பாளர்களையோ முற்றாக புறக்கணிக்கவில்லை என்ற விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும். இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்ற மூன்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தமது கட்சியில் போட்டியிடவில்லை. ஹக்கீமும் றிசாட்டும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் அதாவுல்லா புதிய ஜனநாயக முன்னணியிலும் போட்டியிட்டனர். இரு தலைவர்கள் வெற்றிபெற அதாவுல்லா தோல்வியடைந்தார்.

இரு பிரதான முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸின் வாக்கு வங்கிகள் சரிந்துள்ளன.

அம்பாறை மாவட்ட பெறுபேறுகளை இதற்காகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக, நேரடியாக இவ்விரு கட்சிகளும் தலா ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளன.

ஐ.ம.சக்தியின் தேசியப் பட்டியல் வழங்கப்படாத விடத்து, மு.காவின் மொத்த ஆசனங்கள் 4 ஆகவும் ம.காவின் ஆசனங்கள் 2 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன தேசிய காங்கிரஸிற்கோ ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகளுக்கோ ஆசனங்கள் இல்லை. இது முஸ்லிம் கட்சிகளுக்கு வீழ்ச்சி என்பது ஒருபுறமிருக்க நீண்டகாலத்தில் இது முஸ்லிம் அரசியலுக்கும் பெரும் பின்னடைவைக் கொண்டு வரும் என்பதை அக்கட்சிக் காரர்களும் முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் கட்சிகள் வீழ்ச்சியடைந்தமைக்கு முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கடந்தகாலத்தில் எடுத்த நிலைப்பாடுகள், முஸ்லிம்  எம்.பிக்களின் சமூகத்திற்கு உதவாத 
அரசியல், மக்களை மதியாத தன்மை, அதிகாரத் தோரணை, எம்.பிக்களை சுற்றியிருந்த ஆட்களின் உதவாக்கரையான பண்புகள் என பல காரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

எனவே, இவற்றையெல்லாம்  காங்கிரஸ்கள் மீள் வாசிப்புச் செய்ய வேண்டியது காலத்தின் மிக முக்கிய தேவையாகும். அப்படி தம்மை முஸ்லிம் கட்சிகள், தலைவர்கள் சரிப்படுத்திக் கொண்டால் இன்னும் சில காலத்திலாவது முஸ்லிம்களுக்கான பிரத்தியேக அரசியல் மீண்டெழுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.

80களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கையறு நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் அதற்கு முஸ்லிம்கள் ஒரு சமூகமாகத் தயாராக இருக்க வேண்டும். ஆகவேதான், பிரத்தியேகமான அடையாள அரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

என்.பி.பி., எஸ்.ஜே.பி. போன்ற கட்சிகளுடன் இலங்கையர் என்ற அடையாளத்துடன் இணைந்து பயணிப்பது வேறு விடயம். முஸ்லிம் அரசியலை தக்கவைப்பது என்பது வேறுவிடயம். இனநல்லிணக்கத்தையும், தனித்துவத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

12.03.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X