2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்கள் முன்னுள்ள இரு விதமான சவால்கள்

Mayu   / 2024 நவம்பர் 23 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

நாட்டின் அரசியல் கலாசாரத்திலும், அதற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் முன்னரை விட அதிகமாக அனைத்து மக்களுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கின்றமை வெளிப்படையானது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் கடந்தகால செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் வெறுத்துப் போயுள்ளர். சமூகத்திற்கு உதவாத இந்த அரசியல் ஒழுங்கை மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்குள் முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இதனைச் சற்று புரிந்து கொண்ட முஸ்லிம் கட்சிகளும், பெருந்தேசியக் கட்சிகளும் முஸ்லிம் பிரதேசங்களில் வழக்கமான அரசியல்வாதிகளையே மீண்டும் வேட்பாளராகப் போடுவது குறித்து மீள் பரிசீலனை செய்திருக்கின்றன.

சில இடங்களில் (எச்.எம்.எம்.ஹரீஸ் போன்ற) சில அரசியல்வாதிகளுக்கு  ‘வெட்டு விழுந்திருக்கின்றது. சில இடங்களில் கொஞ்சம் புதுமுகங்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன
ஆனால், முஸ்லிம் கட்சிகளின் ஊடாக நேரடியாகவோ அல்லது ஏனைய கட்சிகளின் ஊடாகவோ களமிறக்கப்பட்டிருக்கின்ற எல்லா முஸ்லிம் வேட்பாளர்களும் சமூகத்திற்குப் பொருத்தமானவர்கள் என்று சான்று பகர முடியாது.

எந்த அரசியலை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்களோ அதே குட்டையில் ஊறிய பல அரசியல்வாதிகள் இம்முறையும் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இதற்கு சில நியாயங்கள் இருக்கலாம்.

முஸ்லிம் பிரதேசங்களில் யாரை வேட்பாளராகப் போடுவது என்ற இழுபறி நீடித்த நிலையில், சில முஸ்லிம் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களில் மிக மோசமான வேட்பாளர்களைக் கூட களமிறக்கியுள்ளன.

மக்கள் தொடர்பில்லாத, தவறான பின்புலத்தைக் கொண்ட, பிரதேச ரீதியாக மக்களிடம் நல்லபிப்பிராயம் இல்லாதவர்களை அல்லது செல்வாக்கற்ற புதுமுகங்களை வேட்பாளர்களாக உள்வாங்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்படியான ஒரு சூழலில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. அதேநேரம் முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது பற்றிய வினாக்களும் தவிர்க்க முடியாத ஆசையாக இருக்கின்றன.

வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் என்பது வேறுபட்டது. புல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குச் சிங்கள மக்களும் வாக்களித்துத் தெரிவு செய்கின்றார்கள். 

சில பிரதேசங்களில் முஸ்லிம்கள், சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

வடக்கு, கிழக்கு கள நிலை வித்தியாசமானது. அந்த வகையில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் இந்த பொதுத் தேர்தலில் சில ஊர்களில் இருந்து 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். ஒருவர் கூட போட்டியிடாத பிரதேசம் என்று எதுவும் இல்லை என்றே கூறலாம்.

இந்த விபரங்களை வைத்து  நோக்கினால், முஸ்லிம் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், இதுவரை எம்.பியாக இருந்தவர்களைப் போல் அல்லாது, சமூக சிந்தை மிக்கவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கருதினால், பலர் தோற்கடிக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

இதனை முஸ்லிம் மக்கள் எந்தளவுக்குச் செய்வார்கள் எனத் தெரியாது. ஆனால், கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் ஒரு மாற்றத்திற்காகச் சற்றுத் துணிச்சலான முடிவை எடுத்து பொருத்தமற்ற பழைய மற்றும் புதுமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தால், இத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவடையும்.

இதேவேளை, இன்னுமொரு பிரச்சினையும் இருக்கின்றது. முஸ்லிம் பிரதேசங்களில் அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் வாக்குகள் மிகத் தெளிவாக பிரிவடையப் போகின்றன.
 ‘குரங்குகள் அப்பத்தைப் பிரித்துப் பங்குபோட்ட கதை’ போல, இந்த வாக்குகள் பிரிக்கப்படுவதால் யாருக்கும் பயனற்றுப் போவதற்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு, கிழக்கிலோ அதற்கு வெளியிலோ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு ஊரில் உள்ள அனைத்து மக்களும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களித்தால் அவரை வெற்றிபெறச் செய்யக்கூடிய சாத்தியம் ஓரிரு ஊர்களுக்கு மாத்திரம்தான் உள்ளது. அந்த ஊரிலும் பல கட்சிகளில் பலர் போட்டியிடுகின்றனர்.

எனவே, இவ்விரு அடிப்படைகளிலும் பார்த்தால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகத் தெரிகின்றது. மாவட்டத்தில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெறும் கட்சிகளில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளோடு எம்.பியாகும் அதிர்ஷ்டத்தையும் பெறக் கூடும்.

முஸ்லிம் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஒருபுறமிருக்க, தமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற குரல்கள் வழக்கம்போல இப்போது மேலெழத் தொடங்கியுள்ளன.

இது அவசியமானது என்பதை எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது. இரண்டாவது சிறுபான்மைச் சமூகம் தனது பலத்தைக் காட்டுவதற்காகவும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் போதுமானளவு எம்.பிக்களை கொண்டிருப்பது முக்கியமானது.

இருப்பினும், எண்ணிக்கையை மட்டும் பாதுகாத்தால் அல்லது அதிகரித்தால் போதுமா? அந்த எம்.பிக்கள் சமூக நலனுக்காகச் செயற்படும் விடயத்தில் ‘தரமானவர்களாக’ இருக்க வேண்டிய அவசியமில்லையா என்ற தர்க்கவியல் வினாவுக்கு விடையென்ன?

கடந்த பல பாராளுமன்றங்களில் 15, 20 முஸ்லிம் எம்.பிக்கள் பதவி வகித்தனர். இது வெளிப்படையாக ஒரு பெரும் பலமாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பல அநியாயங்கள் இழைக்கப்பட்டன. இனவாத நெருக்கடிகள், கருத்தியல் போர்கள் மூட்டிவிடப்பட்டன.

இந்தக் காலப்பகுதியில் இந்த இருபது பேரும் கூட்டுப் பலத்தை வெளிப்படுத்திய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும்.

அநேக சந்தர்ப்பங்களில் பலர் ஆட்சியாளர்களுடன் உறவு கொண்டாடினர், சிலர் வாய்மூடி மௌனியாக இருந்தனர் என்பதுதான் உண்மையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நெருக்கடிகள், கலவரங்கள் மற்றும் 20ஆவது திருத்தம் நிறைவேற்றம் தொடக்கம் ஜனாஸா எரிப்பு வரை பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் எம்.பிக்கள் எவ்விதம் செயற்பட்டார்கள் என்பதை சமூகம் இன்னும் மறந்து விடவில்லை.

ஆகவே, முஸ்லிம் எம்.பிக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது என்பது முக்கியம்தான். ஆனால், அவர்கள் தரமானவர்களாகவும் இருக்க வேண்டும். சமூகத்திற்காகச் சிந்தித்துச் செயற்படக் கூடிய நெஞ்சுரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

‘இருபது பேர் சும்மா இருப்பதை விட பத்து பேர் தரமானவர்களாக இருந்தாலும் பரவாயில்லை’ என்ற மக்கள் நினைப்பதற்குக் காரணம், கடந்தகால முஸ்லிம் எம்.பிக்களின், வாழாவிருந்து காலத்தைக் கடத்தும் ஏமாற்று அரசிலே அன்றி வேறொன்றுமில்லை.

ஆகவே, முஸ்லிம் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்து, தரமான எம்.பிக்களைத் தெரிவு செய்வதற்கு சமாந்திரமாக அச் சமூகத்தின் பாராளுமன்றபிரதிநிதித்துவமும் காப்பாற்றப்படுவது அவசியமாக இருந்தது.

ஆனால், அது பெருமளவுக்கு சாத்தியமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். முஸ்லிம் வேட்பாளர்கள் என்ற அடைமொழியோடு பழைய முகங்களும், புதுமுகங்கள் என்ற கோதாவில் கொஞ்சம்கூட பொருத்தமற்ற, மக்கள் செல்வாக்கற்றவர்களும் களமிறக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி முஸ்லிம் பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அதாவது, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் எண்ணிக்கை அடிப்படையில் காப்பாற்றி இந்த அரசியல் போக்கிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திட்டம், வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் சரியாகத் தயாரிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

ஆகவே, சுமார் 20 இற்கு குறையாத எம்.பிக்களை பெறுவதும் அவர்கள் முஸ்லிம் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கக் கூடியவர்களாக இருப்பதும் அவ்வளவு எளிதில் சமாந்திரமாக நடந்துவிடக் கூடிய இரு காரியங்களாகத் தெரியவில்லை.

இவற்றுள் ஏதாவது ஒன்றுதான் சாத்தியப்படும் என்று வருகின்ற போது, முஸ்லிம்களுக்கு ஒரேயொரு மாற்றுத் தீர்வு உள்ளது.

அதாவது, முஸ்லிம் சமூகம் தமது பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி தெரிவாகும் எம்.பிக்களின் எண்ணிக்கையில் மட்டுமன்றி தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதன்படி, களமிறங்கியுள்ள வேட்பாளர்களை பழையவர்கள், புதியவர்கள் என்று பார்க்காமல், உண்மையில் யார் இந்த சமூகத்திற்குப் பொருத்தமானவர்கள் தரமானவர்கள் என ஆராய்ந்தறிந்து அவ்வாறானவர்களை அதிகமாகத் தெரிவு செய்வதன் ஊடாக, மேற்சொன்ன இரு இலக்குகளையும் ஓரளவுக்கேனும் அடையலாம்.

10.15.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .