Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 07 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஐயூப்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.
கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது, அதில் ஒரு முக்கிய அம்சமாகும். இப்போது உள்நாட்டில், பொதுஜன பெரமுன தவிர, ஏனைய சகல அரசியல் கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் மருத்துவ சங்கங்களும், சீனா தவிர்ந்த ஏனைய சகல நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் என, முழு உலகமுமே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்கிறது.
இந்த நிலையில், ஜனாஸா விடயத்தில் தனிமைப்பட்டு இருக்கும் அரசாங்கம், தமிழ் மக்களைச் சீண்டுவதற்காகவும் மாகாண சபை முறைமைக்கான தமது எதிர்ப்பை, இப்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது.
கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடும் போது, பொதுஜன பெரமுன அதைக் கடுமையாக எதிர்த்தது. தோல்வியடைவோம் என்று பயந்து, அத்தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்து வருவதாக, அப்போது பொதுஜன பெரமுன கூறி வந்தது.
2017ஆம் ஆண்டு, ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை, கலப்புத் தேர்தல் முறையில் நடத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தியது. அதனால், அன்று முதல் இன்று வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் இருக்கிறது. இதையும் பொதுஜன பெரமுன விமர்சித்திருந்தது.
ஆயினும், அதே பொதுஜன பெரமுனவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை, கால வரையறையின்றி ஒத்திப் போடுவதாக, எவ்வித வெட்கமுமின்றி முடிவு செய்துள்ளது. சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கடந்த வாரம் இதை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். கொவிட்- 19 நோய் பரவி வருவதன் காரணமாகவும் மகாசங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும், கட்சித் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுச் சமூகத்தில் உள்ளவர்களைப் போலவே, பிக்குகள் மத்தியிலும் ஒரு சாரார், கடும் இனவாதிகளாக இருக்கிறார்கள். அவர்களே, மாகாண சபைத் தேர்தலையும் மாகாண சபை முறைமையையும் எதிர்த்து வருகிறார்கள்.
அரசாங்கம் கொண்டு வருவதாகக் கூறும், புதிய அரசமைப்பை நிறைவேற்றும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது என்பதே அவர்களது வாதமாகும். ஆளும் கட்சியில் உள்ள இனவாதத்துக்குப் பெயர் போன சில அரசியல்வாதிகளே, இந்த வாதத்தை முதன் முதலாக முன்வைத்தனர். புதிய அரசமைப்பின் மூலம், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யலாம் என்ற நோக்கத்திலேயே, இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது.
எனினும், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் விடயத்திலும், அரசாங்கம் தனிமைப்பட்டே இருக்கிறது. ஆளும் கட்சிக்கு உள்ளேயே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும், இந்தக் கருத்தை விரும்பவில்லை.
மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வதானால், அதற்கு முன்னர் அரசாங்கம், இந்திய அரசாங்கத்தோடு அதைப் பற்றி, பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என, ஸ்ரீ ல.சு.க பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக, மாகாண சபைகள் உருவாக்கப்பட்டவை என்பதாலேயே அவர் அவ்வாறு கூறினார்.
ஸ்ரீ ல.சு.க தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தார். கடந்த வாரம், ‘த இந்து’ பத்திரிகையுடனான நேர்காணல் ஒன்றின் போது அவர், “மாகாண சபைகளை ஒழிப்பதானது, நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம்” எனக் கூறி இருந்தார். மாகாண சபைகளைத் தோற்றுவித்த, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்தால், இந்தியா அசௌகரியத்துக்கு உள்ளாகும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோஷம், எழுப்பப்பட்ட முதலாவது முறை இதுவல்ல. இது, சில வருடங்களுக்கு ஒரு முறை எழும் கோஷமாகும். இம்முறை, இதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தூண்டினார். ஜனாதிபதியாகப் பதவியேற்று, 10 நாள்களில் மேற்கொண்ட தமது இந்திய விஜயத்தின் போதே, அவர் இம்முறை இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று, 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கரும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை, முழுமையாக அமலாக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். அந்த நிலையில், இந்தியாவிலிருந்து கொண்டே இந்திய ஊடகங்களுடன் நடத்திய நேர்காணல்களின் போது, கோட்டாபய அதிகாரப் பரவலாக்கல் கொள்கையை எதிர்த்துக் கருத்து வெளியிட்டார்.
“எழுபது வருடங்களாகப் பலர் அதிகாரப் பரவலாக்கலைப் பற்றிப் பேசி வருவதாகவும், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக, எதையும் செய்ய முடியாது” என்று அவர், ‘த இந்து’ பத்திரிகைக்காகத் தம்மைச் சந்தித்த சுஹாசினி ஹைதரிடம் கூறினார். இது, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயற்பட, பெரும்பான்மை மக்களைத் தூண்டும் கருத்தாக அமைந்தது.
பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாகாண சபைகளை எதிர்க்கும் முன்னாள் கடற்படை அதிகாரியான சரத் வீரசேகரவுக்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கினார். இது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக நிறுவனங்களைத் தாக்கிய மேர்வின் சில்வாவுக்கு, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கிதற்குச் சமமாகும். வீரசேகரவும் அந்தப் பதவியை ஏற்றது முதல், மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்ற மந்திரத்தைத் தான் உச்சரிக்கிறார்.
எனினும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சகல அரசியல்வாதிகளும், மாகாண சபை முறைமையை ஒழிக்க விரும்புவார்கள் எனக் கூற முடியாது. ஏனெனில், தமது பிள்ளைகள், அரச செலவில் சுகபோகங்களை அனுபவிக்க வழிசெய்து கொண்டே, அரசியலில் கொள்ளையடிப்பது பற்றிய பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள, மாகாண சபைகள் ஒரு பாசறையாகும் என்பதை, பல அரசியல்வாதிகள் உணர்ந்துள்ளனர். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர், அந்தப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாவர்.
மாகாண சபைகளுக்கு எதிரான அபிப்பிராயம், பெரும்பான்மை மக்கள் மத்தியில் வளர்வதற்குத் தமிழ் அரசியல்வாதிகளும் வெகுவாகப் பங்களித்துள்ளனர். 1990ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி, அப்போதைய இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலாவதும் இறுதியானதுமான முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள், மாகாண சபையில் தமிழ் ஈழத்தை பிரகடனம் செய்வதற்கான காலக் கெடுவை விதித்தார். அது, சாதாரண சிங்கள மக்களை அச்சத்தில் மூழ்கடித்துவிட்டது.
தற்போது, காலாவதியாகி இருக்கும் வடமாகாண சபையின் தலைவர்களும், பெரும்பான்மை மக்களை அச்சுறுத்தும் பிரேரணைகளை நிறைவேற்றிக் கொண்டு இருந்தார்கள். இதைவிடுத்து, மாகாண சபைகள், பிரிந்து செல்வதற்கான படிக்கற்கள் அல்ல என்பதையும் மாறாக, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு கருவி என்பதையும், தென் பகுதி மக்களுக்கு முன்னுதாரணங்களுடன் உணர்த்த முயற்சி செய்திருந்தால், தென்பகுதி மக்கள் மத்தியில் இதைவிட ஓரளவாவது, அதிகாரப் பரவலாக்கல் முறைமைக்கு, ஆதரவைத் திரட்டியிருக்க முடியும்.
மாகாண சபைகள், கடந்த 33 ஆண்டுகளாகப் பயனற்ற நிறுவனங்களாக இருப்பதை மறுக்க முடியாது. அதிகாரம் போதாமை மட்டும் தான், அதற்குக் காரணம் அல்ல. அதேவேளை, மாகாண சபைகளால் நாடு பிரிந்து செல்லாது என்பதும், கடந்த 33 ஆண்டுகளாக உணர்த்தப்பட்டுள்ளன.
மாகாண சபைகள் விடயத்தில், அரசாங்கம் முடிவுகளை எடுக்கும் போது, இந்தியா என்ற காரணியைப் புறக்கணிக்க முடியாது. இந்தியா, எந்தளவுக்கு இந்த விடயத்தில் அக்கறை கொண்டுள்ளது என்பது தெளிவில்லை. வடக்கு- கிழக்கு இணைப்பை, 2017ஆம் ஆண்டு பகிரங்கமாகவே, இந்தியா கைவிட்டுவிட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரப் பரவலாக்கல் முறைமையை, இந்திய மண்ணில் இருந்தே நிராகரித்த போது, இந்தியா அதைப் பொருட்படுத்தவில்லை. எனினும், கொழும்புத் துறைமுகத்தில் கிழக்கு முனையம் பற்றிய சர்ச்சை, இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கம் போன்றவற்றைக் கையாள, சிலவேளை, இந்தியா, இலங்கைக்கு எதிராகப் பிரம்பொன்றைப் போல் இதைப் பாவிக்கக் கூடும். அது தமிழர்கள் பற்றிச் சிந்தித்துச் செய்வதல்ல; தமது தேசிய நலன்களைப் பற்றிச் சிந்தித்துச் செய்யக் கூடியதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago