Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
அரசியல் என்பது உண்மையில் யாருக்கானது? என்ற மயக்கமான ஒரு கேள்வி நமக்கு எப்போதும் இருந்து வருகின்றது.
ஆட்சியும் அதிகாரமும் இறைமையும் ஜனநாயகமும் ‘மக்களுக்கானவை’ என்று எழுத்தில் இருந்தாலும், நிஜத்தில் அதன் பலாபலன்கள் முழுவதும் மக்களைச் சென்றடைவதில்லை என்பதுதான், நம்மக்களது நெடுங்கால அனுபவமாக இருக்கின்றது.
இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகளின் அரசியல் என்பது, அரசியல்வாதிகளின் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் நடந்து கொண்டிருக்கின்றது. பெரிய கட்சிகளும் தேசிய அரசியல் தலைவர்களும் தமது அதிகார வேட்கைக்காக, மக்களைப் பலிக்கடாவாக்கி உள்ளனர்.
இதற்கிடையில், வெளிநாட்டுச் சக்திகள், சர்வதேச அழுத்தக் குழுக்கள், உள்நாட்டு கலகக்காரர்கள் எல்லோரும் குழம்பிய குட்டையில் அல்லது, குட்டையை குழப்பிவிட்டு மீன்பிடிக்க ஆசைப்படுகின்றனர் அல்லது, முயலுகின்றனர் என்பதே யதார்த்தமாகும்.
பிழையான ஆட்சியாளர்களைத் தெரிவு செய்கின்ற மக்களின் தலைவிதி, எவ்வாறு இருக்கும் என்பதை கோட்டாபய ஆட்சிக்காலத்தில், இலங்கையில் வாழ்கின்ற எல்லா மக்களும் அனுபவ ரீதியாகக் கண்டனர்.
அதுபோல, மக்கள் நலனை இரண்டாம் பட்சமாகக் கருதுகின்ற மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் போன்றோரைத் தெரிவு செய்கின்ற மற்றும், அவர்களைக் கண்மூடித்தனமாக தலையில் வைத்துக் கொண்டாடுகின்ற மக்கள் கூட்டம் மற்றும் இனக்குழுமம் ஆகியவை சந்திக்கும் இழப்புகளும் பின்னடைவுகளும் எவ்வாறு இருக்கும் என்பதற்கு, இலங்கை முஸ்லிம் சமூகம் நல்ல உதாரணமாகக் கொள்ளப்படலாம்.
சுதந்திரத்துக்குப் பின்னர், முஸ்லிம் அரசியல் ஒரு மிதமான போக்கில் நகர்ந்து சென்றது. 80களின் பிற்பகுதியில் இருந்து, கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, முஸ்லிம் இனத்துவ அடையாள அரசியல் பெருவளர்ச்சி பெற்றது. 1990களின் நடுப்பகுதியில் அது உச்சத்தில் இருந்தது.
2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், முஸ்லிம்களுக்கான அரசியலில் வீழ்ச்சியும் தேக்கநிலையும் வெகுவாக உணரப்படுகின்றது. அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், எம்.பிக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், அவர்களால் சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை.
இத்தனைக்கும் கடந்த இருபது வருடங்களாக, பெரும்பாலான முஸ்லிம் கட்சிகளும் எம்.பிக்களும், அதிகாரத்துக்கு வரும் அரசாங்கங்களில் நேரடியாக ஓர் அங்கமாக இருந்து வருகின்றனர். ஏனையவர்கள், மறைமுகமாக அக்கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றனர்.
இந்தப் போக்கின் காரணமாக, அரசியல்வாதிகள் வளர்ந்திருக்கின்றார்கள்; பலன்பெற்று இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் பலம்பெறவும் இல்லை; பலம் பெறவும் இல்லை. இதனால் தமது பிரச்சினைகள், அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கும் தமக்காகக் குரல் கொடுப்பதற்கும் யாருமற்ற ஒரு மக்கள் கூட்டமாகவே முஸ்லிம்கள் ஆகியிருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களுக்கும் பொதுப்படையான பல பிரச்சினைகள் உள்ளன. சில அபிலாஷைகள் வேறுபட்டவை; அவற்றுள், சமூகத்தின் நீண்டகால பிரச்சினைகளும் அவ்வப்போது உருவெடுக்கின்ற நெருக்கடிகளும் அடங்குகின்றன.
இருப்பினும், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் இப்பிரச்சினைகள் பற்றிய சரியான புரிதலோ, முழுமையான ஆவணங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் புரிதலுடன் ஆவண ரீதியாக, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அவர்கள் முன்வைத்துப் பேசியதாக ஞாபகத்திலும் இல்லை.
எனவேதான், முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினைக்கும், துரித தீர்வைக் காண முடியாதுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தப் பலவீனமானது, அரசாங்கமும் ஏனைய தரப்புகளும் தொடர்ந்து, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதத்திலான நகர்வுகளைச் செய்வதற்கான தைரியத்தை கொடுத்திருக்கின்றது.
முஸ்லிம்களின் அடையாளத்தை பறிக்கின்ற கைங்கரியங்கள் நீண்டகாலமாகவே இடம்பெற்று வருகின்றன. கடந்த 10 வருடங்களுக்குள் ஹலால் சான்றிதழில் கைவைத்தமை, அடக்குமுறைப் பருவகாலத்தின் தொடக்கமாக கொள்ளப்படலாம். அதன் பிறகு ‘ஹபாயா’ ஆடை அணிவது மிகப் பெரும் சட்ட விரோத நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
முஸ்லிம்கள் மீதான இனவாதம், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பவங்கள் ஒருபுறமிருக்க, முஸ்லிம்களின் வர்த்தகமும் மிகச் சூட்சுமமான முறையில் சிதைக்கப்பட்டது. கருத்தடை மாத்திரைகள், கருத்தடை கொத்து, கருத்தடை உள்ளாடைக் கதைகள் எல்லாம், இனவாதப் பிரசாரங்கள் என்றாலும் மறுபுறத்தில் அவற்றின் நோக்கம், முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக வீழ்த்துவதாகவும் இருந்தது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் தாக்குதலின் பின்னர், நிலைமை இன்னும் மோசமாகியது. முஸ்லிம்களின் இருப்பே பெரும் அச்சத்துக்கு உள்ளானது. பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில், ‘பெரிய அரசியல்’ இருக்கின்றது என்று வெளிப்படையாகவே பேசப்பட்டது. இப்போது இந்த வழக்கே கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ளது. ஆனால், இக்காலப் பகுதியில் அப்பாவி முஸ்லிம்கள் இழந்தவை இழந்தவைதான்.
2021 இல் ஏற்பட்ட கூட்டிணைந்த மக்கள் எழுச்சியும் ராஜபக்ஷர்களின் வீழ்ச்சிக்குப் பின்னரான ஆட்சி மாற்றமும் ஏதோ நல்லகாலம் பிறந்தது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் பின்னணயில், இன, மத ஒடுக்குமுறை இனிமேலும் தொடராது என்ற நம்பிக்கை சிறுபான்மை இனங்களுக்கு இருந்தது.
ஆனால், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களை இல்லாதொழிக்கும் நகர்வுகள், வேறு வேறு தோரணைகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர்களும் அவர்களது அரசியல்வாதிகளும் அதற்கு எதிராக பேசுகின்றார்கள்; போராடுகின்றார்கள்.
ஆனால், முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றது? உதாரணமாக, திருகோணமலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியையை மையமாகக் கொண்ட ‘ஹபாயா’ ஆடை விவகாரத்துக்கு இன்னும் நீதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இதற்கிடையில், அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி, முஸ்லிம் சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு இனிமேல் நீளமான ‘ஹபாயா’ அணிந்து நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது.
இது சட்டப்படியானது என்பதில் இரு கருத்துகள் இல்லை. ஆனால், ஓர் இனக் குழுமத்தின் அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகள், எங்கே போய் முடியப் போகின்றன என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.
வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிராக, தமிழ்ச் சமூகம் போராடி வருகின்றது. காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வெடுக்குநாறி விவகாரம் இன்று தேசிய முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருக்கின்றது. அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.
ஆனால், இழப்புகளைச் சகித்துக் கொண்டு அல்லது பொறுத்துக் கொண்டு முஸ்லிம்கள் சும்மா இருக்கின்றனர். ஓரிரு அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் மட்டுமே தொடர்ந்து முஸ்லிம்களின் உரிமைக்காகப் போராடி வருகின்றனர்.
அதைவிடுத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளோ சமூகமோ போராடுவதற்கும் பேசுவதற்கும் தயாரில்லை என்றால், இனியும் இழப்பதற்கு தயார்நிலையில் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகள் பற்றிய பிரச்சினை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், எல்லை மீள் நிர்ணயத்தால் குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள், முஸ்லிம் சமூகத்தின் இன, மத அடையாளங்கள் மீதான வன்மம் என எல்லாவற்றுக்குமாக குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
வெறுமனே, உழைத்தோம், உண்டோம், சொத்துச் சேகரித்தோம், மனதுக்குப் பிடித்த மக்கள் பிரதிநிதிக்கு வாக்களித்தோம், இழப்புகளை சகித்துக் கொண்டோம் என்று முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
மறுபுறத்தில், மக்களுக்கான அரசியலைச் செய்வது போன்று பாசாங்கு காட்டிக் கொண்டு, தமது சொந்த இருப்பையும் பதவியையும் செல்வத்தையும் ஈட்டிக் கொள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எம்.பிக்களும் குறியாக இருக்கின்றனர்.
இவ்விரண்டு போக்குகளும் மாற வேண்டும்.
இல்லாதவிடத்து, முஸ்லிம் சமூகத்தின் இழப்புகளும் பிரச்சினைகளும் இனிமேலும் அதிகரிக்குமே தவிர, பிரச்சினைகள், நெருக்கடிகள் குறையும் என்று யாரும் கனவுகூட காணத் தேவையில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
24 Nov 2024
24 Nov 2024