Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
முயற்சியுடையவர்களுக்கே முன்னேற்றம் ; என்ற யதார்த்தத்துக்கு அமைய தமிழ் நாட்டில் இன்று முன்னிலை தொழில் அதிபராக விளங்குபவர் வி ஜி பி குழுமத்தின் தலைவர் வி.ஜி சந்தோசம்.
வி.ஜி.சந்தோசம் பரம்பரை பணக்காரர் இல்லை. மாறாக, கிராமம் ஒன்றில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்து, சாதித்து காட்டியவர்.
அத்துடன் தொழில் அதிபராக மாத்திரம் இல்லாமல் அவர் சமூக சேவைகளிலும் ஈடுபாடு கொண்டவர். அதிலும் இலங்கைக்கும் பல சமூக சேவைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கைக்கு அவர் பல திருவள்ளுவர் சிலைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.
அவரை நேர்காண்பதற்காக சென்னையில் உள்ள அவரின் அலுவலகத்துக்கு சென்ற போது, அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி, அவரின், அவரது நிறுவனத்தின்; சாதனைகளை ஒப்புவிக்கும் பல விருதுகளை காணமுடிந்தது.
இந்தநிலையில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் எம்முடன் தமது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
'திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர் அழகப்பபுரம் என்ற குக்கிராமமே எனது பிறப்பிடம். எங்கள் ஊரில் மொத்தமே 35 வீடுகள்தான் இருந்தன.
எனது அருமை அப்பா நான் பிறந்த 16 மாதங்களில் மலேசியாவுக்கு பிழைக்கப்போய் விட்டார்
அப்போது 2ஆம் உலகப்போர் காரணமாக 16 வருடங்களாக இந்தியாவுக்கு திரும்பமுடியவில்லை.
அத்துடன் அப்பா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து விட்டார்.
அப்போது எங்களின் தாய் சந்தனத்தாயுடன் அண்ணாச்சி பன்னீர்தாஸ், அக்கா மரியம்மாள் ஆகியோருடன் நானும் அந்த வீட்டில் இருந்தோம்.
எனது தாயாரான சந்தனத்தாயே முழு குடும்பத்தையும் வழிநடத்தினார்.
நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்பதே எனது தாயின் உழைப்புக்கான அப்போதைய ஊதியம்.
காலப்போக்கில் வறுமை காரணமாக எனது தாயும், அண்ணன் பன்னீர்தாஸூம்; நானும் பிழைப்பதற்காக சென்னைக்கு வந்தோம்.
வரும்போது எங்களுக்கு ஊரில் எங்களுக்கு கடன் இருந்தது.
எனவே அந்த கடனை தீர்ப்பதற்காக எங்களது சிறிய வீட்டை 500 ரூபாய்க்கு விற்றோம். அதில் 300 ரூபாய் கடனை தீர்த்து விட்டு மிகுதி 200 ரூபாயுடன் சென்னைக்கு வந்தோம்.
சென்னையில் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டோம்.
சென்னைக்கு நான் வந்த அடுத்தே நாள் எமது அப்பா மலேசியாவில் இருந்து நாடு திரும்பினார்.
இதனையடுத்து சென்னை மாம்பலத்தில் 16 ரூபாய் மாத வாடகைக்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தோம்.
நான் நான்காம் வகுப்பு வரையிலேயே படித்தேன். அண்ணாச்சியும் பெரிதாக படிக்கவில்லை.
நான் படிக்கவேண்டும் என்று விரும்பினாலும், ஏதாவது தொழில் செய்யுமாறு அப்பா சொல்லிவிட்டார்.
இதனையடுத்து சைதாப்பேட்டையில் 574 ரூபாய்க்கு தேனீர்கடை ஒன்றை ஆரம்பித்தோம்
நான் தேனீர் ஊற்றும் தொழிலிலும் ஈடுபட்டேன்.
அம்மா, அண்ணி எல்லோரும் ஏனைய தின்பண்டங்களை தயாரிப்பார்கள்.
அத்துடன் வீடு வீடாக செய்தித்தாள்களை விநியோகிக்கும் பணிகளிலும் நான் ஈடுபட்டேன்.
இதற்காக மாதம் 13 ரூபாய் எனக்கு கிடைக்கும். அதில் வீட்டு வாடகை 8 ரூபாய், அம்மாவிடம் 3 ரூபாயைக் கொடுப்பேன்.
இரவில் தேனீர் கடையின் மேசையிலேயே தூங்கி விடுவேன்.
அன்று வியாபாரத்தில் பல கிலோமீற்றர் தூரங்களுக்கு சென்று வந்த அந்த துவிசக்கர வண்டியை இன்னமும் நினைவுச்சின்னமாக பாதுகாத்து வைத்துள்ளேன்.
அண்ணாச்சி பன்னீர்தாஸ் வாழ்க்கையில் தூரநோக்கம் கொண்டவர்.
வியாபாரத்தில் மாத்திரம் அல்ல. வாழ்க்கையிலும் எனது அண்ணனுக்கே எனது முதல் மரியாதை. அண்ணன்( அண்ணாச்சி) எதனைச் சொன்னாலும் அதனை மறுப்பில்லாமல் நிறைவேற்றுவதே எனது பணியாக இருந்தது.
அண்ணாச்சி சொன்னது எதனையும் நான் தட்டமாட்டேன்.
இந்தநிலையில் முதல் இல்லாமல் வியாபாரம் செய்யலாம் என்பதற்கு அமைய சீட்டுப்பிடித்தல் முறையை கையாண்டோம்.
ஆனால் அது லொத்தர் முறை என்று கூறி அரசாங்கம் தடை செய்து விட்டது.
இதனையடுத்து தவணைத்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
அது சிறப்பாக இடம்பெற்றது. வியாபாரமும் வளர்ந்து வந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவுக்கு சென்று டிஸ்னிலேன்ட்டை பார்த்தோம்.
அதனைப் போன்ற திட்டத்தை தமிழ் நாட்டிலும் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினோம்.
எனினும் டிஸ்னிலேண்ட்டை தமிழ்நாட்டில் நிறுவமுடியாது என்று ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் தங்கக்கடற்கரையை சென்னையில் நிறுவினோம்.
இதற்காக சென்னையில் 106 ஏக்கர் காணியை ஒரு பெண் எங்களுக்கு தவணைக்கட்டண முறையில் தந்தார்.
அத்துடன் அமெரிக்காவில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் அதில் தங்கக்கடற்கரையை நிறுவினோம்.
இதனை தவிர வீடமைப்பு உட்பட்ட பல துறைகளில் எங்களது வர்த்தகம் வளர்ந்தது.
இதற்கு மத்தியில் மாநாடு ஒன்றில் நான் தமிழில் பேசியபோது அங்கு வந்தவர்கள், நான் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்த்தனர்
இதனை சவாலாக ஏற்று ஓரு வருடத்துக்குள் நான் அதே மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசினேன்;.
இதன் பின்னர் தொழில் செய்தால் தொண்டு செய்யவேண்டும் என்ற அடிப்படையில் திருவள்ளுவர் சிலையை இலவசமாக வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்
இலங்கை உட்பட்ட பல்வேறு நாடுகளுக்கு இதுவரை 158 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன.
அம்மாதான் எங்களின் முன்னேற்றத்துக்கு காரணமானவர்
இந்தநிலையில் அவரை உலகம் முழுவதும் காட்டவேண்டும் என்ற அடிப்படையில் 65 நாட்கள் உலகத்தை சுற்றிக்காட்டினோம்.
இளைஞர்களை பொறுத்தவரையில் இன்று இந்தியாவில் அவர்கள் எதனை நினைத்தாலும் செய்யமுடியும்.
எனவே அவர்கள் கல்வி கற்று அதன் ஊடாக காரியங்களை சாதிக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் எல்லோரையும் சமமாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டமைக்கு, நாங்களும் ஏழ்மை நிலையில் இருந்தே இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என்பதே காரணமாகும்.
எனவே,அனைவரையும்; சமமாக மதிக்கவேண்டும் என்பது எனது கொள்கையாக கொண்டுள்ளேன் என்று தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago