2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

முன்கூட்டிய  தயாரிப்பு இல்லாத புதுடெல்லி சந்திப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ. நிக்ஸன்

ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால், கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. 

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைக் கட்சித் தலைமைக்குத் தெரியாமல்  சந்திப்பதில்லை. பாராளுமன்ற விவாதங்களில் ஒவ்வொரு விடயதானங்களிலும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உரையாற்றுவர். எல்லா விடயங்களையும் எல்லா உறுப்பினர்களும் தாம் நினைத்தபாட்டிற்குப் பேச முடியாது. தேர்தலில்கூட போட்டியிடும் உறுப்பினர்கள் கட்சியின் சின்னத்தை மாத்திரமே பிரசாரப்படுத்துவர்.ஆயுதப் போராட்டம் ஒன்றின் ஊடாக வளர்ச்சியடைந்த கட்சி என்ற கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஏனைய பிரதான சிங்களக் கட்சிகளைவிடவும் ஜே.வி.பியிடம் புனிதமடைகிறது. ஆனால், எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்ட அனுபவம் கொண்ட ஈழத்தமிழ்ச் சமூகத்தின் பழமைக் கட்சியான தமிழரசுக் கட்சியில் “கட்டுப்பாடு” ,“ஒழுக்கம்” என்ற முதன்மைப் பண்பு இருப்பதாகத் தெரியவில்லை. 

ஆயுதப் போராட்டம் நடத்திப் பின்னர் ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபடும் ரெலோ,  ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற இயக்கங்களிடமும் தத்தமது நோக்கங்களுக்குரிய ஒழுக்கத்தைக் காணவில்லை. மாறாகத் தனித்தனி அரசியல் ஈடுபாடும், இந்திய அரசின் சுழிவு நெளிவுகளுக்கு அமைவாக வியூகங்கள் மாத்திரமே விஞ்சிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் தத்தமது தலைமைக்குத் தெரியாமல் அல்லது தத்தமது கட்சிகளின் மத்தியக் குழுக் கூட்டங்களில் தீர்மானம் அல்லது குறைந்தபட்சம் உரையாடாமல் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைத் தனியாகச் சந்திப்பதற்குரிய காரண காரியம் என்ன?
“தமிழ்த் தேசியம்” என்பதைக் கருப் பொருளாகக் கொண்டு தனிநபர் முயற்சியுடன் சில புலம்பெயர் அமைப்புகளின் விருப்பங்கள் தேவைகளுக்கு ஏற்பச் செயற்பட்டு பிரபல்யம் அடைவது மாத்திரமே இங்கு முதன்மை நோக்கமாகிறது.

இதன் மூலம் தத்தமது செல்வாக்குகளை அதிகரித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றும் தனிப்பட்ட உத்தி என்ற வியூகங்களைத் தவிர ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை என்ற ஒட்டுமொத்த சிந்தனை எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
வெவ்வேறு கட்சிகளாக இயங்கினாலும் தமிழர் விவகாரத்தைக் கையாள பொதுப் பொறிமுறை ஒன்றை அமைத்து ஒருமித்த குரலில் செயற்பட வேண்டுமென இப்பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்ப் புத்திஜீவிகள் எனப் பலரும் ஒருமித்த குரலில் செயற்பட வேண்டுமென வலியுத்தியுமுள்ளனர்.
குறிப்பாக “வடக்கு கிழக்கு அரசியல் சிவில் புலம்பெயர் அமைப்பு” என்ற பெயரில் சென்ற வாரம் புதுடெல்லிக்குச் சென்ற குழு ஒன்று அங்கு பல சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளது.
இக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், க.வி.விக்னேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றனர்.

ஆகவே, சிறிதரன் இக்குழுவுடன் புதுடெல்லிக்குச் சென்றமை தமிழரசுக் கட்சியின் தலைமைக்குத் தெரிந்திருந்ததா? தமிழர்களின் விவகாரம் பற்றிப் பேசப் போகிறார் என்றால் கட்சியின் மத்தியக் குழுவில் அல்லது கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாடினாரா? அல்லது சிறிதரனைத்தான் இச்சந்திப்புக்கு அனுப்புவது என்று தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானம் எடுத்ததா?

அதேபோன்று விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் கூட்டணியின் பிரதிநிதிகளுடன் புதுடெல்லிக்குச் செல்வது பற்றிக் கலந்துரையாடினாரா? வேறு எவரிடமாவது ஆலோசனை பெற்றாரா?

 புதுடெல்லிக்குச் செல்வதற்கு முன்னர் சிறிதரனும் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய தமிழ்ப் பிரமுகர்கள் எவருடனும் கலந்துரையாடினரா? இக்குழுவில் சென்ற ஏனைய பிறநிதிகள்கூட இது பற்றிச் சிந்தித்தார்களா?

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை இரண்டு அரசுகளும் தத்தமது தேவைக்கு ஏற்ப 2009 இற்குப் பின்னர் அவ்வப்போது மிக இரகசியமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோர இவர்கள் யார் என்று புதுடெல்லி தன் மனதுக்குள் கிண்டலாகக் கேட்டிருக்கும் அல்லவா?  

ஆகவே, எண்பது வருட அரசியல் போராட்டத்திற்கான தீர்வு பற்றிய கூட்டுத் தயாரிப்புகள் எதுவுமே இல்லாமல் ஆங்காங்கே குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் மற்றும் வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாக அழைத்துக் கொண்டு புதுடெல்லிக்குச் சென்றமை நேர்மையான தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலா?

இந்த வருடம் ஜனவரி மாதம் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் புதுடெல்லிக்குச் சென்று ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான மாநாடு ஒன்றை நடத்தியிருந்தனர். அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் பேசப்பட்ட விடயங்கள் பற்றிய தொடர்ச்சி என்ன? வெறுமனே ஒரு மாநாட்டோடு மாத்திரம் அந்த நிகழ்ச்சி நின்று விட்டதா? அல்லது இந்த மாநாட்டின் தொடர்ச்சியாகத்தான் சென்றவாரம் புதுடெல்லியில் சிறிதரன் விக்னேஸ்வரன் குழுவினர் இந்திய அதிகாரிகளைச் சந்தித்தனரா?

மோடிக்குக் கடிதம் எழுதும்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சட்டத்தரணிகளான சுமந்திரன், கனகஈஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சு நடத்தியிருந்தனர்.

மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய சுமந்திரன், “மோடிக்குக் கடிதம்” எழுதும் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். புதிய விடயங்களைக் கடிதத்தில் புகுத்தினார். ஆனால், அந்தக் கடிதத்திற்கு இன்றுவரையும் கிடைத்த பதில் என்ன? அதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் வேலைத் திட்டம் என்ன?

2021 ஓகஸ்ட் மாதம் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் இரண்டு” என்று மாநாடு சென்னையில் இடம்பெற்றது. பழநெடுமாறன், காசி ஆனந்தன் மற்றும் தமிழகத்தின் பிரபல தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் பலரும் பங்குபற்றினர்.

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு கோரி மோடிக்குக் கடிதமும் அனுப்பியிருந்தனர்.
ஆகவே, இந்த மாநாட்டு முடிவின் தொடர்ச்சியாகவே புதுடெல்லியில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதா? அல்லது இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட தனித்தனி நிகழ்ச்சி நிரல்களா? ஆனால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சு என்பது ஒற்றை வார்த்தையில் உள்ளதே!

அதாவது 1958இல் இருந்து 2009 மே மாதம் வரையும் அதன் பின்னரான பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்புகள் போன்ற தொடர்ச்சிகளைப் பிரதானப்படுத்தி ‘இன அழிப்பு’ என்பதற்கான சர்வதேச விசாரணையை ஒற்றை வார்த்தையில் ஒரு மித்த குரலாக வற்புறுத்தினால் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் இயல்பாக வெளிப்படும்.
ஆகவே, “தமிழ்த்தேசியக் கோட்பாடு” என்பதை “சிதைப்பது” “திசை திருப்புவது” என்ற நச்சுத் திட்டங்கள் மாத்திரமே 2009 இற்குப் பின்னரான சூழலில் பல வடிவங்களில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றன.

இந்த நிலையில் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பைத் திருப்திப்படுத்தித் தமது புவிசார் அரசியல்  பொருளாதார நலன்களுக்கு ஏற்ப இந்திய மத்திய அரசு இயங்கி வருகிறது. தமிழர்களின் கூட்டுப் பொறுப்பற்ற அரசியல் செயற்பாடுகளை இந்தியா தமக்கேற்ற முறையில் நன்கு பயன்படுத்தியும் வருகின்றது.  

1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போதும் 2009 போரின் போதும் சிங்கள அரசியல் தலைவர்கள் இந்தியாவைத் தமக்கு ஏற்ற முறையில் கையாண்டனர். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின் நான்கு வருடங்களிலும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை ஈழுத் தமிழர் பக்கம் சென்றுவிடாமல் காய் நகர்த்துகின்றனர்.
தமிழ் நாட்டையும் புதுடெல்லியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பல அரசியல் வேலைகளில் மிலிந்த மொறகொட ஈடுபடுகிறார் என்பதைப் புதுடெல்லியில் சந்திப்பு நடத்திய பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேடிக்கை.

புரிந்திருந்தால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் பதின்மூன்றுக்கு ஏற்ப மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும் புதுடெல்லிச் சந்திப்புகளில் இவர்கள் கோரியிருக்க மாட்டார்கள்.

டில்லியில் நடந்த பல சந்திப்புகளிலும் பிரதமர் மோடியை அல்லது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க எவருக்குமே அனுமதி வழங்கப்படவில்லை.
ஆகவே, மூன்றாம் தரச் சந்திப்புகள்தான் (Third-Class Encounter) இவை. பா.ஜ.க. முகவர்கள் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதும் பகிரங்கமானது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X