Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 நவம்பர் 13 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு கட்சியும் தமது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ததாக தெரியவில்லை.
ஏனென்றால், பெரும்பான்மைக் கட்சிகளுக்குள் மட்டுமன்றி, முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சிகளுக்குள்ளும் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கின்றது.
பதவி ஆசை என்பது யாரையும் விட்டு வைக்கவில்லை. அதுவும் பிரதிநிதித்துவ அரசியல் என்பது இலங்கையில் மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு கருவியாகப் பார்க்கப்படுவதை விட, அதிகாரத்திற்கான போதையாகவும் இலகுவான தொழிலாகவுமே மாறியிருக்கின்றது.
வழக்கமான சவாலை விட இந்த முறை தேர்தல் களம் ஒரு மாறுபட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் மக்கள் ‘சில மாற்றங்களுக்காக’ கடினமான முடிவுகளையும் எடுப்பார்கள் என்ற விடயம்
குறிப்புணர்த்தப்பட்டிருக்கின்றது.
இது குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. யார் யாரைத் தேர்தலில் களமிறக்குவது? யாரால் வெற்றி பெற முடியும்? தாம் எடுக்கும் முடிவின் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்றெல்லாம் முஸ்லிம் கட்சிகள், அணிகள் தலையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடந்த உடனேயே பொதுத் தேர்தல் நடக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதுண்டு. இருப்பினும், இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கமாட்டாது.
இயங்கு நிலை அல்லது பிரதிநிதித்துவ அரசியலுக்குப் புதுமுகங்களான வேட்பாளர்களைத் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில்
அக் கட்சி உள்ளது.
தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் அரசியல் அணிகளோடு சேர்ந்து போட்டியிடாத பட்சத்தில், இதே சிக்கலை எதிர்கொள்ளலாம். மறுபுறத்தில் பொதுஜனப் பெரமுண,
ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பெரும்பான்மைக் கட்சிகளின் நிலைமை இதை விட மோசமாகும்.
முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தமட்டில், ஏற்கெனவே எம்.பிக்களாக பதவி வகித்தவர்களில் பலர் மீண்டும் அப்பதவிக்காக போட்டியிட ஒற்றைக்காலில் நிற்கின்றனர். கால் நூற்றாண்டாக மக்களுக்குக் காத்திரமான எந்தச் சேவையையும் செய்யாமல் காலத்தைக் கடத்தி விட்டு மீண்டும் ஒரு வாய்ப்புக் கேட்டுப் பார்க்கலாம் என மனக் கணக்குப் போடுகின்றனர்.
நீண்டகாலமாக எம்.பியாக பதவி வகித்த முஸ்லிம்கள் மட்டுமன்றி, அண்மைக் காலத்தில் முஸ்லிம் கட்சிகளின் ஊடாக எம்.பியானவர்களுக்கு கூட அவர்களின் தோல்வி கண்முன்னே தெரிகின்றது. நிச்சயிக்கப்பட்ட வெற்றி வேட்பாளர்களை விட நிச்சயிக்கப்பட்ட தோல்வியின் நாயகர்கள்தான் பெரும்பாலும் களத்தில் உள்ளனர் எனலாம்.
இம்முறை முஸ்லிம் பிரதேசங்களில் பிரதான முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி இயங்கு நிலை அரசியலில் முடங்கிக் கிடக்கும். முஸ்லிம் அணிகளும் சுயேச்சை குழுக்களும் களமிறக்கப்படப் போகின்றன. முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளை விட என்.பி.பிக்கு ஏற்பட்டிருக்கின்ற அலையை எதிர்கொள்வது இன்னும் சிக்கலாக இருக்கும்.
ஆனால், வெற்றியோ தோல்வியோ தாமே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸின் முன்னாள் எம்.பிக்கள் கருதுகின்றனர். மாகாண சபை உறுப்பினர்களும் உரிமையும் அதனைக் கேட்கின்றனர். மக்கள் காங்கிரஸ் கட்சியிலும் இதே நிலைமை உள்ளது.
ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் இத்தேர்தல் மிகச் சவாலானதே. ஆனால், அதாவுல்லா இதனைப் பெரியதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போன்ற ஏனைய சிறு கட்சிகள், அணிகள் பெரியதொரு போட்டியைக் கொடுக்கப் போவதில்லை. பிரதான முஸ்லிம் கட்சியான முஸ்லிம் காங்கிரஸில் இந்த முறையும் இடம் தர வேண்டும் என கூறுகின்றனர்.
முன்னாள் எம்.பிக்களான பலர் இருக்கின்றார். சிலர் தமக்கு வாய்ப்பளிக்காவிட்டாலும் தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அல்லது தான் சிபாரிசு செய்பவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
தலைவர் றவூப் ஹக்கீமே அம்பாறை மாவட்டத்தில் வந்து போட்டியிடப் போவதாகவும் கதைகள் உலா வருகின்றன. இது உண்மையென்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். ஒரு கட்சியின் தலைவர் தனது மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறாமல், இன்னுமொரு மாவட்டத்திற்குச் சென்று ஆசனத்தை நிரப்புவதைத் தவித்துக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, மக்கள் காங்கிரஸின் முன்னாள் எம்.பிக்கள் தலைவர் றிசாட் பதியுதீனோடு இல்லை என்பதை நாடறியும். றிசாட் என்ற தனி நபரின் முயற்சிகள் தான் அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பிரதான காரணம் எனலாம்.
ஆயினும், அண்மைக் காலமாக றிசாட் எடுக்கும் முடிவுகள், அவர் கட்சியில் இணைத்துக் கொள்ளும் ஆட்கள் குறித்த பல விமர்சனங்கள் இருக்கின்றன.
என்.பி.பியில் போட்டியிடுவதற்குக் கூட முஸ்லிம் பிரதேசங்களில் பலத்த போட்டியுள்ளது. ஆயினும், ஒவ்வொரு நபரினதும் கடந்தகால வரலாறு, மக்கள் ஆதரவு, பின்னணி பற்றி ஆராய்ந்தே இறுதி முடிவு எடுக்கப்படும். அவர்களின் வெற்றியும் நிச்சயிக்கப்பட்டதல்ல.
முஸ்லிம் கட்சிகளின் அரசியலால் வடக்கு, கிழக்கின் முஸ்லிம் சமூகம் மனம் வெறுத்துப் போய் இருக்கின்றது என்பதென்னவோ உண்மைதான்.
ஆனாலும், பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், தமது பிரதேசத்தில் போட்டியிடும் அரசியல்வாதிகளுள் சிறந்த ஒருவரையே மக்கள் ஆதரிப்பார்களே தவிர, எடுத்த எடுப்பில் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது.
அந்த வகையில், பிரதான இரு காங்கிரஸ்களிலும் வேட்பாளர் ஆசனம் கேட்டு பலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு நிரந்தரமாகக் காணப்படுகின்ற வாக்கு வங்கியை வித்தியாசமான பிரசாரத்தின் ஊடாக கைப்பற்றலாம் என்று பலர் எண்ணுகின்றார்கள். பழைய மு.கா. எம்.பிக்கள் செய்யாததை தாம் செய்து காட்டுவோம் என்று கூறுகின்றார்கள்.
மக்கள் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு ஒப்பீட்டளவில் இலகுவாக வாய்ப்புக் கிடைக்கலாம் என்பதாலும் தேர்தல் செலவுகளை றிசாட்டும் கொஞ்சம் ஈடு செய்வார் என்பதாலும், தலைவர் றிசாட்டுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரரவப் பயன்படுத்தியும் மக்களுக்கு வெகுமதிகளை வழங்கியும் வெற்றி பெறலாம் என்றும் கனவு வேட்பாளர்கள் பலர் கருதுகின்றனர்.
எனவே, பெரும்பான்மைக் கட்சி ஒன்றுடன் இணைந்து போட்டியிட்டால் குறைந்தளவான வேட்பாளர்களை முஸ்லிம் கட்சிகள் சார்பில் நிறுத்த முடியும். எனவே, வேட்பாளர் பட்டியலில் இடமில்லை என கூறி, சிக்கலான சிலரை ஒதுக்கிவிடுவதா? அல்லது, தனியே போட்டியிடுவதன் ஊடாக எல்லாருக்கும் வாய்ப்பளிப்பதா, என்று தான் ஹக்கீமும் றிசாட்டும் அதிகமாகச் சிந்திப்பதாகத் தெரிகின்றது.
ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸிலும் மக்கள் காங்கிரஸிலும் ஆசனம் கேட்டு அலைகின்ற பலர் எதிர்காலத்தில் எப்படிச் செயற்படுவார்கள் என்பது தொடர்பில் அக்கட்சித் தலைவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு அச்சம் இருக்கின்றது.
தமது மூக்கணாங்கயிற்றுக்குக் கட்டுப்படுவார்களா என்றும் இவர்களால் கட்சி இன்னும் நாசமாகிவிடுமா என்றும் எண்ணலாம்.
பழைய முகங்களை மீண்டும் போட்டியிட வைத்து விசப் பரீட்சை ஒன்றை நடத்தவும் முடியாது. அதற்காக புதியவர்களை முற்றுமுழுதாக நம்பி பழையவர்களைக் கழற்றி விடவும் முடியாது என்ற திரிசங்கு நிலை ஏற்பட்டுள்ளதால், 13ஆம் திகதி நள்ளிரவு வரைக்கும் இறுதி முடிவுகள் எடுக்கப்படாது என்றே கருத முடிகின்றது.
மக்களுக்கு எதுவுமே செய்யாதிருந்த முஸ்லிம் எம்.பிக்கள், அல்லது பெரிய வீராப்பு பேசி அதன்மூலம் புதிதாக எம்.பியாக தெரிவு செய்யப்பட்ட உடனேயே குத்துக்கரணம் அடித்த அரசியல்வாதிகள் போன்ற வகையறாக்களை முஸ்லிம் சமூக அரசியல் வேண்டி நிற்கவில்லை.
உண்மையாகச் சொல்லப் போனால், ‘இவர்தான் அடுத்த முஸ்லிம் தலைவராக, எங்களது மாவட்டத்தின் எம்.பியாக வர வேண்டும்’ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு எந்த ஒரு நபரையும் தற்போதைய முஸ்லிம் களத்தில் காணக் கிடைக்கவில்லை.
எல்லோரும் கள்வர்கள் என்ற எண்ணம்தான் இன்றும் மக்களிடையே இருக்கின்றது. எனவே, இது குறித்து கட்சித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். மூடிய அறைகளுக்குள் தூக்கக் கலக்கத்தில் இரவிரவாக கலந்துரையாடி பயன் இல்லை. நேரடியாக மக்களிடம் பேச வேண்டும். சிறந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டும். சமகாலத்தில் முஸ்லிம் மக்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் அவர் ஒரு பொருத்தமான மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும்.
சமூகத்திற்கான அரசியலைச் செய்யத் திராணி உள்ளவராக இருக்க வேண்டுமே தவிர, எமது ஊருக்கு எம்.பி. வேண்டும் என்றோ, அவர் அரிசிப் பொதிகளையும். ஐயாயிரம் ரூபாய் தாள்களையும் தருவார் என்று எண்ணிச் செயற்பட முடியாது.
ஜனாதிபதி பதவியில் மாற்றம் ஏற்பட்டால் மட்டும் போதாது. முஸ்லிம் அரசியலும் மாற வேண்டும் வேண்டும்.
எனவே, சமூகம் சார்ந்த நோக்கத்தில் அன்றி, வேறு எந்த மறைமுக காரணங்களுக்காகவும் முஸ்லிம் தலைவர்கள் தமது கட்சிகளில் எந்த ஒரு நபருக்கும் வேட்பாளராக இடமளிக்கக் கூடாது.
10.08.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago